Published : 07 Aug 2017 06:25 PM
Last Updated : 07 Aug 2017 06:25 PM

ஓவியாக்களின் பலம் என்பது.. பிக்பாஸை முன்வைத்து காதலெனும் சிந்தனைவெளி

ஒரு பெண்ணை 'போடி, போடீ' என்றும், ஆணை 'போடா!' என்றும் வெகு இயல்பாக திட்டி கோபம் காட்டிய பெண்ணை ஒட்டு மொத்தமாய் நேசித்திருக்கிறார்கள். அந்தப் பெண் அப்படியொரு கோபத்தை வெளிப்படுத்த காரணமான பெண்ணை வெறுத்திருக்கிறார்கள். இதில் வேடிக்கை நேசிக்கப்பட்டவர் வெளியேறியதும், வெறுக்கப்பட்டவரும் வெளியேற்றப்பட்டதும்தான்.

ஓவியாவின் வெளியேற்றத்தில் சமூக நீதியும், உண்மையும், சமூகத்தின் வக்கிரப் போர்வையும் படிந்தே இருக்கிறது. இதில் 'பிக்பாஸ் ஓவியா' என்பது வெறும் குறியீடாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. அதை பற்றிய அழுத்தமான பதிவாக இந்த கட்டுரையை கொள்ளலாம் என்றாலும் கூட அதற்கு முன்னர் முன் இதை வாசிப்பவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்வது அவசியம்.

'பிக்பாஸ்' என்றதும் 'அடுத்தவன் வீட்டு சமாச்சாரத்தை எட்டிப்பார்க்கும் வக்கிரம், ஒருவனின் அந்தரங்கத்தை ருசித்துப் பருகும் அசிங்கம்!' என்றெல்லாம் வருகிறது எதிர் கருத்துகள். அதை விட அது ஒரு கலாச்சார பண்பாட்டு சிதைவுக்கான கருவி, ஆடை குறைப்பில், ஆபாசம் காட்டுவதிலான வியாபார தந்திரம் என்றெல்லாம் கூப்பாடுகள் வருகின்றன. அதை மேலோட்டமாகப் பார்த்து ஏற்றுக் கொண்டாலும் கூட, அடி ஆழத்தில் அதை உற்று நோக்கும்போது, அதற்கு மதிப்பு கொடுத்து, அது அப்படி ஒதுக்கப்பட வேண்டிய சமாச்சாரம் அல்ல; சமூகத்தின் தேவை என்பதையும் உணர்த்த வேண்டிய கட்டாயமிருப்பதாகவே தோன்றுகிறது.

இந்த சமூகம் சுதந்திரப் போராட்ட காலத்திற்கு பிந்தைய நாளிலிருந்து பல்வேறு பொருளாதார சூழல் நெருக்கடிகளில் சிக்கி, போராடி மீண்டு வந்திருந்தாலும் கூட, அந்த தன்மைகளை எல்லாம் ஜாலியாக, கேளிக்கையாக, விளையாட்டாகவே எடுத்துக் கொண்டு நகர்ந்து வந்திருக்கிறது. அதுவே ஓரளவு பொருளாதார நிலை உயர்ந்து, தன் உணவு, உடைத்தேவையை பூர்த்தி செய்த பின், அரைகுறையாய் இருப்பிடத்தேவையை பகிர்ந்து கொண்டு நிற்கும் சூழலில் மேற்கத்திய கலாச்சாரத்தை சூடிக் கொண்டதில் வியப்பில்லை. அதில் கேளிக்கை கூத்துகளே மிகுந்திருக்கின்றன. கலைக்கூத்து, நாடகத்தில் தொடங்கி, நேற்றைய அகண்ட திரை, இன்றைய குறுகிய திரை எல்லாவற்றிலுமே இந்த விஷயங்களே ஆணித்தரமாக ஊன்றியிருக்கின்றன.

