Last Updated : 09 Jun, 2023 01:22 PM

 

Published : 09 Jun 2023 01:22 PM
Last Updated : 09 Jun 2023 01:22 PM

கோவையில் அதிகரிக்கும் பைக் டாக்ஸிகள் - முறைப்படுத்துவது அவசியம்

கோவை: கோவையில் தனியார் நிறுவனத்தின் மூலம் ‘பைக் டாக்ஸி’கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள், பகுதி நேர வேலை வேண்டுவோர், அவ்வப்போது பணம் தேவைப்படுபவர்கள் தங்கள் சொந்த இருசக்கர வாகனங்களை, தனியார் நிறுவனத்துடன் இணைத்துக் கொண்டு டாக்ஸியாக இயக்குகின்றனர்.

செல்போன் செயலி மூலம் நாம் செல்ல வேண்டிய இடத்தை பதிவு செய்தால், அந்த இடத்துக்கே வந்து அழைத்துச்சென்று, நாம் கூறும் இடத்தில் இறக்கிவிடுகின்றனர். பயணிகளை கவர கவர்ச்சிகர சலுகைகளும் அளிக்கப்படுகின்றன. ஆட்டோ, வாடகை கார்களை விடவும் கட்டணம் குறைவு என்பதால் பயணிகள் பலர் பைக் டாக்ஸியை நாடத் தொடங்கியுள்ளனர். அதற்கேற்ப பைக் டாக்ஸிகளை இயக்குவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ரூ.10 ஆயிரம் அபராதம்: இது தொடர்பாக, கோவை மண்டல இணை போக்குவரத்து ஆணையர் சிவகுமரன் கூறும்போது, “தமிழக அரசு பைக் டாக்ஸிக்கு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. தற்போது அனுமதி இல்லாமல்தான் செல்போன் செயலி மூலம் கோவை மாநகர பகுதியில் இருசக்கர வாகனங்களை வாடகைக்கு இயக்கி வருகின்றனர். கோவை வடக்கு, தெற்கு, மையம், மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற சோதனைகளின்போது 34 பைக் டாக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வாகன உரிமையாளருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனத்தை, வாடகைக்காக பயன்படுத்தும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அந்த வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு விபத்துக்கான இழப்பீடு கிடைக்காது. இதை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

பைக் டாக்ஸிகளால் பல்வேறு வரிகளைச் செலுத்தி வாகனங்களை இயக்கிவரும் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வாடகை ஆட்டோ ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் கூறும்போது, “கடன் பெற்று ஆட்டோ வாங்கி இயக்கி வருகிறோம். வாடகை வாகனத்துக்கான அனைத்து வரிகளையும் செலுத்துகிறோம். இவையேதும் இல்லாமல் சொந்த பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸியாக பயன்படுத்துகின்றனர். இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

நாளுக்குநாள் கோவையில் பைக் டாக்ஸி எண்ணிக்கை அதிகமாகிவருவதால், அவற்றைக் கட்டுப்படுத்த போக்குவரத்துத் துறை, காவல்துறையினர் இணைந்து அவ்வப்போது சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

விரும்புவது ஏன்?: பைக் டாக்ஸியில் பயணிப்போர் சிலர் கூறும்போது, “பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்தை வசூலிப்ப தில்லை. நிர்ணயிக்கப்பட்டதைவிட அதிகப்படியான தொகையையே வசூலிக்கின்றனர். உதாரணமாக, ரயில் நிலையத்தில் இருந்து காந்திபுரம் செல்ல ஆட்டோவில் பயணித்தால் ரூ.150 கேட்கின்றனர். இதே, பைக் டாக்ஸியில் பயணித்தால், அதிகபட்சம் ரூ.40 மட்டுமே செலவாகிறது.

போக்குவரத்து நெரிசலிலும் சிக்க வேண்டியதில்லை. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, பைக் டாக்ஸிகளை இயக்குவதற்கான விதிமுறைகளை வகுத்து, இந்த சேவையை அரசு முறைப்படுத்தலாம்” என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x