Last Updated : 25 Nov, 2016 10:08 AM

 

Published : 25 Nov 2016 10:08 AM
Last Updated : 25 Nov 2016 10:08 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 16: ஜெய்பூர், கிப்ளிங் கணங்கள்!

சென்னையில் அடையாறு ஆற்றின் மீது கட்டப்பட்ட எல்பின்ஸ்டன் பாலத்தை அழகுபடுத்தும் பணி ‘எக்ஸ்னோரா’அமைப்புக்குக் கொடுக்கப்படும் என்று (29.05.2000) தமிழக அரசு அறிவித்தபோது மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். எல்பின்ஸ்டன் பிரபு சென்னை மாகாண கவர்னராக (1837-1842) பதவி வகித்தபோது அந்தப் பாலம் 1840-ல் கட்டப்பட்டது. பாலத்தின் அகலம் 11 மீட்டர். 1973-ல் அப்பாலத்துக்கு அருகிலேயே திரு.வி.க. பெயரில் புதிய பாலம் கட்டப்படும்வரை எல்பின்ஸ்டன் பாலம்தான் வட, தென் சென்னைகளை இணைக்கும் முக்கிய கண்ணிகளில் ஒன்றாக இருந்தது.

போக்குவரத்துக்குப் பயன் படுத்தப்படாமல் கைவிடப்பட்ட இப் பாலத்தை அழகுபடுத்தவும் பயனுள்ள வகையில் பயன்படுத்தவும், ‘கலை - பாரம்பரியச் சின்னங்களுக்கான இந்திய தேசிய அறக்கட்டளை’ முதலில் திட்டம் தீட்டியது. வங்கக் கடலில் அடையாறு ஆறு கலக்கும் இந்த இடம் பறவைகளின் சரணாலயமாகும். அத்துடன் இயற்கை எழில் பூத்துக் குலுங்கும் இடமுமாகும். இந்தப் பாலத் தில் இருந்து பறவைகளைப் பார்த்து ரசிக்கவும், பாலத்தின் மீது காலாற நடக்கவும் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை அமல்படுத்தினாலும் பாலத்தைச் சுற்றியுள்ள விளம்பர போர்டு கள் அழகைக் குலைப்பதுடன், திட்டம் வெற்றிபெறத் தடையாக இருக்கும் என்று அறக்கட்டளை கருதியது. இங்கே விளம்பரப் பலகைகளை நிரந்தரமாக அகற்றி பறவைகள், தாவரங்கள் உள்ளிட்ட இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் விருப்பம்.

இந்தத் திட்டத்துக்கு யாராவது நன் கொடை கொடுத்து செலவை ஏற்றுக் கொண்டால் நன்கு செயல்படுத்தலாம் என்று தேசிய அறக்கட்டளைக் கருதியது. பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வசதி யாக இருக்கைகளைப் போடுவது, பறவைகளைக் கூர்ந்து கவனிக்க உரிய சாதனங்களை அமைப்பது, காலாற நடக்கும் இடம் தூய்மையாகவும் தடைகள் இல்லாமலும் இருக்க தரையை மேம்படுத்துவது அவற்றில் அடக்கம். இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சியிடம் அளிக்கப்பட்டது. இந்தப் பணி தங்களிடம் ஒப்படைக்கப் படும் என்று ‘எக்ஸ்னோரா’ எதிர்பார்த் தது. இந்தப் பாலத்தையும் சுற்றியுள்ள இடங்களையும் அழகுபடுத்தும் அமைப்பு, தன்னுடைய பெயரை மிகப் பெரியதாக பொறித்துக்கொள்ளக் கூடாது என்று அறக்கட்டளை விதித்த ஒரு நிபந்தனை குறிப்பிடத்தக்கது.

பாலத்தில் இருந்து பார்க்கும்போது தெரியும் அத்தனை இடங்களையும் சேர்த்து ‘பாதுகாக்கப்பட்ட வனப் பகுதி’ என்று அறிவித்துவிட வேண்டும்.

150-க்கும் மேற்பட்ட பறவையினங் களுக்குப் பிடித்த இடம் இந்தப் பகுதி. 70 பறவை ரகங்கள் வலசைக்குத் தேர்வு செய்துள்ள இடம் இந்த முகத்துவாரம். 50-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் இங்கே முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. ஏராளமான பிராணிகள், ஊர்வன, மீன் இனங்கள், பூச்சிகள் இங்கே நீரிலும் சுற்றியுள்ள வனப் பகுதியிலும் வசிக்கின்றன. இப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் பல்லாண்டு களாகத் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். 1990 - முதல் அப்படிக் கோருபவர்கள்கூட மவுனம் சாதிக்கத் தொடங்கிவிட்டனர். காரணம் அதிகாரத் தில் இருப்பவர்கள் இதை காதுகொடுத் துக் கேட்கத் தயாரில்லை. இந்த இடம் புதுப்பிக்கப்பட்ட ‘உலா சாலை’யாக மேம்படுத்தப்பட்டாலாவது பாதுகாக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேரக்கூடும். நகரின் பொழுதுபோக்கு இடங்களில் இது முக்கிய இடத்தைப் பிடிக்க முடியும்.