அந்த கதாகாலட்சேபத்தில் அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது, அவர்கள் வழுக்கி விழுந்தால் மறைவில் சிரித்து, நேரில் அனுதாபப்பட்டு நடிப்பது. இருவர் மோதிக்கொண்டால் நடுவில் புகுந்து பஞ்சாயத்து செய்வதில் பெருமிதம் கொள்வது. தன்னை பெரிய மனுசனாக்கிக் காட்டிக் கொள்வது. இன்னும் சொல்லப் போனால் ஒருவன் தன்னை விட ஏதாவது ஒரு விஷயத்தில் உயர்ந்து கொண்டாலும், மற்றவரிடம் பாராட்டு பெற்றாலும் பொறாமை கொள்வது, அந்த இடத்தை எப்படியாவது அடைந்து, அப்படி அடைந்தவனை கீழே தள்ளிப்பார்த்து வெற்றிப் புன்னகை புரிவது என்பதெல்லாம் காலங்காலமாக சமூகத்தில் மானுட சமூகத்தின் குணாம்சத்தில் கூடுதலாகவே ஊறிப் போயிருக்கிறது.

குறிப்பாக சிற்றின்ப லகிரிக்கு தீனி போடும் விஷயங்களில் எட்டி, எட்டிப் பார்ப்பதில் நம்மவர்களுக்கு குறைந்தவர்கள் யாரும் இருக்க முடியாது. ராமாயணம் மகாபாரதம் தொட்டு நேற்றைய அகண்ட திரை வரை சமூகத்திற்கு தீனி போடுவது இந்த விஷயங்களே அன்றி வேறில்லை. அதில் காதல், காமச் சுவை என்பது அதிமுக்கிய வஸ்துவாகவே விளங்கியிருக்கிறது.

ராமாயணத்தில் ராமனின் மனைவி சீதையை ராவணன் கவர்கிறார். மண்டோதரி, கைகேயி சூர்ப்பனகைகள், கூனிகள் நிறைகிறார்கள். மகாபாரதத்தில் பாண்டவர்களின் தர்மபத்தினி திரெளபதி துச்சாதனனால் துகிலுரியப்படுகிறாள். பாரத யுத்தத்தில் எதிரிகள் குருதி பாய்த்து சீவிக்குழல் முடிக்கிறாள். காத்தவராயன்- ஆர்யமாலா, லைலா-மஜ்னு முதல் நேற்று வந்த திரைப்படங்கள், சின்னத்திரை நாடகங்கள் வரை இந்த காதல், காம, வில்லச் சுவைகளே நர்த்தனம் புரிகின்றன.

இந்த மானுட உணர்வின் அறுசுவை விருந்தை சரிவிகிதமாக பகிர்ந்தளிக்காத படைப்புகள் யாவும் காலத்தில் நிற்பதில்லை; நின்றதில்லை என்பதே உண்மை. இந்த மாதிரி படைப்புகளில் ஊறித் திளைப்பதும், அதில் நீக்கமற ஊன்றி கவனிப்பதும் கூட கற்பனையாக இருந்தாலும் கூட அடுத்தவனின் அந்தரங்கத்தை எட்டிப் பார்ப்பதற்கு சமம்தான். அப்படிப்பட்ட அந்தரங்கங்களை கற்பனையாகவேனும் தரிசிப்பது கூட குரூரம் என்றால் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியும் குரூரமே. இது புனைவு தாண்டி நிஜத்தில் நடப்பதால் வேண்டுமானால் அதி தீவிர குரூரம் அல்லது வக்கிரம் என்று வைத்துக் கொள்ளலாம்.

காதலில் பிதற்ற வைத்தது எது?
  • ஆண் வசியப்படுத்தக்கூடியவன்;பெண் வசியப்படுபவள் என்ற பேருண்மை இங்கே 'ஆரவ்'வின் ரசவாத வித்தையால் மீண்டும் அரங்கேறியது. அதுவே அவளை காதலில் பிதற்ற வைத்தது.

