Last Updated : 16 Oct, 2016 11:20 AM

 

Published : 16 Oct 2016 11:20 AM
Last Updated : 16 Oct 2016 11:20 AM

சிகிச்சை கலாட்டா: முடிசூடா மன்னன்

‘சிகிச்சைக்கு முன்.. சிகிச்சைக் குப் பின்..’

என்னமோ தெரியலை.. கொஞ்ச நாளாவே இந்த விளம்பரத்தை பார்க்கும்போதெல்லாம் விக்கிக்கு அப்படி ஒரு ஏக்கம்.

மெட்ராஸில் இருக்கிற தன் பிரெண்டு வணங்காமுடிக்கு போன் பண்ணி விவரம் கேட்ட கையோடு, ரயில் ஏறினான்.

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை..

சேரனில் வந்தவனை அப்படியே முடிச்சூருக்கு கூட்டிட்டுப் போனான் வணங்காமுடி.

முகம் மலர ரிசப்ஷனிஸ்ட் வரவேற்றார்.

‘யாருக்கு ட்ரீட்மெண்ட்..?’

‘இவருக்குத்தான் மேடம். பேரு விக்கி.. சேலத்துக்குப் பக்கத்துல சவுரிபட்டிலர்ந்து வந்துருக்கார்..’ என்று வணங்காமுடி சொன்னான்.

‘நீங்க ரிசப்ஷன்லியே இருங்க.. விக்கி சார் உள்ள போங்க.. ஒங்கள பெர்சனாலிட்டி டீம்லர்ந்து யாராச்சும் மீட் பண்ணுவாங்க..’

விக்கி மட்டும் உள்ளே போனான். நடுவில் ஹால்.. நாலு பக்கமும் ரூம்கள். சோபாக்களில் பலர் சரிந்து அமர்ந்திருந்தனர். தலைக்கு மேலே ‘சர்வீஸ்’ பண்ண வந்தவங்களாம். படுரிலாக்ஸாக கையில் ‘தலை’யை வைத்திருந்தார்கள்.

சுவர் முழுக்க பெரிய பெரிய போட்டோக்கள்.

பைக்கில் ஜாலியாக செல்லும் லவ் ஜோடி..

சிகிச்சைக்குப் பின்..

சிகிச்சைக்கு முன்..

பீச்சில் எதிரும் புதிருமாக உட்கார்ந்திருக்கும் லவ் ஜோடி..

‘ஹாய் விக்கி.. ஐயாம் திருமுடி வாசன்.. ஒங்க பெர்சனாலிட்டிக்கு நாங்க இருக்கோம்..’ என்றபடி சரீரத்தை சாய்த்து விக்கியிடம் கைகுலுக்கினார்.

‘ஆங்.. வணக்கம் சார்.. வீட்ல எனக்கு அலையன்ஸ் பாத்துக்கிட்ருக்காங்க.. பொண்ணு எதுவும் அமையல.. ஒங்க வெளம்பரம் பாத்தேன்.. தலையக் கொஞ் சம் சரிபண்ணிக்கிட்டா சீக்கிரமா ஓகே ஆகுமோன்னு தோணுச்சு.. அதான்..’

‘குட்.. ரொம்ப சிம்பிளா சொன்னீங்க விக்கி.. சின்னச் சின்ன விஷயங்கள்ல எடுத்துக்கிற அக்கறைதான் நம்ம பெர்சனாலிட்டிய தூக்கிக் காட்டும். வாங்க.. ஃப்ரீயாப் பேசலாம்.. ’னு சொல்லி 3-ம் நம்பர் ரூமுக்குள் விக்கியை அழைத்துச் சென்றார் திருமுடிவாசன்.

‘சிகிச்சை.. சிகிச்சைன்னு சொல்றீங் களே.. ஊசி போடறது.. மருந்து மாத்திரை குடுக்குறதுன்னு முடி வளர எதுனா செய்வீங்களா?’