கொசுறுச் செய்தி:

எல்பின்ஸ்டன் பாலத்துக்குப் பக்கத்திலேயே புதிய பாலம் கட்டப்பட்ட பிறகு, 1970-களின் பிற்பகுதியில் நடந்த ஒரு சம்பவத்தை இன்றைக்கு எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை. மாவட்ட நகரம் ஒன்றிலிருந்து மெட்றாசுக்கு வந்த பணக்காரர் ஒருவரின் அப்பாவித்தனத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு எத்தர், பயன்படாத இந்தப் பாலத்தை 10,000 ரூபாய்க்கு நைச்சியமாகப் பேசி விற்றுவிட்டார்! இதை நான் சொன்னால் பலர் நம்ப மறுக்கின்றனர். நீ ஏதோ கதை அளக்கிறாய் என்று கேலி பேசுகின்றனர். இதற்கு ஆதாரமாக நீதிமன்ற வழக்கு ஆவணங்கள் இருக்கின்றன. அப்படி ஏய்த்தவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாகக் கூட எனக்கு நினைவு.

ஜெய்பூர், கிப்ளிங் கணங்கள்!

கோபாலபுரம், பெசன்ட் நகரில் 2 பழைய வீடுகள் சமீபத்தில் புதிய பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜெய்பூர் மகாராஜா வுக்கு கோபாலபுரத்தில் இருந்த வீட்டை வாங்கிய கிரண் வேலகபுடி, அதை ‘அமீதிஸ்ட்’ என்ற பெயரில் கடையாக்கிவிட்டார். இந்த ஜெய்பூர், ராஜஸ்தான் தலைநகரம் அல்ல. இது ஒடிஷா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ளது. ஜெய்பூர் மகாராஜா கோபாலபுரத்தில் கட்டிய வீட்டில் கூட ‘ஹவா மஹால்’ உண்டு. ஜெய்பூர் அரண் மனை போல கோபாலபுரம் வீடு பெரிது இல்லை என்றாலும் இதை வேறுவித மான அரண்மனையாக மாற்றிவிட கிரண் விரும்பினார். கலைப் பொருட்கள், கைவினைஞர்கள் தயாரிக்கும் அணி கலன்கள், பல்வேறு உலோகங்களில் தயாரிக்கப்படும் நகைகள், ஜவுளிகள் போன்றவற்றை விற்பனை செய்தார். அந்த வீட்டின் வராந்தாவில் தேநீர் அகத்தையும், சமையலறையையும் அமைக்க திட்டமிட்டார். மேல் மாடியில் நடனக்கூடம் அமைக்க வேண்டும் என்பதும் அவருடைய திட்டம். இந்த இடம் மக்கள் அடிக்கடி வந்துபோகும் விற்பனைக்கூடமாக மாற வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தினார்.

ருட்யார்ட் கிப்ளிங் மீண்டும் மெட்றாஸுக்கு வந்துவி்ட்டதை பெசன்ட் நகர் சென்றால் பார்க்கலாம். அந்த இடம் மிகவும் புதிதும் பெரிதுமான வீடு. கிப்ளிங் பெயருடன் அண்ட் கோ, ஆர்ட்ஸ் என்ற வார்த்தைகளும் பெயர்ப் பலகையில் சேர்ந்துள்ளன. இதுவும் கலைப் பொருட்கள், ஜவுளி, அறைகலன்கள் போன்றவற்றை விற்கும் இடமாகும். இதையெல்லாம் நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பீர்கள் என்பதால் நான் மீண்டும் அதையெல்லாம் எழுதவில்லை. கிப்ளிங் வந்து பார்க்க நேரமில்லாத ஊரில் அவருக்கு மறுவாழ்வு கிட்டியிருக்கிறது.

காலனியாதிக்கக் காலத்தில் தயாரிக்கப்பட்ட அறை கலன்கள்தான் கிரஹாமும் டேவன் போர்ட்டும் ஏற்படுத்தியுள்ள ஜெய்பூர், காரைக் குடி பட்டறைகளில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த டேவன்போர்ட், ‘ரக்பி’ என்று அழைக்கப்படும் ஒருவகை கால்பந்தில் விருப்பம் மிகுந்தவர். காரைக்குடியில் பெரும்பாலான நேரத்தை உற்பத்திக் கூடத்தில் செலவிடுவார். மெட்றாஸில் இருக்கும் காலத்தில் ரக்பிக்காகச் செலவிடுவார். அதை நகரில் பிரபலப் படுத்த வேண்டும் என்பது அவருடைய விருப்பம்.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x