இந்த கேளிக்கை அரங்கின் இறுதிப்புள்ளியில்தான் பிக்பாஸையும், ஓவியா என்ற பாத்திரத்தின் வழி சமூக நியாய தர்மங்களாக நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. நடிகர்களாக இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தவர்கள் வாழ முயற்சித்தார்கள். ஆனால் சராசரியாக வாழ்ந்து கொண்டு இந்த அறைக்குள் சென்ற ஒரே ஒரு பெண்மணி நடிப்பு சிகாமணியாக சுடர்விட்டிருக்கிறார். நடிகர்கள் அரங்கில் நடிக்கத்தான் வேண்டும் என்ற கற்பிதம் இவருக்கும், மக்கள் ஓட்டு போடும் அரங்கில் இயல்பாக வாழவேண்டும் என்று மற்றவர்களுக்கும் அவர்களின் ஆழ்மனமே முடிவெடுத்து இயம்பியிருக்கிறது. இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சிறப்பாக வாழ்ந்த நடிகை ஓவியா வெளியேறி இருக்கிறார். சிறப்பாக ஆளுக்கேற்றபடி நடித்த ஜூலி வெளியேற்றப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவருமே வெளியேறியதற்கு / வெளியேற்றப்பட்டதற்கு ஒருவருக்கொருவரே காரணமாகியிருக்கிறார்கள் என்பதும் இதில் கிடைக்கும் சமூக முரண்.

'ஊரோடு ஒட்டி வாழ்!' என்பது நமக்கு முதுமொழி. ஜல்லிக்கட்டில் இயல்பாகவே தன்னை வெளிப்படுத்தி, தனக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து அந்த வீட்டிற்குள் சென்ற ஜூலி இயல்பாகவே தன்னை ஆரம்பத்தில் வெளிப்படுத்திக் கொண்டார். அது நடிகப்பட்டாள அரங்கில் கேலிக்குள்ளாக்கப்பட்டபோது ஓட்டளிப்பில் இருந்த மக்கள் பொங்கினார்கள். ஜூலிக்கு ஆதரவு நிலை எடுத்தார்கள். அதில் கலங்கிப்போனது மற்றுள்ள நட்சத்திர அரங்கம். ஜூலியை காயப்படுத்தினால் தங்களுக்கான அங்கீகாரத்தை தவற விட்டுவிடுவோம் என ஐயம் கொண்டது. ஜூலியை எந்த இடத்திலும் அவமானப்படுத்தலாகாது என்ற முடிவை தன்னளவில் எடுத்துக் கொண்டு இயங்கினார்கள்.

இதற்கிடையே பரணி என்கிற ஒரு பாத்திரம் யாரோடும் ஒட்டாமல் வாழ்ந்த நிலையில், அவரை முழுமையாக கேலிப்பொருளாக்கி ஒதுக்கியது. அப்போது ஆறுதல் அளிக்கும் சுயம்புவாய் நின்றார் ஓவியா. 'அவங்க அப்படித்தான் இருப்பாங்க. நமக்கு சுயநம்பிக்கை அவசியம். நமக்கு நாமே பலங்கொண்டால் மற்றவர்கள் நம்மை அறிந்து கொள்ளும் நாள் நெருங்கி வரும்' என்பது அவரின் வேதாம்சமாக இருந்தது. அது அவருக்கு இயல்பாகவே இருந்தது.

புற்றுநோயால் தாயைப் பறிகொடுத்த நிலை. அப்பாவை தவிர்த்து பாட்டியோடு வளரும் பாங்கு. தன் துக்கத்திற்கு தானே மருந்திட்டுக் கொள்ளும் ஆற்றல். எந்த நிலையிலும் தன்னை உண்மைக்கு புறம்பாக மாற்றிக் கொள்ளத்துணியாத தன்மை. தன் துயரத்தை துக்கத்தை தனக்குள் ஒலிக்கும் ராகங்களிலும், அதற்கான நெளிசல் மிகு நாட்டியத்திலும் அழுந்தப் புதைத்துக் கொண்ட தன்னிலை அவருக்குப் பலம் பொருந்தியதாக இருந்தது. 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூடவே கொஞ்சி விளையாடும் தோழியாகவும், 16 வயது கடந்தவர்களுக்கு தன் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் கனவு தேவதையாகவும், 50கள் கடந்தவர்களுக்கு மகளாக, பேத்தியாக அவர் இருந்ததை விட வாழ்ந்த கணங்கள் அதிகம்.