‘நோ.. நோ விக்கி.. ஜஸ்ட் ஒங்க ஹேர் சாம்பிள் எடுப்போம். நீங்க என்ன மாதிரி உச்சி எடுத்து சீவ விரும்புறீங்களோ, அதே மாதிரி ஹேர் பஞ்ச் ரெடிபண்ணிக் குடுப்போம்.’

‘ஓ.. டோப்பா முடியா?’

‘அத அப்டிச் சொல்லக் கூடாது.. ஹேர் பேஸ்ட்டிங்.. ஹேர் பாண்டிங்.. ஹேர் வீவிங்..னு சொல்லிப் பழகணும்.’

‘விக்குக்கு இம்புட்டு பேருங்களா?’

‘விக்கி.. ஹேர் பஞ்ச்சை ஒட்டிக்கலாம்; கிளிப் போட்டுக்கலாம்.. நம்மகிட்ட இந்த ரெண்டு சிகிச்சையும் இருக்கு.. இங்கே வீவிங் பண்றதில்ல..’

‘இது பொம்பளைங்க சவுரிமுடி வச்சுக் கிற மாதிரி இருக்காதுல்ல..?’

‘அய்யோ விக்கி.. அதுலர்ந்து மொதல்ல வெளிய வாங்க.. இதெல்லாம் வேற மாதிரி.. செஸ் பிளேயர் நம்மகிட்ட தான் சிகிச்சை எடுத்துருக்கார்.. ஆல் இண்டியாவே கொண்டாடுதே.. அந்த நடிகருக்கு நாமதான் பாண்டிங் பண்ணி ருக்கோம்.. நம்ம சிகிச்சைக்கு பின்னாடி லவ் பண்ணி இந்த வருஷத்துல மட்டும் 40 கல்யாணம் நடந்துருக்கு..’

‘அப்டியா!’

மெல்லச் சரிந்தான் விக்கி.

‘100 கி.மீ. வேகத்துல பைக்ல போனா லும் நம்ம பாண்டிங் கொஞ்சங்கூட பறக்காது.. படுத்துப் பொரளலாம். பாஞ்சு புடிக்கலாம்.. பக்காவா இருக்கும் பாண்டிங்.. ஃபர்ஸ்ட் குவாலிட்டி 7000. இம்போர்ட்டட் 10,000. அக்ஸஸரீஸ் 500 ரூபா.. மூணு மாசத்துக்கு ஒருவாட்டி சர்வீஸுக்கு வந்தாப் போதும்.. சர்வீஸ் சார்ஜ் 400 ரூபா’

‘ஆட்டோமொபைல்ஸ் ஓனர் மாதிரியே பேசுறீங்களே..?’

‘ஒங்களுக்கு ஹ்யூமர் ஜாஸ்தி விக்கி..’

‘சைடு எஃபெக்ட் எதுனா இருக் குமா?’

‘நத்திங்! குளிக்கறப்ப.. தூங்கறப்போ கழட்டி ஆணில தொங்க விட்டுறலாம். உச்சி வெயில்ல வேர்த்து அரிச்சாக்கூட கவலையில்ல.. அங்கனயே கிளிப்ப கழட் டிட்டு அஞ்சு நிமிஷம் சொரிஞ்சுக்கலாம். அந்தளவுக்கு எல்லாமே ஈஸி..’

‘அய்ய.. இது பெர்மனண்ட்டா தலைல இருக்காதா?’

‘முடிஞ்சா.. கழட்டாம யூஸ் பண்ணிப் பாருங்க..’

‘ஓ.. அந்தளவுக்கு டார்ச்சர் ஆயிடுமா.. முடி விஷயத்துல எந்த முடிவும் எடுக்க முடியலியே..’

