Last Updated : 20 Nov, 2016 11:51 AM

 

Published : 20 Nov 2016 11:51 AM
Last Updated : 20 Nov 2016 11:51 AM

மன்னர் கலாட்டா: அரண்மனை 3

மகத நாட்டு மன்னருக்கு மண்டை காய்ந்தது.

செஞ்சது சரியா? தப்பா?

மந்திரிகள் வழக்கம்போல் ‘ஆஹா.. ஓஹோ’ என்றனர். மன்னரும் மகிழ்ச்சி யில் மக்களுக்குத் தலைவணங்கினார்.

ஆனால், அடுத்தடுத்த நாட்களில் மன்னர் செஞ்ச காரியத்துக்கு எதிராக நாட்டுக்குள் பெரும் கூச்சல். உள்காயம் பட்ட தலைவர்கள்தான் உரக்கக் கத்து கிறார்கள் என்று உளவுப் படை சொன்னது.

மகத நாட்டு ஆளுகைக்குட்பட்ட குறுநில ஜமீன்கள்கூட மன்னரை முதலில் பாராட்டினர். ஆனால் அவர்களும் ‘மக்களே.. மக்களே.. பாவம் மக்களே..’ என அபஸ்வரத்தில் இப்போது அலறத் தொடங்கி விட்டதால் குழப்பம்.

மன்னருக்கு வரலாற்றுப் புகழ் கிடைத்துவிடுமோ என்ற அச்சத்தில் அவதூறுகள் அவிழ்த்து விடப்பட்டன. எந்த மன்னனாக இருந்தாலும் எதிர்ப்பாட்டு பாடியே பழக்கப்பட்ட சில அதிமேதாவி புலவர்கள் மன்னருக்கு எதிராக கிறுக்கினர்.

மகத நாட்டு மன்னர் செய்த காரியம் மகத்தானது என்று அண்டை நாடுகள் ஆர்ப்பரித்தன.

ஆனாலும் மன்னருக்கு மண்டை காய்ந்தது.

செஞ்சது சரியா? தப்பா?

மந்திரிகளை அழைத்தார். அரசவை அறிஞர்கள் புடைசூழ ஆலோசனை நடந்தது. மக்கள் நினைப்பதை மந்திரி களாலும் அறிஞர்களாலும் அறுதியிட் டுக் கூற முடியவில்லை.

‘மன்னா.. மாறுவேஷத்தில் போய் மக்கள் மனநிலையை அறிந்தால் எப்படி இருக்கும்?’ என்று யோசனை சொன்ன மந்திரியை மன்னர் கட்டித் தழுவி உச்சிமுகர்ந்தார்.

வேஷம் கட்டிக்கொண்ட மன்னருடன் பிரதான மந்திரியும் ஒட்டிக்கொண்டார். அரண்மனையை விட்டு வெளியேறினர்.

நாட்டின் தலைநகரிலேயே பெருங் கூட்டம். இருவரும் கூட்டத்தில் கலந்து நின்றனர்.

ஆவேசமாகப் பேசினார் ஒரு கணவான்.

‘அவசர கோலத்தில் எந்த முன்னேற் பாடும் இல்லாமல் மன்னர் இந்த காரி யத்தை செய்துவிட்டார். அரண்மனை யில் சிலருக்கு இது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது. அப்பாவி மக்களை அல்லாட வைத்துவிட்டு அரண்மனை யில் இல்லாமல் மன்னர் எங்கோ சென்றுவிட்டார். நாப்பத்தெட்டு மணி நேரம் அவகாசம் தருகிறோம். அதற்குள் மக்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு மன்னர் தனது அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும்.’

நினைத்தது மாதிரியே நடப்பதை நினைத்துச் சிரித்தார் மன்னர். மந்திரிக்கு ‘உள்காயம்’ புரிந்தது. அவரும் சேர்ந்து சிரித்தார்.

அடுத்ததாக நகரின் மையப்பகுதிக்கு வந்தனர்.

உச்சி வெயில்.. வளைந்து நெளிந்து சாலை நெடுக மக்கள் வரிசை கட்டி நின்றனர். மக்களின் அவஸ்தையைக் கண்ட மன்னருக்கு, மனசு பிசைந்தது.

வரிசையில் மந்திரியுடன் சேர்ந்து நின்றார்.

‘நல்லது கெட்டதுக்கு போக முடியல.. நாடகம் பாக்க முடியல.. நாள்பூராம் காத்துக் கெடக்கோம்..’ என்று சலித்துக்கொண்ட ஒரு பெண்ணிடம் மன்னர் பேச்சுக் கொடுத்தார்.

