Last Updated : 09 Dec, 2016 09:26 AM

 

Published : 09 Dec 2016 09:26 AM
Last Updated : 09 Dec 2016 09:26 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 18: சளைக்காத கதை சொல்லி ஆர்.கே. நாராயணன்!

ஆங்கிலத்தில் நாவல் எழுதுவதில் முன்னோடியான ஆர்.கே.நாரா யணனைப் பாராட்டும் அனைவ ரும் அவர் வாழ்ந்த மைசூரு, அவர் உருவாக்கிய மால்குடி ஆகியவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றனர். அவர் பிறந் தது முதல் 15 ஆண்டுகள் வாழ்ந்த (1906-1921) மெட்றாஸ் அந்த கவனத் தைப் பெறுவதில்லை. இங்கேதான் அவர் எழுதப் படிக்கவும் கதைகளுக்கான கற்பனைச் செறிவுகளை உருவாக்கிக் கொள்ளவும் பயின்றார்.

எழுத்தாளர் களையும் பாரம்பரியங்களையும் மதிக் கும் வகையில் நாம் வசிக்கும் (தமிழ்) நாடு இருந்திருந்தால், அவர் வாழ்ந்த ‘நெ.1. வெள்ளாளர் தெரு, புரசைவாக்கம்’ என்ற இடத்துக்கு முன்னால் அவர் வாழ்ந்த இடம் என்ற சிறு குறிப்புடன் தகவல் பலகை வைக்கப்பட்டிருக்கும். ராசிபுரம் (சேலத்துக்கு அருகில் உள்ள ஊர்) கிருஷ்ணசாமி நாராயணன் (சாமி) இந்த முகவரியில்தான் பிறந்து வளர்ந்தார். 15 வயது வரையில் அவர் வாழ்ந்த வீடு இடித்துத் தரைமட்ட மாக்கப்பட்டிருப்பதுடன் 1980-களின் பிற்பகுதியில் புதிய கட்டிடம் அங்கே எழுப்பப்பட்டது. கீழ் தளத்தில் சரவண பவன் ஹோட்டலும் மற்றொரு பகுதியில் சக்திபிரியா லாட்ஜும்தான் அங்கே இடம்பெற்றன.

அவருடைய தாய்வழி பாட்டனாரின் வீடான அந்த இடத்துக்குக் கிழக்கில், இ.எல்.எம். பேஃப்ரிஷியஸ் பள்ளிக் கூடம் இருந்தது. பிறகு அது மேல் நிலைப் பள்ளிக்கூடமானது. 1849-ல் தொடங்கப்பட்ட அந்தப் பள்ளிக்கூடக் கட்டிடம் 2000-த்தின் தொடக்கத்தில் வலுவிழந்தது. இங்குதான் அவருக்கு முதன்முதலில் வகுப்புத் தோழர்கள் ஏற்பட்டார்கள். ஆசிரியர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று இங்குதான் அவர் அறிந்துகொண்டார். வீட்டுச் சூழ்நிலைக்கும் அப்பால் வெளியுலகம் என்று ஒன்றிருப்பதை இங்குதான் அவர் தெரிந்துகொண்டார்.

சுமார் 75 ஆண்டு களுக்குப் பிறகு இந்தப் பள்ளிக்கூடத் துக்குத் திரும்பி வந்த அவர், தலைமையா சிரியரின் அறையில் ‘வேதநாயகம்’என்ற பெயரைப் பார்த்து வியப்படைந்தார். அவர் காலத்திலும் அந்தப் பெயரில் ஒருவர் தலைமையாசிரியராக இருந் திருக்கிறார். அந்த ஆசிரியர் கண்டிப் புக்குப் பெயர் போனவர். அது அவரா கவே இருக்கக்கூடாது என்று நினைத்த படியே உள்ளே சென்றாராம். வகுப்பு லீடர் கபாலி, பட்டாணி என்று அழைக் கப்பட்ட சாமுவேல் ஆகியோர் அந்தப் பள்ளியில்தான் உடன் படித்தார்கள். அவர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும். ‘சுவாமி அண்ட் ஃபிரெண்ட்ஸ்’ நாவலில், ‘மை டேஸ்’ என்ற சுயசரிதையில், ‘மால்குடி நாட்கள்’ தொடரில் இந்த நண்பர்கள் கதாபாத்திரங்களாக வந்து செல்வார்கள்.

