Published : 31 Jul 2014 12:00 AM
Last Updated : 31 Jul 2014 12:00 AM

குளிர்பானம், பால் பொருட்கள் தயாரிப்பில் இறங்க ஐடிசி திட்டம்

பழச்சாறு, சாக்லேட் உள்ளிட்டவற்றை தயாரிக்க ஐடிசி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒரு காலத்தில் சிகரெட் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட்டிருந்த ஐடிசி நிறுவனம் காலப் போக்கில் சமையல் எண்ணெய், பிஸ்கெட் உள்ளிட்ட பல நுகர்வோர் பொருள்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

இன்று ஐடிசி நிறுவனம் ஈடுபடாத துறைகளை விரல் விட்டு எண்ணும் அளவுக்குக் குறைவாகவே உள்ளது. இந்நிலையில் பழரசம் மற்றும் பால் பொருள்கள் அடிப்படையிலான பொருள்களைத் தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஐடிசி தலைவர் ஒய்.சி. தேவேஷ்வர் தெரிவித்தார்.

புதிய துறைகளில் ஈடுபட ஐடிசி திட்டமிட்டுள்ளது. அதன்படி பழரசம், தேயிலை,காபி, சாக்லேட் மற்றும் பால் பொருள் சார்ந்த தயாரிப்பில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் நிறுவனத்தை வலுவானதாக உருமாற்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட வேண்டியது மிகவும் அவசியமாகிறது. அதனடிப்படையில் புதிய தொழில்களைத் தொடங்கி விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பங்குதாரர்கள் பங்கேற்ற 103-வது ஆண்டுக் கூட்டத்தில் பேசுகையில் அவர் தெரிவித்தார்.

பால் பொருள் சார்ந்த பொருள் தயாரிப்பில் ஈடுபடப் போவதாக ஐடிசி ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், இப்போதுதான் அதன் தலைவர் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிகரெட்டுக்கு கூடுதல் வரி விதிக்கப்படுவது குறித்து பங்குதாரர்கள் கேட்டதற்கு, இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுடன் பேச்சு நடத்தப்படுகிறது. சிகரெட் மீது சமச்சீரான வரி விதிக்கும்படி வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

நிறுவனத்தின் வரிக்கு முந்தைய வருமானத்தில் 83 சதவீதம் சிகரெட் மூலம்தான் இந்நிறுவனத்துக்கு வருகிறது. கடந்த பட்ஜெட்டில் சிகரெட் மீது 11 சதவீதம் முதல் 72 சதவீதம் வரை உற்பத்தி வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ரூ. 25 ஆயிரம் கோடி முதலீட்டில் 65 திட்டப் பணிகளை ஐடிசி மேற்கொண்டு வருவதாகவும், இந்தத் திட்டப் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கு வங்கத்தில் மட்டும் இந்நிறுவனம் ரூ. 3,500 கோடி முதலீட்டிலான திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிக நுகர்வோர் பொருள் தயாரிப்பு மூலமான வருவாய் ரு. 1 லட்சம் கோடியை 2030ம் ஆண்டுக்குள் ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளாக அவர் தெரிவித்தார்.

ராயல்டி வழங்குவதில் மாற்றம் செய்யப்பட வேண்டியது அவசியமாகிறது என்று தேவேஷ்வர் குறிப்பிட்டார்.வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் ராயல்டியாக ரூ. 40 ஆயிரம் கோடி அளிக்கப்படுவதாக அவர் கூறினார். 2009-ம் ஆண்டு ராயல்டி விதிமுறையில் மாறுதல் செய்யப்பட்டதால் செலுத்த வேண்டிய அளவு 70 சதவீதம் அதிகரித் துள்ளாக அவர் கூறினார்.

இப்போது செலுத்தும் ராயல்டி தொகையானது அந்நிய நேரடி முதலீட்டில் 20 சதவீதமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய ராயல்டி விதிமுறைகளில் மாற்றம் செய்வதன் மூலம்தான் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x