‘மன்னர் செஞ்ச காரியத்தப் பத்தி நீங்க என்னம்மா நெனய்க்கிறீங்க?’

‘ஆங்.. அதுபத்தி சொல்ற அளவுக்கு எனக்கு வெவரம் பத்தாது. ஆனா, பொதுவா அவரு செஞ்சது நாட்டோட நல்லதுக்காகத்தான்னு எல்லாருஞ் சொல்றாங்க.. வெலவாசிலாம்கூட கொறயும்கிறாங்க.. அதுக்காக கொஞ்ச நாளு கஷ்டப்பட்டா தப்பில்லன்னு பேசிக்கறாங்க..’

மக்கள் மீது மன்னருக்கு நம்பிக்கை வந்தது. வரிசையில் தானாகவே பேச்சு களைகட்டியது.

‘மன்னர் செஞ்சது சரின்னே வச்சுக்குவோம். நாங்கதான வரிசைல வந்து அல்லாடறோம். மந்திரிங்க நிக்கிறாங்களா.. அதிகாரிங்களுக்கு அவஸ்த இல்லியே.. பணக்காரங்க பங்களாவ விட்டு வெளிய வரலியே.. அவங்களுக்குலாம் மன்னரு சகாயம் பண்ணிட்டாரோன்னு சந்தேகம் இருக்கே..’ என்றார் ஒரு பெரியவர்.

பேச்சில் மந்திரி புகுந்தார்.

‘பெரியவரே.. அவர்கள் தொழில் நுட்பம் அறிந்தவர்கள். அரசாங்கம் சொன்னபடி நேரிய வழியில் அவர்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது. வரிசைக்கு அவர்கள் வராமல் இருந்தாலும் மன்னருடைய முயற்சிக்கு வெற்றிதான். முறைகேடாக அவர்கள் தடம் மாறினாலும் அரசாங்கத்தின் பார்வையில் இருந்து ஒருபோதும் தப்ப முடியாது. உங்களை திசைதிருப்ப சிலர் கிளப்பி விடுவதை நம்பிவிடக் கூடாது.’

‘தம்பி.. அப்ப அவங்களுக்கு மன்னர் பக்காவா வழி பண்ணிக் குடுத்துட்டாருன்னுதானே அர்த்தம். ஏழ பாழைங்கதான தெருவுல திரியுது. உங்க பேச்சப் பாத்தா, மன்னர் ஆளு போலத் தெரியுதே..?’

பெரியவர் சந்தேகப்பட்டதும் வரிசையில் பதுங்கினார் மந்திரி.

ஆஜானுபாகுவான ஒருத்தர் குரலை உயர்த்தினார்.

‘ஏங்க.. எதெதுக்கோ வரிசைல நிக்கிறோம்.. முண்டியடிக்கிறோம்.. நாட்டுல ஒரு நல்லது நடக்கணும்னு மன்னரு துணிஞ்சி ஒரு காரியத்த செஞ்சிருக்காரு.. காத்துக் கெடந்தா கருகியா போவம்.. கொஞ்சம் பொறுத்துத்தான் பாப்பமே..’

பெரியவர் மட்டும் முறைத்தார். மற்றபடி, வரிசையில் பெரும்பாலும் தலைகள் ஆடின. நிறைய தலைகள் ஆடியதால், மன்னருக்கு மனசு ஜிவ்வென்றிருந்தது.

மன்னரும் மந்திரியும் வரிசையை விட்டு விலகி, தேநீர் கடைக்கு சென்றனர்.

ஊர்ப் பொருளாதாரம், உலகப் பொருளாதாரம் தேநீர் கடையில் உருளுவதைக் கண்டு, ‘நம் மக்களா இவர்கள்?’ என்று மன்னரே சற்று அதிர்ந்தார்.

தேநீரை உறிஞ்சிக்கொண்டே ஒரு இளைஞர் பேசினார் -

‘நாட்டு நிலைமைய நமக்கு தோதா மாத்துவோம்ப்பா. நம்ம தயவு இப்ப பணக்காரங்களுக்குத் தேவப்படுதுல்ல. அவங்களும் நல்லா இருக்கட்டும். நம்மளும் வாய்ப்ப பயன்படுத்திக்கிட்டு அவங்கள வச்சு முன்னுக்கு வரலாம்ல..’

மற்றொரு இளைஞர் முகத்தில் இன்னும் பிரகாசம்.