நெ.1. வெள்ளாளர் தெரு வீடு, ஆர்.கே. நாராயணனின் தாய்வழிப் பாட்டனார் திண்டிவனம் ஆர். நாராயணசாமி ஐயரின் வீடு. இங்குதான் நாராயணனுக்கு அவருடைய பாட்டி ‘அம்மணி’பார்வதி சுலோகங்கள், ராகங்கள், கதைகள் ஆகியவற்றைச் சொல்லிக் கொடுத் தார். மிகவும் கண்டிப்பானவர். தன்னு டைய பாட்டிக்குப் பொருத்தமான வேலை பள்ளிக்கூட ஆய்வாளர்தான் என்று பிற்காலத்தில் வேடிக்கையாகக் கூறியிருக்கிறார். நாராயணன் பிறப் பதற்கு சிறிது காலத்துக்கு முன்னதாகத் தான் தாத்தா நாராயணசாமி காலமானார். அவர் ‘வளமான’தாசில்தாராக இருந் திருக்கிறார். வெவ்வேறு மாவட்டங் களில் பணியாற்றியபோது பதவியைப் பயன்படுத்தி நன்றாக ‘வருவாய் ஈட்டியிருக்கிறார்’. அந்த வருவாய்தான் வெள்ளாளர் தெருவில் பல வீடுகளாக முளைத்தன என்று பிற்காலத்தில் எழுதியிருக்கிறார் நாராயணன்.

அதில் சில, நெ.1. வெள்ளாளர் தெருவுக்கு அருகில் கூட இருந்திருக்கக்கூடும். சில பங்களாக்கள் வெள்ளைக்கார துரை மார்களுக்கு வாடகைக்கு விடப்பட்டன. கொஞ்சம் விவசாய நிலமும் இருந்தது. அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இருந்து மெட்றாஸ் மார்க்கெட்டுக்கு காய்கறிகள் சென்றன. 1906-ல் ஆர்.கே. நாராயணன் பிறப்பதற்கு முன்னால் அர்பத்நாட் வங்கியின் வீழ்ச்சியோடு எல்லா செல்வமும் மறைந்தன. ஆனால், பாட்டியின் உறவினரான முழுக் குடும்பமும், வீட்டுக்கு வந்த நிறைய நண்பர்களும் நாராயணன் கதை எழுதுவதற்கு ஆதர்சங்களாக இருந்துள்ளனர்.

நாராயணன் தன்னுடைய இறுதி நாட் களில் ‘தாசில்தார்’ என்ற தலைப்பிலேயே நாவல் எழுதத் திட்டமிட்டிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதற்கு முன்னர், தான் எழுதப்போகும் 16-வது நாவலான தாசில்தார் என்பதன் கதைச் சுருக்கத்தை உடனிருந்தவர்களிடம் தெரிவித்திருக்கிறார். 35,000 வார்த்தை கள் வரக்கூடிய அந்த நாவலை, பாதி சுயசரிதையாகவும் பாதி நாவலாகவும் எழுத திட்டமிட்டிருந்தார். உலகத்துக்குக் கதைகளைச் சொல்வதில் சளைக்காதவர் ஆர்.கே. நாராயணன்.

கவனத்தை ஈர்க்கும் கல்விச் சாலை!

