Published : 18 Jul 2014 10:00 AM
Last Updated : 18 Jul 2014 10:00 AM

அரசு பங்குகளை விற்க ஓஎன்ஜிசி எதிர்ப்பு

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ஓஎன்ஜிசி) மத்திய அரசுக்குள்ள பங்குகளில் 5 சதவீதத்தை விற்பனை செய்வதற்கு அந்நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் அரசு பங்கு விலக்கல் நடவடிக்கையாக ஓஎன்ஜிசி-யின் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்து ரூ. 17,400 கோடி திரட்ட அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் எரிபொருள் மானியம் மற்றும் இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் உள்ளிட்ட முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்காமல் அரசு பங்கு விலக்கல் நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்று ஓஎன்ஜிசி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பெட்ரோலிய அமைச்சகத்துக்குக் கடிதமும் எழுதப்பட்டுள்ளது.

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 42.77 கோடி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இப்போதைய விலை நிலவரத்தின் அடிப்படையில் இவற்றின் மதிப்பு ரூ. 17,400 கோடியாகும். நரேந்திர மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் முதலாவது பங்கு விலக்கல் நடவடிக்கை இதுவாகும். இந்த வருமானத்தின் மூலம் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

இப்போதைய சூழ்நிலையில் அரசு பங்குகளை விற்பனை செய்வது உரிய நடவடிக்கையாக அமையாது; இதன் மூலம் உரிய விலை கிடைக்காது என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை மானிய விலையில் அளிப்பதால் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் ரூ. 44,466 கோடியும், 2013-14-ம் நிதி ஆண்டில் 56,384 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மானியத்தை பகிர்ந்து கொள்வது தொடர்பாக நிலையான கொள்கையை அரசு வகுக்க வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை 65 டாலர் விலையில் வாங்கும்போது அதற்குரிய விலை கிடைக்க வேண்டும். அப்போதுதான் போதுமான பணப் புழக்கம் இருக்கும். உள்நாட்டில் எண்ணெய் வயல் துரப்பணப் பணிகளை மேற்கொள்வது, வெளிநாடுகளில் எண்ணெய் வயல்களைக் கையகப்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள முடியும் என்று ஓஎன்ஜிசி தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

மானியத்தை பகிர்ந்து கொள்வதில் தற்போது பின்பற்றப் படும் நடைமுறைகளின் மீது ஓஎன்ஜிசி இயக்குநர்களே கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். அத்துடன் முதலீட்டாளர்களும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி யுள்ளனர். இப்போதைய சூழலில் ஓஎன்ஜிசி பங்குகளின் உண்மையான மதிப்பை அறிவது மிகவும் சிரமம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 10-ம் தேதி அரசு வெளியிட்ட இயற்கை எரிவாயு விலை நிர்ணயம் (ஒரு பிடியு-வுக்கு 4.2 டாலர் என முடிவு செய்தது. இது நிறுவனங்களுக்கு போதுமான ஊக்கமளிப்பதாக இல்லை. இதனால் எரிவாயு அகழ்வுப் பணியில் தனியார் நிறுவனங்கள் ஈடுபட முன்வராது. விலையை இருமடங்காக உயர்த்தும் முடிவை புதிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. எரிவாயு விலை நிர்ணயக் கொள்கையில் உறுதியான நிலைப்பாடு இருக்கும்போதுதான் புதிய நிறுவனங்கள் இதில் ஈடுபடும் என்றும் ஓஎன்ஜிசி குறிப்பிட்டுள்ளது. இந்த பிரச்சினைகளை தீர்த்த பிறகுதான் பங்கு விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் பங்கு விலக்கல் மூலம் அரசு ரூ. 63,400 கோடியைத் திரட்ட முடிவு செய்துள்ளது. இந்த வாரத் தொடக்கத்தி்ல் ஓஎன்ஜிசி பங்கு விற்பனைக்கு உதவுமாறு வங்கிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தில் அரசுக்கு 68.94 சதவீத பங்குகள் உள்ளன. –பி.டி.ஐ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x