Published : 27 Dec 2017 10:37 AM
Last Updated : 27 Dec 2017 10:37 AM

16 சதவீத வேலைவாய்ப்பு அதிகரிப்பு

நவம்பர் மாதத்தில் வேலைவாய்ப்பு 16 % அதிகரித்துள்ளது. இது தொடர்பான விவரங்களை வேலைவாய்ப்பு இணையதளமான நௌக்ரி டாட் காம் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், இந்த வேலைவாய்ப்பு வளர்ச்சி தகவல் தொழில்நுட்பத்துறை தவிர்த்த பிற துறைகளில் எட்டப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் 16 சதவீதம் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மாதங்களில் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும் என்றும் அறிக்கை கூறியுள்ளது.

நௌக்ரி வேலைவாய்ப்பு குறியீட்டில் நவம்பர் மாதத்தில் 2,133 ஆக உள்ளது. தற்போது வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும் அறிக்கை கூறியுள்ளது.

இது தொடர்பாக நௌக்ரி நிறுவனத்தின் முதன்மை விற்பனை அதிகாரி வி.சுரேஷ் கூறுகையில், கட்டுமானத் துறை, பொறியியல், ஆட்டோ, தொழில்துறை பொரு ட்கள் மற்றும் வங்கித் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த துறையின் ஆண்டு வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக உள்ளது என்றும் கூறினார். மேலும் வரும் காலாண்டுகளிலும் இந்த போக்கு இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த நவம்பர் மாதத்தில் தொழில்துறை ரீதியாக பார்க்கிறபோது கட்டுமானம் மற்றும் பொறியியல் துறையில் வேலைவாய்ப்பு 46 சதவீதமாக உள்ளது. ஆட்டோமொபைல் துறையில் 39 சதவீதமான உள்ளது. அதுபோல இயந்திர பொறியியல் மற்றும் வங்கித்துறை வேலைவாய்ப்பு 30 சதவீதமாகவும், 24 சதவீதமாகவும் உள்ளது.

இந்த ஆய்வுக்கு 8 மெட்ரோ நகரங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 7 நகரங்களில் வேலைவாய்ப்பு சதவீதம் உயர்ந்துள்ளது. சிறு நகரங்களிலும் வேலைவாய்ப்பு சதவீதம் அதிகரித்து வருகிறது.

இந்த குறியீட்டின்படி கொல்கத்தாவின் வேலைவாய்ப்பு விகிதம் 51 சதவீதமாக உள்ளது. புதுடெல்லி தலைநகர் பிராந்தியத்தில் 15 சதவீதமும், மும்பையில் 16 சதவீதமும் உள்ளது. மிகக் குறைந்த அளவில் பெங்ளூருவில் 3 சதவீத வளர்ச்சி உள்ளது. இந்த வேலைவாய்ப்புகள் முன் அனுபவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. குறிப்பாக ஆரம்ப வேலைகளுக்கு 0-3 ஆண்டுகளாகவும், அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அளவில் 16 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கான வேலைவாய்ப்பு 21 சதவீதமாகவும் உள்ளது.

மாதா மாதம் நவ்கிரி இணையதளத்தில் பதிவு செய்யப்படும் வேலைவாய்ப்பு பட்டியல்படி இந்த குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது. 2008-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த குறியீடு 1000 என்கிற அளவில் தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் புள்ளிவிவரங்கள் ஒப்பிடப்படுகின்றன. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x