அந்த மெட்றாஸ் கல்வி நிறுவனங்கள் எல்லாம் எங்கே சென்றுவிட்டன? அல்லது அவற்றுக்கு என்ன நேரிட்டுவிட்டது? ஒரு காலத்தில் எல்லா பொதுத் தேர்வு களிலும் தமிழ்நாட்டிலேயே முதல் 3 இடங் கள் அல்லது 10 இடங்களுக்குள் இடம் பிடித்துக் கொண்டிருந்த புகழ் பெற்ற மெட்றாஸ் பள்ளிக்கூடங் களுக்கெல்லாம் என்ன நிகழ்ந்துவிட்டது? கடந்த சில ஆண்டுகளாக இந்தப் பள்ளிக்கூடங்களைப் பின்னுக்குத் தள்ளி விட்டு வேறு பள்ளிக்கூடங்கள் அந்த இடங்களை ஆக்கிரமித்துக்கொண்டுள் ளன. ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய மெட்றாஸ் பள்ளிக்கூடங்கள் இப்போது மேனிலைப் பள்ளி பொதுத் தேர்வுகளில் ஓரிரு பாடங்களில் முதல் 3 இடங்களில் சிலவற்றைப் பிடிக் கின்றன. மாவட்டங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் இப்போது முதலிடங் களை அள்ளுகின்றன. சென்னை மாநகரில்கூட இதுவரை அதிகம் அறிந் திராத பள்ளிக்கூடங்கள் முந்துகின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்னால் மிகவும் தற்செயலாக நான் கேள்விப்பட நேர்ந்த பள்ளிக்கூடம் மேற்கு மாம்பலத்தில் உள்ள வேத பாடசாலை. அது கீழ்த்திசை மேல்நிலைப்பள்ளிக் கூடத்தின் ஓர் அங்கம். அந்தப் பள்ளிக்கூடத்தைக் கடந்து செல்வோரில் பலருக்கு அது படிப்பில் முதன்மையாக இருக்கும் ஒரு பள்ளி என்று தெரிந்திருக்காது. மேட்லி ரோடு பாலத்துக்கு அருகில் இருக்கும் அதற்கு  அஹோபில மடம் கீழ்த்திசை மேனிலைப் பள்ளி என்று பெயர். மேற்கு மாம்பலத்தில் கே.ஆர். கோயில் தெருவில் இருக்கிறது. புள்ளியியல், வணிகவியல், கணிதம், வேதியியல், சம்ஸ்கிருதம், சிறப்பு சம்ஸ்கிருதம், ஆயுர்வேதம் ஆகிய பாடங்களில் இம் மாணவர்கள் மாநில அளவில் ரேங்க் பெற்றுள்ளனர்.

கணக்குப் பதிவியல், இயற்பியல் உள்ளிட்ட பல பாடங்களில் 81 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியிருக்கின்றனர். இம் மாணவர்கள் சம்ஸ்கிருதத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிப்பதால் மாநில அளவில் ரேங்க் பெற்றவர்கள் வரிசையில் சேர்க்கப்படுவதில்லை.

1953-ல்  அஹோபில மடாலயத்தின் 43-வது பட்டம் மத் அழகிய சிங்கர் ஸ்வாமிகள் இந்தப் பள்ளிக்கூடத்தை ஏற்படுத்தினார்.  அஹோபில மடாலய சம்ஸ்கிருத வித்யா அபிவர்தினிசபா இந்தப் பள்ளிக்கூடத்தை நிர்வகிக் கிறது. சம்ஸ்கிருதம் படிக்க முன் வருகிறவர்கள் மட்டுமே இங்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இரு பாலரும் சேர்ந்து பயிலும் பள்ளிக்கூடம் இது. உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மாணவிகளுக்கு பாவாடை - தாவணியும் மாணவர்களுக்கு வேட்டி யும் சீருடைகள். ஆசிரியர்கள் வேட்டியும் ஆசிரியைகள் புடவையும் அணிந்து வரவேண்டும். இங்கு வேதமும் கற்றுத் தரப்படுகிறது. இது மிகவும் கட்டுப்பெட்டியான பள்ளிக்கூடம் என்று நினைத்துவிட வேண்டாம்.

இங்கு கிரிக்கெட், கோ-கோ, செஸ் போன்ற விளையாட்டுகளைப் பயின்று மாநில அளவில் முத்திரை பதித்தவர்களும் உண்டு. பாடம் படிப்பதுடன் விளையாட்டு, இசை உள்ளிட்ட பிற கலைகளிலும் முத்திரை பதிக்க மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்கும் தரமான பள்ளிக்கூடம் இது.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x