‘எந்தக் கொழப்பமும் வேணாம் விக்கி. இப்பக்கூட நீங்க டீக்கா டிரஸ் பண்ணிருக்கீங்க.. ஆனாலும் பாருங்க, அம்மாஞ்சியாத் தெரியறீங்க.. இந்தக் காலத்துல கேர்ள்ஸ் ரொம்ப ஷார்ப்பு.. உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரைக்கும் பாத்துத்தான் ஓகே சொல்லு துங்க.. ஒங்களப் பொறுத்தவரைக்கும் அதுங்க பார்வை உச்சந்தலையிலயே நின்னுரும்போல.. இப்டி சொல்றே னேன்னு தப்பா எடுத்துக்காதீங்க..’

மீண்டும் சரிந்தான் விக்கி.

‘என்ன வேணா ஆகட்டும். நானும் சிகிச்சை எடுத்துக்கறேன்..’

‘வெரிகுட் விக்கி.. ஒங்களுக்கு பெர்சனாலிட்டி கன்சல்டேஷன் முடிஞ் சுருச்சு.. 4-ம் நம்பர் ரூமுக்கு போங்க.. டெஸ்ட்டிங் டீம் ஒங்கள பாப்பாங்க..’

சற்றே சோர்ந்திருந்த விக்கி, மெல்ல எழுந்து அந்த ரூமுக்கு போனான்.

சைனீஸ் கேர்ள்ஸ் வரவேற்றார்கள். ரூம் கதவை நன்றாக சாத்திக் கொண்டார்கள்.

காதோரம் இருந்த கொஞ்சூண்டு முடியில் சாம்பிள் எடுத்தார்கள்.

ஒரு பொண்ணு வேகமாக வந்து விக்கியின் முகத்தில் தண்ணீரை ஸ்பிரே பண்ணி டிஸ்ஸு பேப்பர் வைத்து ஒத்தி எடுத்தது. பின்னர் உடம்பில் கருப்புத் துணியைப் போர்த்தியது.

‘ஏங்க.. சிகிச்சைய ஆரமிச்சுட்டீங் களா?’

மிரண்டு போய் கேட்டான் விக்கி.

‘ஹே.. ஹே..’னு ஒரே சிரிப்பு.

‘அய்ய.. ஒங்க யாருக்குமே தமிழ் தெரியாதா?’

சைனீஸ் கேர்ள்ஸின் கன்னக்குழி சிரிப்பில் விக்கிக்கு அடிவயிறு புரண்டது.

கையில் வைத்திருந்த ஹேர் பஞ்ச்சை விக்கியின் தலையில் கவிழ்த்தார்கள். கண்ணாடியில் பார்க்கச் சொல்லி சைகை காட்டினார்கள். ‘ஓக்கே’ என்று அவர் களாகவே சொல்லிக்கொண் டார்கள்.

கதவைத் திறந்து உள்ளே வந்த ரிசப்ஷனிஸ்ட், ‘டெஸ்ட்ட பேஸ் பண்ணி இந்த பஞ்ச்ச செலக்ட் பண்ணிருக்காங்க.. இது இம்போர்ட்டட்.. கவுன்டர்ல பணத்தக் கட்டிட்டா ஒடனே சிகிச்சைய ஆரம்பிச்சுறலாம்..’னு விக்கியிடம் சொன்னார்.

ரிஜிஸ்ட்ரேஷன் + 10,000 + கன்ஸல்டேஷன் + அக்ஸஸரீஸ்னு சொல்லி 11,500 ரூபா கட்டி ரசீது வாங்கினான் விக்கி.

பின்னர், 5-ம் நம்பர் ரூமில் விக்கியை உட்கார வைத்தார்கள். அங்கே ஒரு நேபாளி -கார்டனர்கணக்காக கையில் கத்திரியுடன் காத்திருந்தார்.

தலையில் ஹேர் பஞ்ச்சை கவிழ்த்து சரசரவென கட்டிங் பண்ணி, ஐந்தே நிமிடத்தில் சிகிச்சையை முடித்தார். காதுக்கு மேலே இரண்டு பக்கமும், பின் மண்டையில் ஒரு கிளிப்பும் போட்டுவிட்டார். நெற்றிக்கு மேல டேப் உதவியுடன் ஒட்டுவேலை முடிந்தது.