‘எனக்குத் தெரிஞ்ச ஒரு அதிகாரி இருக்கார்.. ஊருக்கு போக ரெண்டு வழின்னா இந்த அதிகாரிக்கு நாலு வழி தெரியும். கட்டி, நெலம், பாலுன்னு எதாச்சும் ஒண்ணுல அவரக் கெட்டியா புடிச்சுக்கிட்டாப் போதும். நூறு சதவீதத்துல நமக்குனு கண்டிப்பா முப்பது சதவீதமாச்சும் வளர்ச்சி இருக்கும். இதை எந்த மன்னராலும் தடுக்க முடியாது.’

மன்னருக்கு லேசாக கிறுகிறுத்தது. மந்திரி அவரை அங்கிருந்து வேறு இடம் நோக்கி அழைத்துச் சென்றார்.

கோஷங்களும் கொடிகளும் வானுயரப் பறந்தன.

கூட்டமாய் நின்றிருந்த மக்களிடம் குறைகளை சிலர் எஜமானன்கணக்காய் கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘மன்னன் நானிருக்க, இந்த மக்கள் ஏன் யாரிடமோ குறைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்?’ என்று மந்திரியிடம் கேட்டார் மன்னர்.

‘மன்னா.. நீங்கள் செஞ்ச காரியத்தால் இந்த மக்கள் பாதிக்கப்பட்டு விட்டார்களாம். அதனால் இவர்கள் துடித்துப்போய் ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்..’

‘இதை இந்த மக்கள் நம்புகிறார்களா மந்திரியாரே?’

‘அதை நீங்களே அருகில் வந்து பாருங்களேன் மன்னா’

- மந்திரி அழைத்த இடத்துக்கு சென்றார் மன்னர்.

கூட்டத்தில் பேசியது மன்னர் காதில் தெளிவாக விழுந்தது.

‘நம்ம கஷ்டத்தப் பாத்து என்னமா பொங்குறாங்கப்பா.. மன்னருக்கு தக்க பாடம் புகட்டணுமாம்.. என்ன நடிப்புடா சாமி! மன்னர் வச்ச ஆப்புல எந்தப் பக்கட்டும் தப்பிக்க முடியல. உள்காயம் வெளிய தெரியாம நாட்டுல குழப்பம் பண்ண முடியுமான்னு பாக்குறாங்க.. நீதியாம்.. தர்மமாம்.. எல்லாப் பரிபாலனங்களும் அப்பாவிங்கள பணயமா வச்சு.. குட்டையக் குழப்பி மீன் பிடிக்க அலையறாங்க.. நாடே அல்லாடுற மாதிரி காட்டப் பாக்குறாங்க.. இனியும் ஏமாறக் கூடாது..’

மன்னரின் கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்டியது.

வேஷத்தைக் கலைத்து அரண்மனை திரும்பினார் மன்னர். அரசவையைக் கூட்டினார்.

‘நான் செஞ்ச காரியம் தப்பில்லை என்று உணர்கிறேன். இருந்தாலும் கஷ்டங்கள் கொடுத்துவிட்டதால், மக் களின் கோபத்துக்கு ஆளாகி வருவ தைக் கண்கூடாகக் கண்டுவிட்டேன்.. ஏழைகள் வழக்கம்போல ஏழை களாகவே இருக்கிறார்கள். அவர்களின் நடவடிக்கையும் யதார்த்தமாகவே இருக்கிறது.

பணக்காரர்கள் அவர்களின் குணத்தை சிறிதும் மாற்றிக் கொள்ள வில்லை. கூட்டம் கூடிக் குழப்ப அரசியல் செய்யும் மேட்டுக்குடி மக்க ளுக்கு எதாவது அதிர்ச்சி வைத் தியம் கொடுக்க வேண்டும்.. யாராச் சும் நல்ல யோசனையாகச் சொல்லுங் கள்..’ என்று மடமடவென பேசினார் மன்னர்.

அரண்மனையிலிருந்து மன்னர் சார் பில் அடுத்த அறிவிப்பு வெளியானது -

மன்னரின் காரியத்துக்கு முட்டுக் கட்டை போடும் வகையிலும் அப்பாவி களை குழப்பும் வகையிலும் நாட்டுக்கு எதிராக யாரேனும் செயல்பட்டால் அவர்களுக்கு அரண்மனை ஊழியர்கள் மூலம் கண்டிப்பான ‘உபசரிப்பு’ வழங்கப்படும்.

பத்து இஞ்சி, பத்து பச்சை மிளகாயைக் கடித்து தின்றுவிட்டு, பத்து சொம்பு நில வேம்பு கசாயத்தை அரண்மனை ஊழியர்கள் கண்முன்னேயே குற்றம் புரிபவர் குடிக்க வேண்டும். பின்னர் அவருடைய நாக்கில் மன்னர் படம் பச்சை குத்தப்படும்!

மகத நாடெங்கும் தண்டோரா ஒலித்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x