Published : 13 Sep 2023 10:30 AM
Last Updated : 13 Sep 2023 10:30 AM

ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லறை பணவீக்கம் குறைந்தது: சிலிண்டர் விலை குறைப்பின் தாக்கம் என்ன?

புதுடெல்லி: நுகர்வோர் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் சற்றே குறைந்து 6.83 சதவீதமாக உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் சில்லறை பணவீக்கம் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.44 சதவீதமாக அதிகரித்த நிலையில் தற்போது சற்றே குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. ஆனால் உணவு விலை அதிகரிப்பு 10 சதவீதத்தை சுற்றியே நிலவுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் காய்கறி விலை அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலையில் காய்கறி விலைவாசி 37.4 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில் ஆகஸ்டில் அது 26.1 சதவீதமாகக் குறைந்திருந்தாலும் இதுவே நுகர்வோருக்கு அதிகம்தான். கடந்த மாதம் 11.5 சதவீதத்தில் இருந்த பருப்பு விலை ஆகஸ்டில் 13 சதவீதமாக அதிகரித்துள்ளது. காரிப் பருவத்தில் விதைத்தல் குறைந்ததால் இனி வரும் மாதங்களில் பருப்பு விலையேற்றம் இன்னும் அதிகரிக்கும். அதனால் சில்லறை பணவீக்கத்தில் தாக்கம் ஏற்படும் என்றே கருதப்படுகிறது.

காய்கறி விலையைப் பொருத்தவரை ஜூலையுடன் ஒப்பிடுகையில் 5.8 சதவீதம் விலை குறைந்திருப்பது ஆகஸ்ட் சில்லறை பணவீக்கம் சற்றே குறைய வழிவகுத்துள்ளது. அதேபோல் ஆடை, காலணிகள், வீடு உள்ளிட்ட பல்வேறு வகையிலும் பணவீக்கம் குறைந்தது சில்லறை பணவீக்கம் குறைய வழிவகுத்துள்ளது.

சிபிஐ (Consumer Price Index) எனப்படும் நுகர்வோர் விலைக் குறையீடு ரிசர்வ் வங்கியின் நிர்ணய வரம்பான 6 சதவீதத்தைக் கடக்கும்போது ரிசர்வ் வங்கி தலையிட்டு நிதிக் கொள்கைகளில் மாற்றம் செய்யும். ஆனால் திடீரென அதிகரித்த உணவுப் பொருட்கள் விலையாலேயே ஜூலை, ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்க மாறுபட்டதால் அதை ஆர்பிஐ பெரிதுபடுத்தாமல் மற்ற காரணிகளில் கவனம் செலுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

12 மாநிலங்களில் அதிகம்: ஆகஸ்ட் மாதத்துக்கான இந்தியாவின் சராசரி சில்லறை பணவீக்கமான 6.83 சதவீதத்தைக் கடந்து 12 மாநிலங்களில் அதிகமான சில்லறை பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளன. ராஜஸ்தானில் இது 8.6 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. டெல்லியில் தக்காளிக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக பணவீக்கம் 3 சதவீதமாக பதிவாகியுள்ளது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதால் செப்டம்பர் பணவீக்கத்தில் இது 0.2 சதவீதம் முதல் 0.25 சதவீதம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x