Published : 15 Nov 2017 10:20 AM
Last Updated : 15 Nov 2017 10:20 AM

ஜாகுவார் எப் பேஸ் அறிமுகம்: உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதால்ரூ. 16 லட்சம் விலை குறைந்தது

ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதால் அதன் விற்பனை விலை முந்தைய விலையைக் காட்டிலும் ரூ. 16 லட்சம் குறைந்துள்ளது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் தயாரிப்பில் அனைவரும் விரும்பும் மாடலாக எஸ்யுவி பிரிவில் `ஜாகுவார் இ பேஸ்’ மாடல் திகழ்கிறது. 2018-ம் ஆண்டுக்கான இப்புதிய மாடல் புணேயில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு வெளி வருகிறது.

இங்கிலாந்தில் உள்ள லேண்ட் ரோவர் ஆலையில் தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டு, இங்கு விற்பனை செய்தபோது இருந்த விலையைக் காட்டிலும் தற்போது 16 லட்சம் ரூபாய் விலை குறைவாக உள்ளது. மும்பையில் இதன் விற்பனையக விலை ரூ.60.02 லட்சம் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரோஹித் சூரி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்த `மேக் இன் இந்தியா’ கொள்கைக்கு ஏற்ப இதை உள்நாட்டில் தயாரிக்கத் திட்டமிடப்பட்டு புணே ஆலையில் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. 2 லிட்டர் டீசல் என்ஜினை கொண்டதாகவும் 132 பிஎஸ் மற்றும் 4,000 ஆர்பிஎம் திறனுடன் 430 நியூட்டன் மீட்டர் சக்தியை வெளியிடக் கூடிய வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் 8.7 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 208 கிலோ மீட்டராகும்.

ஸ்போர்ட்ஸ் காருக்குரிய வடிவமைப்போடு மேம்பட்ட பல அம்சங்களை இது கொண்டுள்ளது. 5 பேர் சவுகர்யமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த எஸ்யுவி -யின் எல்இடி முகப்பு விளக்கு காண்போரைக் கவர்ந்திழுக்கும். வைஃபை ஹாட் ஸ்பாட் மற்றும் 10.2 அங்குல தொடு திரை, பொழுது போக்கு அம்சங்களுக்கு வசதியாக 380 வாட்ஸ் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், ஜிபிஎஸ் நேவிகேஷன் ஆகியன இதன் சிறப்பம்சங்களாகும். பின்புற இருக்கைகள் மடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நான்கு புற தட்ப வெப்ப கட்டுப்பாட்டு அமைப்பு, உள் விளக்கொளி ஆகியன பயணத்தை ரம்மியமாக்கும். மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களோடு வந்துள்ள ஜாகுவார் எப் பேஸ் இப்பிரிவில் வந்துள்ள பிற சொகுசு வாகனங்களான ஆடி க்யூ 5, பிஎம்டபிள்யூ எக்ஸ் 5, மெர்சிடஸ் ஜிஎல்இ, போர்ஷே மக்கான் ஆகிய மாடல் கார்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது. இப்போது முன்பதிவு தொடங்கியுள்ளது. இம்மாத இறுதியில் நாடு முழுவதும் உள்ள விற்பனையகம் மூலம் டெலிவரி செய்யப்படும் என்று ரோஹித் சூரி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x