கைகுலுக்கி சம்பிரதாயத்துக்கு சிரித்த நேபாளி, ஒரு மினி பேக் தந்தார். அதில் ரோலிங் சீப்பு 1, இன்சுலேஷன் டேப்கணக்கா ரெண்டு கம்மிங் டேப்பு, ஒரு சிஸர், 4 கிளிப்கள் இருந்தன.. அவைதான் அக்ஸஸரீஸ் என்று விக்கிக்கு புரிந்தது.

‘ஆளே மாறிட்டடா விக்கி.. சான்ஸே இல்ல..’

வெளியே வந்த விக்கியை கட்டிப் பிடித்து வாழ்த்திய வணங்காமுடிக்கு கை பரபரத்தது.

டக்கென்று விக்கியை ஒரு ‘க்ளிக்’ செய்து வாட்ஸ்-அப் குரூப்பில் போட்டுவிட்டான் வணங்காமுடி..

நம்ம விக்கி இப்ப ‘விக்கு’ விக்கி.. என்ற கமெண்ட்டோடு!

எல்லாம் சுமுகமாக முடிந்த திருப்தியோடு கிளம்பிய விக்கியை ரயில்வே ஸ்டேஷன் வரை வந்து வழியனுப்பினான் வணங்காமுடி.

நண்டு, சிண்டுகளுடன் பெட்டியை ஆக்கிரமித்திருந்த குடும்பத்தின் நடுவே வளைந்து நெளிந்து சைடு அப்பர் பெர்த்தில் ஏறி உட்கார்ந்தான் விக்கி. ஆசுவாசப்படுத்திக் கொண்டு வாட்ஸ்-அப்பை திறந்த விக்கியின் கண் சிவந்தது. நாலாபுறமும் இருந்து நண்பர்களின் நக்கல்கள் வகைதொகையில்லாமல் வந்து விழுந்திருந்தன.

‘ஆஹா.. உடனிருந்தே கொல்லும் நட்பை கக்கத்தில் வைத்துக்கொண்டு இந்தக் காரியத்தை செய்தது எவ்வளவு பெரிய தப்பு?’

விக்கியின் முகம் வாடியது.

பக்கத்து பெட்டிகள் தூக்கத்துக்குப் போய்விட்டன. விக்கி இருந்த பெட்டியில் ஏகக் கூத்து. யாரும் அசர்வதுபோல தெரியவில்லை. தலைக்கு மேலே இருந்த ‘இறுக்க’மான சூழல் கிறு கிறுக்க வைத்தது. அப்படியே படுத்தால் கிளிப்கள் குத்தின.

குடும்பம் கொஞ்சம் தலைசாய்த்தது. கிளிப்களை மெல்ல அகற்றினான் விக்கி. இறுக்கம் தளர்ந்தது. ஏனோ உடல் சிலிர்த்தது. ‘அல்மொனார்டு’ ஃபேனில் இருந்து வந்த காற்று தலையில் பட்டு அக்குள் வரை சில்லிட்டது.

இருட்டிலும் விக்கியை உற்றுப் பார்த்து விட்ட ஒரு நண்டு ‘வீல்..ல்’ என்று அலறியது.

வெளிச்சத்தைப் பரப்பியது குடும்பம். காட்சிப் பொருளானான் விக்கி. நாகரிகம் தெரிந்து லைட்களை அணைத்தது. ஆனாலும் குன்னிக் குன்னி அந்தக் குடும்பம் சிரித்த காட்சி விடிந்தபிறகும் விக்கியின் நினைவைவிட்டு நீங்க வில்லை.

கழற்றியதை கழற்றியபடி பார்சல் பண்ணினான். எந்த எக்ஸ்ட்ரா பிட்டிங்கும் இல்லாமல், பழைய விக்கியாகவே வீட்டுப் படியேறினான்.

என்ன ஒரு நிம்மதி?!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x