Last Updated : 01 Jul, 2014 10:00 AM

 

Published : 01 Jul 2014 10:00 AM
Last Updated : 01 Jul 2014 10:00 AM

தொழில் கடன் பெற என்ன ஆவணங்கள் தேவை?

தமிழக அரசின் யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தின் கீழ் பயன்பெறத் தேவையான அடிப்படை தகுதிகள், வங்கிக் கடன் விவரம் ஆகியவை குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் க.ராசு.

# யு.ஒய்.இ.ஜி.பி. திட்டத்தில் கடன் பெற கல்வித் தகுதி, வயது நீங்கலாக குடும்ப ஆண்டு வருமானம் போன்ற நிபந்தனைகள் எதுவும் உண்டா?

ஆம். நிபந்தனைகள் உண்டு. படித்து வேலை இல்லாதவருக்குத்தான் கடனுதவி வழங்கப்படுகிறது என்றாலும், அவரது குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணியும் கடன் பெற முக்கியமான தகுதியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில், ஏழை இளைஞர்களுக்கான கடனுதவியை வசதி படைத்தவர்கள் பெற்றுவிடக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது.

அதன்படி விண்ணப்பதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பிற மானியத் திட்டங்களின் கீழ் எந்தவொரு வங்கிக் கடனும் பெற்றிருக்கக் கூடாது. வங்கிக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவராகவும் இருக்கக் கூடாது.

# வங்கிக் கடனை திருப்பிச் செலுத்த கால வரையறை உள்ளதா?

மானியத் தொகை நீங்கலாக மீதம் உள்ள தொகையை, கடன் பெற்ற நாளில் இருந்து 5 ஆண்டுகளுக்குள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு திருப்பிச் செலுத்தவேண்டும்.

# இந்த திட்டத்துக்காக எந்த வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன?

அனைத்து வணிக வங்கிகள், அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் மற்றும் தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கிகள் ஆகியன கடனுதவி வழங்குகின்றன.

# யுஒய்இஜிபி திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க விண்ணப்பம் எங்கே பெறுவது?

அந்தந்த மாவட்ட தலைமையகத்தில் இயங்கும் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அவற்றை பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

# விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?

பள்ளி, கல்லூரி மாற்றுச் சான்றிதழ் நகல், சுய தொழில் தொடங்குவதற்காக வாங்கப்படும் இயந்திரங்கள், தளவாடங்களுக்கான விலை மதிப்பீடு (கொட்டேஷன்), சாதிச் சான்றிதழ் நகல், திட்ட அறிக்கை (புராஜக்ட் ரிப்போர்ட்), குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை இல்லையென்றால் வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பிடச் சான்று, முன்னாள் ராணுவத்தினர் அல்லது மாற்றுத் திறனாளி என்றால் அதற்கான சான்று, பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்கள், உறுதிமொழிப் பத்திரம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டியது அவசியம்.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x