

சென்னை: ட்ரை ஆரா வழங்கும் ‘அன்பென்றாலே அம்மா - அம்மா... உறவல்ல... உணர்வு’ எனும் சிறப்பு நிகழ்வு வரும் ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை ஆர்.ஏ.புரத்திலுள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது.
அண்மைக்காலமாக மேற்கத்திய நாடுகளைப் பின்பற்றி அன்னையர் தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம். தாய்மையின் மகத்துவத்தை குறிப்பிட்ட தினத்தில் கொண்டாடுவதைக் காட்டிலும், தினந்தினம் மனங்களில் கொண்டாடுவதே நம் மண்ணின் மரபாகும்.
நிபந்தனையற்ற அன்பின் உறைவிடமாகத் திகழும் தாய் என்ற உன்னதமான அந்த உறவை, தாய்மையைப் போற்றும் பாடல்கள், நெகிழ்ச்சியான உரையாடல்கள், மகிழ்ச்சியான அனுபவப் பகிர்வுகள் என பிரம்மாண்டமாக கொண்டாட ட்ரை ஆரா நிறுவனம் ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
தாய்மையைக் கொண்டாடும் இந்தத் தனித்துவமான இசை நிகழ்ச்சியை ப்ளாக் ஷீப், நியூஸ் 7, சித்திரம் தொலைக்காட்சி, பிக் எஃப்.எம். சென்னை சாரீஸ், ப்ரவோக் ஆகிய நிறுவனங்களும் இணைந்து வழங்குகின்றன. பிரின்ட் பார்ட்னராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் இணைந்துள்ளது.
இந்நிகழ்ச்சியில் தாய்மையின் மேன்மையை உணர்த்தும் திரையிசைப் பாடல்களை, சைந்தவி, கிரேஸ் கருணாஸ், நிவாஸ், ஸ்யாம் உள்ளிட்ட பின்னணிப் பாடகர்களும், மாளவிகா, இனியா ராஜகுமாரன், முத்தமிழன், பிரபாவதி உள்ளிட்ட வளரும் இசைக் கலைஞர்களும் பாடவிருக்கிறார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர்கள் வெற்றிமாறன், மிஷ்கின், ராஜுமுருகன், சுரேஷ் ராஜகுமாரி ஆகியோரும் சுஹாசினி மணிரத்தினம், கவுதமி, சேத்தன், ஆடுகளம் நரேன், தினேஷ், விக்ராந்த், கலைராணி, அனிஷ்மா, தமிழ், அக் ஷய்குமார், மூணார் ரமேஷ், சிநேகன் போன்ற திரைப் பிரபலங்களும் பங்கேற்க இருக்கிறார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் இத்துடன் உள்ள க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து, நுழைவுச் சீட்டைப் பெறலாம்.