Published : 24 Dec 2017 10:42 AM
Last Updated : 24 Dec 2017 10:42 AM

நிதி மோசடிகளால் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ரூ.16,789 கோடி நஷ்டம்: மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் தகவல்

நிதி மோசடிகள் காரணமாக வர்த்தக வங்கிகள் மற்றும் குறிப்பிட்ட சில நிதி நிறுவனங்களுக்கு ரூ.16,789 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா தெரிவித்தார். 2016-17-ம் நிதி ஆண்டில் இந்த அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் மோசடிகளைக் கண்காணிக்கும் பிரிவு அளித்த அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சைபர் குற்றங்களால் வங்கிகளுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், சைபர் பாதுகாப்பு தொடர்பாக வங்கிகளில் ஒரு நிலைக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதை ஆர்பிஐ உருவாக்கியுள்ளது. இந்தக் குழுவில் வங்கி அதிகாரிகள், கல்வியாளர்கள், தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பாளர்கள், தணிக்கையாளர், தடயவியல் மற்றும் சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக்குழு அவ்வப்போது நடைபெறும் விஷயங்களை ஆராய்வதோடு இணையதளம் மூலமாக ஏற்படும் பாதிப்புகள், அச்சுறுத்தல்கள் உள்ளிட்டவை குறித்தும் விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.

இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக சுக்லா கூறினார்.

-ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x