“பள்ளிக் கல்வியை பலப்படுத்தினால் குடிமைப்பணி தேர்வில் எளிதில் வெற்றி” - முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு அறிவுரை

‘இந்து தமிழ் திசை’, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி
“பள்ளிக் கல்வியை பலப்படுத்தினால் குடிமைப்பணி தேர்வில் எளிதில் வெற்றி” - முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு அறிவுரை

படங்கள்: நா.தங்கரத்தினம்

Updated on
3 min read

மதுரை: குடிமைப் பணித் தேர்வில் எளிதில் வெற்றி பெற அடிப்படையான பள்ளிக் கல்வியை பலப்படுத்துங்கள் என மதுரையில் நடந்த ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு பேசினார்.

‘இந்து தமிழ் திசை’, கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டி நிகழ்ச்சி மதுரை தெப்பக்குளம் தியாகராசர் கல்லூரி அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கி தமிழக முன்னாள் டிஜிபி செ.சைலேந்திர பாபு ஐ.பி.எஸ். பேசியதாவது: நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற லட்சியம் வேண்டும். வாழ்க்கையில் பெரிய நோக்கம் இருக்க வேண்டும். லஞ்சத்தை ஒழிக்கவும், ஏற்றத்தாழ்வுகளை சரி செய்யவும் ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற லட்சியம் இருக்க வேண்டும்.

குறைந்த வயதில் உயர்ந்த பதவியில் அமர குடிமைப்பணித் தேர்வு வாய்ப்பு அளிக்கிறது. ஐஏஎஸ் என்பது பதவி அல்ல, பொறுப்பு. நீங்கள் பொறுப்பை உணர்ந்து கடமையைச் செய்ய வேண்டும். இத்தகைய பொறுப்பான வேலையில் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும், சவால்கள், சட்டப் பி்ரச்சினைகளைச் சமாளிக்கும் திறமை கிடைக்கும். நான்கு பேருக்கு உதவி செய்தோம் என்ற மகிழ்ச்சி கிடைக்கும். மக்களுக்கு உதவி செய்ய அரசாங் கம் சம்பளம் தருகிறது.

மாற்றத்தை ஏற்படுத்தலாம்

தமிழகத்தில் நிதி நிறுவனங்கள் மூலம் மோசடி செய்தோருக்கு எதிராக நான்போட்ட ஒரு கையெழுத்து தற்போதுவரை மோசடிகளை தடுத்து வருகிறது. நாம் இடும் ஒரு சின்ன கையெழுத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இந்தத் துறை மூலம் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இதனால் அரசாங்கத்தின் முகம் மாறும். காவல் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய எனக்கு ஒருநாள்கூட சலிப்போ, மனச்சோர்வோ ஏற்பட்டதில்லை.

சிவில் சர்வீஸ் தேர்வை பட்டப்படிப்பு முடித்து 21 வயதிலிருந்து 32 வயதுக்குள் எழுதி முடித்துவிடுங்கள். இட ஒதுக்கீட்டுப்படி சிலருக்கு வயதில் விதிவிலக்கு உள்ளது. ஆங்கிலப் புலமை மிகவும் முக்கியம். ஆங்கில வார்த்தைகளுக்குரிய பொருளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

நாளிதழ்களை தினமும் படிக்க வேண்டும். நான் படிக்கும் காலத்தில் ஓர் ஆங்கிலச் சொல்லுக்கு அர்த்தம் கண்டறிய நூலகத்துக்குச் சென்று அகராதியை தேடிப்பார்க்கும் நிலை இருந்தது. ஆனால், இன்று ஒரு நொடியில் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

<div class="paragraphs"><p>நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.</p></div>

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்.

ஆசைப்பட்டால் ஒன்று கிடைக்கும் மற்றொன்று கிடைக்காது. அதற்கு நாம் போர் வீரனாக மாற வேண்டும். சின்ன திட்டமிடுதல் வேண்டும். தேவையில்லாத விஷயங்களை படிக்கத் தேவையில்லை.

பள்ளியில் படித்த பாடத்தை மீண்டும் படிக்க வேண்டும். தமிழக வரலாற்றையும் நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் தோன்றி 25 லட்சம் ஆண்டுகள் ஆகின்றன. அந்த மனித வரலாற்றைப் படிப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும்.

அறிவியல் சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புகளை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். உலகில் 194 நாடுகள் உள்ளன. எந்த நாட்டில் என்ன பிரச்சினை என்ற உலக நடப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற அடிப்படையான பள்ளிக் கல்வியைப் பலப்படுத்துங்கள்.

