Published : 28 Nov 2017 10:06 AM
Last Updated : 28 Nov 2017 10:06 AM

தொழில் தொடங்க எளிய விதிமுறைகள்

மேற்கு வங்க மாநிலத்தில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால் பல ஆண்டுக்காலம் மாநிலத்தில் ஆட்சிபுரிந்த கம்யூனிஸ்ட் கட்சியினரால் உருவாக்கப்பட்ட வழிமுறைகள் இன்னமும் நீடிக்கின்றன. இவை விரைவிலேயே நீக்கப்படும் என்று மம்தா பானர்ஜி உறுதிபட கூறினார்.

மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தப்பட்ட ஹொராசிஸ் ஆசியா மாநாட்டில் பேசுகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்தார். ஹொராசிஸ் என்பது பண்டைய கிரேக்கர் வழி வந்த வணிக சமூகமாகும். சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் இந்த சமூகத்தினர் முதல் முறையாக ஆசிய அளவிலான மாநாட்டை மேற்கு வங்க மாநிலத்தில் நடத்தினர். மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய மம்தா பானர்ஜி கூறியதாவது:

சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஹொராசிஸ் சமூகத்தினர் மேற்கு வங்கத்தை தொழில் மாநிலமாகத் தேர்வு செய்து இங்கு முதல் முறையாக மாநாடு நடத்துவதிலிருந்தே தொழில் தொடங்குவதில் எளிமையான நடைமுறைகள் உள்ள மாநிலமாக மேற்கு வங்கம் திகழ்கிறது என்பது கண்கூடு.

தொழில் தொடங்குவதில் உள்ள பிரச்சினைகள் பலவும் களையப்பட்டு பல மடங்கு முன்னேறியுள்ளது. இதனால் தொழில் தொடங்க எளிமையான நடைமுறைகள் உள்ள மாநிலங்கள் பட்டியலில் மேற்கு வங்கம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும் 34 ஆண்டுக் காலமாக இங்கு ஆட்சி புரிந்த கம்யூனிஸ்ட் கட்சியினரின் வழிவகைகள் இன்னமும் பல இடங்களில் தொடர்கின்றன.

மாநிலத்தில் கட்டமைப்பு வசதிகள் மேம்பட்டு வருவதை பானர்ஜி சுட்டிக்காட்டினார். அடுத்த ஆண்டு ஜனவரி 16 மற்றும் 17-ம் தேதிகளில் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள பெங்கால் சர்வதேச வணிக மாநாட்டில் பங்கேற்குமாறு தொழிலதிபர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மாநாட்டில் பிரேசில்-சீனா தொழில் வர்த்தக கூட்டமைப்பைச் சேர்ந்த சார்லஸ் டாங், மாநிலத்தில் கால்பந்து மேம்பாட்டு மையம் அமைக்க முன்வந்தார். அவரது வேண்டுகோளை உடனடியாக மம்தா பானர்ஜி ஏற்று சம்மதமும் அளித்தார். மேலும் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா நாடுகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட தொழில் துறையினர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். தொழில் தொடங்க புவிசார்ந்தும் மேற்கு வங்கம் மிகச் சிறந்த மாநிலமாகத் திகழ்வதாக பலரும் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x