ஓவியா பிரகாசிக்கக் காரணம்
  • சிறுபுள்ளியாக பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த அவர் பெரிய நட்சத்திமாக, பளீரிட வைக்கும் சுடராக பிரகாசித்தார் என்றால் அவர் மற்றவர்களிடம் காட்டிய அன்பு. அதையும் தாண்டிய பரிவு. அதற்குள் நிறைந்து நின்ற உண்மை. சத்தியம். அதுதான் ஜூலியை மற்றவர்கள் புறக்கணித்து, கேலி கிண்டல் செய்த நிலையிலும் நெருக்கமாக நிறுத்தி ஆறுதல் கொள்ள வைத்தது.

அதில் ஒன்றி நின்று சகோதர வாஞ்சையுடன் தோள் சரித்த அவர் தன்னை ஒதுக்கி வைப்பவர்கள், கேலிக்குள்ளாக்குபவர்கள் பலரின் கோபம் பரிவுக்குரிய ஓவியாவின் மீது இருப்பதை அனிச்சையாக உணர்ந்தார்.

ஓரிடத்தில் ஒருவர் சைக்கிளில் இருந்து விழுந்துவிட்டார் என்று தெரிந்தால் அடுத்து வாகனம் மோதி விழுந்து அடிபட்டு விட்டார் என்றும், அதையடுத்த நிலையில் அவர் கார் மோதி படுகாயமுற்றார் என்ற செய்தியை பரப்பி, அதற்கடுத்த நிலையில் கார் மோதி ஒருவர் இறந்துவிட்டார் என்று கொண்டு செல்லும், இப்படி எதையும் மிகைப்படுத்தியே சொல்லி பழக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியாக நின்றார். அப்படி ஓவியா சொன்ன ஒற்றை வார்த்தை மிகைப்படுத்தி சொன்னதன் விளைவு.

அத்தனை பேரும் ஓவியாவிற்கு எதிரியாகவும், ஜூலிக்கு நெருக்கமானவர்களாகவும் ஆனார்கள். அதில் வெடித்த வன்மம் பெண்கள் அரங்கில் ஓவியாவிற்கான கேலி, கிண்டல் பாடுபொருளாக மாறியது. அதையே கெட்டியாக பிடித்துக் கொண்டு நகர வேண்டிய கட்டாயம் ஜூலிக்கு இருந்தது. நடந்த செயல் ஒன்று இருக்க, அதை சற்றே மிகைப்படுத்தி சொன்ன சொல்லில் அதுவாகவே ஆகிப்போன பரிதாபமும் நடந்தது. பெண்களின் இந்த போக்கு ஓரிரவில் பெண்களின் அறையை விட்டு ஆண்கள் அறைக்கு செல்ல ஓவியாவிற்கான நிர்பந்தமாக அமைந்தது. மருத்துவ முத்தம் என்ற புதிய சொற்றொடரை கமல் உருவாக்கும் வண்ணம் கொண்டு செல்லவும் செய்தது.

அதில் அவரை அரவணைக்க ஆறுதல் செய்ய நீண்ட கைகளில் ஒரு இடத்தில் இதம் இருப்பதாக உணர்ந்தார். ஆண் வசியப்படுத்தக்கூடியவன்; பெண் வசியப்படுபவள் என்ற பேருண்மை இங்கே 'ஆரவ்'வின் ரசவாத வித்தையால் மீண்டும் அரங்கேறியது. அதுவே அவளை காதலில் பிதற்ற வைத்தது.

ஒரு இளம்பெண் தன் காதலனை அங்கீகரிப்பது, அவனிடம் பகிரங்கமாக ப்ரபோஸ் செய்வது, அவனை இழுத்து, இழுத்து கொஞ்சி குலாவ முனைய வைப்பது எல்லாம் தமிழ் சினிமாவில் நடக்கலாம். நிஜமாக ஒரு வீட்டில் நடக்கலாமா? அதை மக்கள் கண்டுகளிக்கும் வண்ணம் தொலைக்காட்சி வாயிலாக காட்டலாமா? நம் கலாச்சாரம், பண்பாடு எல்லாம் என்னாவது என்று நம் பண்பாட்டுக் காவலர்கள் கொதித்தார்கள்.

