Published : 23 Nov 2017 10:16 AM
Last Updated : 23 Nov 2017 10:16 AM

வருமான வரிச் சட்டங்களை ஆய்வு செய்ய குழு

வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்வதற்கும் புதிய சட்டங்களைக் கொண்டுவருவதற்கும் சிறப்பு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. 50 ஆண்டுகள் பழமையான வருமான வரிச் சட்டங்களைத் தற்போதைய பொருளாதார தேவைக்கு ஏற்ப மாற்றுவதற்காக இந்தக் குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது.

இந்தக் குழுவில் மொத்தம் 6 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய நேரடி வரி ஆணையத்தின் சட்ட உறுப்பினரான அர்பிந்த் மோடி இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் கீழ் பட்டய கணக்காளரான கிரிஷ் அகுஜா, எர்ன்ஸ்ட் யங் நிறுவனத்தின் ராஜிவ் மெமானி, மன்சி கேடியா உள்ளிட்ட ஐந்து பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாட்டில் அமல்படுத்தப்பட்டது. தற்போது வருமான வரிச் சட்டங்களை மறு ஆய்வு செய்ய குழுவை மத்திய அரசு அமைத்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற வருடாந்திர வரி அதிகாரிகள் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, ``1961-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வருமான வரிச்சட்டம் 50 ஆண்டுகளாக மறுவரைவு செய்யப்படவில்லை. அதை தற்போது மறுவரைவு செய்யப்பட வேண்டும்’’ என்று பேசினார். இதனைத் தொடர்ந்து தற்போது சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரிச் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதற்கும் புதிய நேரடி வரி சட்டத்துக்கான வரைவையும் தயார் செய்ய இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் தற்போதையை பொருளாதார தேவைகளை கணக்கில் கொண்டு இந்த வரைவு கொண்டுவரப்பட வேண்டும்.’’ என்று குறிப் பிட்டுள்ளது.

இந்த சிறப்பு குழு 6 மாதத்துக்குள் தங்களது அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். தலைமை பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்ரமணியன் இந்த சிறப்புக் குழுவின் நிரந்தர அழைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு நாடுகளில் வரி அமைப்பு முறை எப்படி இருக்கிறது, எந்த நாட்டில் சிறப்பான நேரடி வரிமுறை பின்பற்றப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு புதிய வரைவை தயார்செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறது.

2009-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வருமான வரிச் சட்டங்களை மாற்றுவதற்கு நேரடி வரி விதிமுறைமுறைகளை கொண்டுவந்தது. தனிநபர்கள் மற்றும் பெரு நிறுவனங்களுக்கு வரிச் சட்டங்களை எளிமையாக்க கொண்டுவந்தது. ஆனால் இந்த விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. அதன்பிறகு தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு புதிய வருமான வரி சட்ட வரைவை கொண்டுவர சிறப்புக் குழுவை அமைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தற்போதைய நிலவரப்படி, ஓர் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் பெறும் தனி நபர்களுக்கு வருமான வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x