Published : 17 Jul 2023 06:42 AM
Last Updated : 17 Jul 2023 06:42 AM

டாலருக்கு பதிலாக ரூபாய், திர்ஹாமில் வர்த்தகம்: இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் இடையே ஒப்பந்தம்

கோப்புப்படம்

புதுடெல்லி: பிரதமர் மோடி நேற்று முன்தினம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டார். அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமதுவை சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க டாலருக்கு பதிலாக இந்தியாவின் ரூபாய், அமீரகத்தின் திர்ஹாமில் இருதரப்பு வர்த்தகத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தானது.

சர்வதேச அளவில் அமெரிக்காவின் டாலர் மூலம் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது. உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உலக வர்த்தகத்தில் டாலரின் ஆதிக்கத்தை குறைக்க ரஷ்யா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி செய்து வருகின்றன. இந்த சூழலில் இந்திய ரூபாய்சர்வதேச நாணயமாக மாறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இப்போதைய நிலையில் ஜெர்மனி, பிரிட்டன், நேபாளம், பூடான், சிங்கப்பூர், இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், கென்யா, மலேசியா, ரஷ்யா உள்ளிட்ட 18 நாடுகள் இந்திய ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்தை ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த பட்டியலில் தற்போது ஐக்கிய அரபு அமீரகமும் இணைந்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு துறை வட்டாரங்கள் கூறியதாவது:

இந்திய ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்ற மத்திய அரசு தீவிரநடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 35 நாடுகள் இந்திய ரூபாயில் வர்த்தகம் மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன.

முந்தைய காலத்தில் வளைகுடா நாடுகளுடன் இணைந்து சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பி வந்தது. இப்போது பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் முயற்சியால் இந்தியா, பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து இந்தோ-ஆபிரகாமிக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி நாடுகளின் கடற்படை சார்பில் கடந்த ஜூன் 8, 9-ம் தேதிகளில் கூட்டு போர் பயிற்சி நடத்தப்பட்டது.

அதோடு மத்திய அரசின் முயற்சியால் இந்தியா, இஸ்ரேல், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து 'I2U2’ என்ற கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் சவுதி அரேபியாவும் விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், அமீரகத்தின் துபாய் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார். இந்தியா, அமீரகம் இடையிலான உறவு வலுவடைந்து வருவதால் தாவூத் பாகிஸ்தானிலேயே முடக்கப்பட்டு உள்ளார்.

மேலும் அமீரகம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு வளைகுடா நாடுகளின் ஹவாலா பணப் பரிமாற்றத்துக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் இந்தியாவில் தீவிரவாத அமைப்புகள் அழிந்து வருகின்றன.

இவ்வாறு இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரக தூதர் அப்துல் நாசர் கூறியதாவது:

இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் நம்பகமான நட்பு நாடுகளாகும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் இரு நாடுகள் இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருகிறது. எரிசக்தி, உணவு தானியங்கள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுகின்றன.

ரூபாய், திர்ஹாமில் வர்த்தகம் மேற்கொள்ள ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவின் யுபிஐ, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஐபிபி பணப் பரிவர்த்தனை நடைமுறைகள் இணைக்கப்பட உள்ளன. இவற்றின் மூலம் இருதரப்பு பொருளாதாரம் வரலாறு காணாத வளர்ச்சி அடையும்.

இவ்வாறு அப்துல் நாசர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x