கொஞ்சம் கணிதமும், சிந்திக்கும் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனக்கணக்கு போடத்தெரிய வேண்டும். ஆங்கிலத்தில் கட்டுரைகளை எழுதிப் பழக வேண்டும். நிறைய வாசிக்க வேண்டும்.

தினமும் குறைந்தது 100 பக்கம் வாசிக்க வேண்டும். வாசிப்பு என்பது தனி சுகம். என்ன பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதைச் சுருக்கமாக எழுத கற்றுக்கொள்ளுங்கள்.

நேர்காணல் என்பதும் ஒரு தேர்வுதான். மத்திய அரசு நிறைய திட்டங்களைக் கொண்டு வந்துள் ளது. இந்தி வார்த்தைகள் குறித்து பயப்படாமல் திட்டங்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

உழைக்கத் தயாராகுங்கள்..

இந்தியாவில் கிடைக்கும் உயர்ந்தபதவிக்கு இன்றிலிருந்து என்னைமாற்றத் தயாராக இருக்கிறேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். மொபைல் போனால் உடல், மூளை வளராது. கணிதமின்றி எது வும் நடக்காது.

பொழுதுபோக்கே வேண்டாம் என்ற மனப்பான்மை வேண்டும். அதிகாலையில் 5 மணிக்கு எழுந்து 7 மணிக்குள் கடினமான பாடங்களைப் படித்து விடுங்கள். 21 நாட்கள் தொடர்ந்து அதிகாலையில் எழுந்தால், அதுவே பழக்கமாகிவிடும்.

உழைக்கத் தயாராகுங்கள். இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை தூங்குங்கள். தூக்கம் ரொம்ப முக்கியம். மூளைக்கு எவ்வளவு பெரிய ஆற்றல் இருக்கிறது என்பதை உணர்வீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் சத்ய பூமிநாதன் பேசியதாவது: ஒவ்வொரு ஐஏஎஸ் அகாடமியிலும் சிறந்து விளங்கும் வல்லுநர்களை நமது அகாடமியில் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பயிற்சி அளிக்கிறோம். இதன் மூலம் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சி வரப்போகிறது. வெகுவிரைவில் தமிழ்நாடு தலை நிமிர்ந்தது என்ற நிலை ஏற்படும்.

கிங்மேக்கர்ஸ் அகாடமியில் படித்த 239 மாணவர்கள் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். இதில் 33 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கனவு, உழைப்பு, விடா முயற்சி, தேடல், திட்டமிடல் இருந்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

இது, புத்தகத்தில் உள்ளதைப் படித்துவிட்டு எழுதும் தேர்வு அல்ல. புத்தகத்தைத் தாண்டிய அறிவைச் சோதிக்கும் தேர்வு. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2-வில் படிப்பதுபோல் படித்தால் தேர்ச்சி பெற்றுவிடலாம்.

வித்தியாசமான சிந்தனைதான் சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயார்படுத்தும். எடுத்தவுடனேயே வெற்றி கிடைத்துவிடாது. பொறுமையாக உழைக்க வேண்டும்.

இத்தேர்வுக்கு 1,500 பக்கங்கள் படித்தால்போதும். 100 ஆண்டுகள் மனிதவாழ்க்கையில், 100 நாள் கொடுத்தால் போதும். மொத்தம் 2 ஆயிரம் மணி நேரப் படிப்பு, உங்கள் வாழ்க்கையை மாற்றிவிடும்.

வாய்ப்புக் கிடைக்காத கிராமப்புற மாணவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தித் தர இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்குள் உள்ள திறமைகளை தட்டியெழுப்புங்கள், என்று பேசினார். இந்நிகழ்ச்சியை `இந்து தமிழ் திசை'முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

தியாகராசர் கல்லூரி சுய நிதிப்பிரிவு இயக்குநர் எஸ்.சுகுமார், கிங் மேக்கர் ஐஏஎஸ் அகாடமி பேராசிரியர் ஆதில் பைக், மதுரை மையப் பொறுப்பாளர் பரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

“பள்ளிக் கல்வியை பலப்படுத்தினால் குடிமைப்பணி தேர்வில் எளிதில் வெற்றி” - முன்னாள் டிஜிபி செ.சைலேந்திரபாபு அறிவுரை
8 A.M. Metro: விட்டு விடுதலையாகும் இராவதி | திரை தேவதைகள் 10

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in