Published : 14 Sep 2017 09:40 AM
Last Updated : 14 Sep 2017 09:40 AM

ஃபெரீத் முராத் 10

மெரிக்காவைச் சேர்ந்த பிரபல மருத்துவர், மருந்தியலாளர், மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஃபெரீத் முராத் (Ferid Murad) பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

அமெரிக்காவில் இந்தியானா மாகாணத்தில் பிறந்தார் (1936). அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார். சிறுவயது முதலே தன் பெற்றோரைப் போலவே கடுமையான உழைப் பில் நம்பிக்கை கொண்டிருந்தார்.

பள்ளிப் பருவத்திலேயே தான் ஒரு மருத்துவராக வேண்டும் என முடிவு செய்தார். ஆனால், மருத்துவக் கல்லூரியில் சேர்க்கும் அளவுக்கு பெற்றோருக்கு வசதி இல்லாததால், கல்வி உதவித் தொகைப் பெற பல இடங்களில் முயற்சி செய்தார்.

கிரீன்கேஸ்டிலில் இருந்த டிபாவ் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகைப் பெற்று, வேதியியல் பயின்றார். பட்டப் படிப்பு படிக்கும்போதே நைட்ரிக் ஆக்சைட் குறித்த தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கிவிட்டார். பின்னர், கேஸ் வெஸ்டன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் மற்றும் மருந்தியலில் எம்.டி., பி.எச்டி. பட்டம் பெற்றார். தேசிய சுகாதார அமைப்பில் மருத்துவ அசோசியேட்டாகவும் மூத்த அறுவை சிகிச்சை உதவியாளராகவும் இணைந்தார்.

1970-ல் வெர்ஜினியா பல்கலைக்கழகத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட மருத்துவ மருந்தியல் பிரிவில் மருத்துவத்திலும் மருந்தியலிலும் அசோசியேட் பேராசிரியராக நியமனம் பெற்றார். பின்னர் அதன் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் கிளினிகல் ஃபார்மாலஜியின் இயக்குநராக உயர்ந்தார்.

ரத்த நாளங்களைப் பாதிக்கும் நோய்களுக்குப் பயன்பட்டு வந்த நைட்ரோகிளசரின் குறித்து விரிவாக ஆராய்ந்தார். இதன் அபார செயல்திறனால் மென்தசை செல்கள் தளர்கின்றன என்பதைக் கண்டறிந்தார். இதை அடிப்படையாகக் கொண்டு, நைட்ரிக் ஆக்சைட் மற்றும் பிற நைட்ரஜன் உள்ளடங்கிய கலவைகள் எவ்வாறு சவ்வுகள் உள்ளே சென்று மற்ற செல்களைச் செயல்பட வைக்கின்றன என்பதை எடுத்துக்காட்டினார்.

நைட்ரோகிளிசரின்கள் மூலம் தூண்டப்படும்போது, என்சைம்களால் உருவாகும் சுழற்சிமுறை கியோனோஸின் (cyclic guanosine) மோனோ பாஸ்பேட் குறித்து ஆராய்ந்தார்.

1988-ல் அப்பாட் சோதனைக்கூடத்தின் மருந்து கண்டுபிடிப்பு மையத்தின் துணைத் தலைவராகப் பதவி ஏற்றார். 1997-ல் டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து ஒருங்கிணைந்த உயிரியியல், மருந்தியல் மற்றும் உடலியல் துறைகளைப் புதிதாகத் தொடங்கி வைத்தார்.

2011-ல் ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் உயிரிவேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியியல் துறையின் பேராசிரியராகப் பணியாற்றினார். தனது ஆராய்ச்சிகள் குறித்த கட்டுரைகளையும் ‘எ ஷாட் ஹிஸ்டரி ஆஃப் சிஜிஎம்பி குன்னைல்ல சைக்லஸ் அன்ட் சிஜிஎம்பி - டிபென்டென்ட் புரோட்டீன் கைனசெஸ்’, ‘டிஸ்கவரி ஆஃப் நைட்ரிக் ஆக்சைஸ் சிகனலிங் பாத்வே அன்ட் டார்கெட்ஸ் ஃபார் டிரக் டெவலப்மென்ட்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.

கார்டியோ வாஸ்குலர் அமைப்பில் சமிக்ஞை மூலக்கூறாக நைட்ரிக் ஆக்சைட் இருப்பது குறித்த இவர்களது கண்டுபிடிப்புகளுக்காக 1998-ம் ஆண்டு ராபர்ட் எஃப் ஃபர்ச்கோட் மற்றும் லூயிஸ் ஜே. இக்னாரோ ஆகியோருடன் இணைந்து, மருத்துவம் அல்லது உடலியங்கலியலுக்கான நோபல் பரிசை வென்றார்.

தலைசிறந்த ஆசிரியர், ஆராய்ச்சியாளர், சிறந்த நிர்வாகி, அறிவியல் ஆலோசகராக விளங்கியவரும், மருத்துவம், மருந்தியல், உடலியல் துறைகளுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான ஃபெரீத் முராத் இன்று 82-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x