இந்த பண்பாட்டு அடிமை வெளியில் ஊறி, அதுவாகவே நின்ற பெண் சமூகமும் இதைப் பார்த்து முகம் சுளித்தது. 'இது பெண் இனத்திற்கே அவமானம்!' என முணுமுணுக்கவும் செய்தது. அதைப்பற்றியெல்லாம் ஓவியாவிற்கு கவலையில்லை. இருக்கிற பைத்தியங்களிலேயே மிக மோசமான பைத்தியம் காதல் பைத்தியம்தான். அதை தெளிவிப்பது அவ்வளவு சுலபமல்ல என்பது புராண, இதிகாச, வரலாறுகள் பேசும்.

அதில் வீழ்ந்து துடித்த ஓவியாவை காப்பாற்ற பார்வையாளர்கள் துடித்தார்கள். ஆனால் அந்த உண்மைக்காதல் மொழியை அந்த பிக்பாஸ் வீட்டில் உணர யாரும் தயாராக இல்லை. அதைவிட அந்த விஷயத்தில் எப்படி முடிவு எடுப்பது என்ற நிலையிலும் அவர்கள் இல்லை. எந்தவீட்டில்தான் காதல் இல்லை. அதற்கான எதிர்கொள்ளல் இல்லை. அதற்கான மன உளைச்சல்கள் இல்லை. காதலின்றி வேறொன்று இவ்வெளியில் பெரிதாக இல்லை. அது இன்றி எந்த ஒரு பெரிய சினிமாவும், சின்ன சினிமாவும் ஓடாது என்பதை இந்த பிக்பாஸ் ஷோவை நடத்துபவர்களுக்கு தெரியாதா? அதன் போக்கில் விட்டார்கள்.

தங்கள் பார்வையாளர்களை வெறும் நிழல் காதல்களால் கவர்ந்திழுத்துக் கொண்டிருந்த தமிழ் திரையுலகம் கமல் என்ற நாயகன் முன்னிலையில் நிஜக் காதலையும் துல்லியமாக அரங்கேற்றி பிரபல்யம் தேடுவதிலேயே முனைப்பு காட்டியது. அதுவே ஓவியாவை தற்கொலை முயற்சிக்கான முகாந்திரம் வரை கொண்டு போகச் செய்தது. பரபரப்பையும் தேடித் தந்தது. வீட்டிலிருந்து வெளியே வந்த ஓவியா வெறுமனே கேமராவுக்காக தன்னிலையை வெளிப்படுத்தவில்லை என்பதை கமல் முன்னிலையில் நடந்த பேட்டியிலும், 'ஐ லவ் ஆரவ்!' என்று தெளிவுபடுத்தினார். அது இன்னமும் உச்சபட்ச நிலையை அடைந்திருக்கிறது.

இந்த நிலையில்தான் தன் ரசிகர்களை கவர்ந்த ஓவியா, தன் மறைமுக வில்லியாக ஜூலியை சித்தரித்து விட்டார். அதன் வெளிப்பாடு ஜூலியின் வெளியேற்றத்திலும், கமலின் நேர்காணலிலும் ஒலித்ததில் ஆச்சர்யமில்லை. மற்றவர்கள் வெளியேறியபோது இல்லாத ஆரவாரம், அமானுஷ்யம் ஜூலி, ஓவியா வெளியேறும் போது பிக்பாஸ் வீட்டிலும் வெளியேயும் இருந்திருக்கிறது. இந்த ஓவியாக்கள், ஜூலிக்கள் நம் சமூகத்தில் நிறைந்தே இருக்கிறார்கள். அவர்களுக்கான இதமும், நிஜமும் வக்கிரமும் இந்த சமூகமே அவர்களுக்கு கொடுக்கிறது. அதில் இவர்கள் தங்களுக்கு பிடித்தமானது எதுவோ அதை எடுத்துக் கொள்கிறார்கள். பிறகு அதுவே ஆகிறார்கள்.

ஆனால் பிக்பாஸ் வீட்டில் ஓவியாவை தற்கொலை முயற்சிக்கான முகாந்திரத்திலிருந்து காப்பாற்ற எண்ணற்ற கேமராக்கள் இருந்திருக்கிறது. சமூகத்தில் வாழும் ஓவியாக்களை காப்பாற்ற எதுவுமே இல்லை. அவர்களாகவே தன்வயத்தில் தப்பிப் பிழைத்தால் உண்டு. மற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x