

தேர்தல் நடத்தை விதியை மீறி பள்ளிவாசலுக்குச் சென்று ஆதரவு திரட்டியதாக மேலூர் அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் மீது வழக்கு பதியப்பட்டது.
மதுரை மேலூர் தொகுதியில் அதிமுக சார்பில், பெரியபுள்ளான் எம்எல்ஏ, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆலத்தூர் ரவிச்சந்திரன், அமமுகவில் செல்வராஜ், மக்கள் நீதி மய்யம் சார்பில், கதிரேசன், நாம் தமிழர் கட்சியில் இருந்து ஆசிரியர் கருப்புசாமி உள்ளிட்ட சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இத்தொகுதியைப் பொறுத்தவரை திமுக, அதிமுக, அமமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. அனைத்து சமூகத்தினர் மத்தியிலும் இவர்கள் தங்களது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிமுக வேட்பாளர் பெரியபுள்ளான் எம்எல்ஏ கொட்டாம்பட்டி அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் பகுதியில் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது தேர்தல் நடத்தை விதியை மீறி அங்குள்ள பள்ளிவாசலுக்குள் அவர் சென்று ஆதரவு திரட்டியதாக தகவல் அறிந்த பறக்கும்படை அலுவலர் பாலச்சந்தர் போலீஸாருடன் அங்கு சென்று தடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாலச்சந்தர் கொடுத்த புகாரின்பேரில், கொட்டாம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் சுதன் பெரியபுள்ளான் மீது இரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்.