Published : 08 Dec 2016 10:14 AM
Last Updated : 08 Dec 2016 10:14 AM

உதய் ஷங்கர் 10

இந்திய நாட்டியக் கலையின் முன்னோடி

உலகப் புகழ்பெற்ற இந்திய நாட்டியக் கலைஞர் உதய் சங்கர் (Uday Shankar) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிறந்தார் (1900). தந்தை, பிரபல வக்கீல். பணி தொடர்பாக தந்தை அடிக்கடி வெளியூர் சென்று விடுவதால் குழந்தைகள் பெரும்பாலும் மாமா வீட்டில் வளர்ந்தனர். நஸ்ரத்பூர், காஜிபூர், வாரணாசி, ஜாலாவாட் ஆகிய இடங்களில் ஆரம்பக்கல்வி பயின்றார்.

* 1918-ல் ஜே.ஜே.ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் கந்தர்வ கல்லூரியிலும் பயின்றார். 1920-ல் பிரிட்டன் சென்ற இவர், லண்டன் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸில் சேர்ந்தார். அங்கே தொண்டு அமைப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக, தன் அப்பா ஏற்பாடு செய்த சில நிகழ்ச்சிகளில் இவர் நடனம் ஆடினார்.

* லண்டனில் பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவை இவர் சந்தித்தது, இவரது வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தச் சந்திப்பை அடுத்து பாலே நடனம் கற்றார்.

* இருவரும் இணைந்து ‘ராதா-கிருஷ்ணா’ மற்றும் ‘ஹிந்து-வெட்டிங்’ உள்ளிட்ட பல நாட்டிய நாடகங்களைத் தயாரித்து அரங்கேற்றினர். இந்தியப் பாரம்பரிய, நாட்டுப்புற, பழங்குடியின நடன பாணிகளின் அம்சங்கள், ஐரோப்பிய பாலே நடனம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு புதிய நாட்டிய பாணியை உருவாக்கினார். இதை இவர் ‘ஹய்-டான்ஸ் (Hi-dance)’ என்று குறிப்பிட்டார். ஃப்யுஷன் பாணி நடனத்தை உருவாக்கியவரும் இவர்தான்.

* இவரது நடன பாணியால் கவரப்பட்ட ரவீந்திரநாத் தாகூரின் வேண்டுகோளின்படி, 1929-ல் இந்தியா திரும்பி, சொந்த நாட்டியக் குழுவை உருவாக்கினார். 1931-ல் பாரீஸ் சென்று, அங்கு முதல் முறையாக இந்திய நடனக் கம்பெனியைத் தொடங்கினார்.

* 1932 முதல் 1960 வரையிலான காலகட்டத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் தன் ‘உதய் ஷங்கர் அன்ட் ஹிஸ் ஹிண்டு பாலட்’ என்ற நாட்டியக் குழுவின் மூலம் ஏராளமான நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். இதற்கு போதிய வரவேற்பில்லை.

* ஆனால், இளைஞர்கள் இவரது புதிய பாணியால் கவரப்பட்டனர். 1938-ல் உத்தரப்பிரதேச மாநிலம் அல்மோராவில் ‘உதய் ஷங்கர் இந்திய கலாச்சார மையம்’ என்ற பெயரில் நடனப் பள்ளியைத் தொடங்கினார். ஏராளமான இளைஞர்கள் இதில் சேர்ந்தனர்.

* இவர் அரங்கேற்றிய ராமாயண காவிய நாட்டிய நாடகம் வரவேற்பைப் பெற்றது. தாண்டவ நடனம், சிவ-பார்வதி நடனம், லங்கா தகனம், ‘ரிதம் ஆஃப் லாஃப், ஸ்ரம் அவுர் யந்த்ர’, ராம்லீலா மற்றும் பகவான் புத்தர் ஆகிய தலைப்புகளில் நவீன நாட்டிய பாணியை உருவாக்கினார்.

* பிரான்ஸ் நாட்டின் உதவித்தொகை பெற்று ‘ப்ரிக்ஸ் டீ ரோம்’ கலையை முழுமையாகக் கற்பதற்காக ரோம் சென்றார். இந்தியப் பாரம்பரிய இசையை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பரவச் செய்த பண்டிட் ரவி ஷங்கர் இவரது தம்பி.

* பத்ம விபூஷண் விருது, சங்கீத நாடக அகாடமி விருது, சங்கீத நாடக அகாடமி ஃபெலோஷிப், விஸ்வபாரதி அமைப்பின் ‘தேஷிகோத்தம் சம்மான்’ விருது உள்ளிட்ட பல விருதுகளையும் கவுரவங்களையும் பெற்றார். இந்திய நவீன நாட்டியக் கலையின் முன்னோடி என்று போற்றப்பட்ட உதய் ஷங்கர், 1977-ம் ஆண்டு மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x