Last Updated : 14 May, 2016 09:44 AM

 

Published : 14 May 2016 09:44 AM
Last Updated : 14 May 2016 09:44 AM

மன்னா.. என்னா? - ஷாக் ட்ரீட்மென்ட்

அதிகாலையில் வேட்டு போட்டு மன்னரை எழுப்பும் வேட்பாளர் எண்ணிக்கை கூடிக்கொண்டே போய்விட்டது. மன்னருடன் சென்று மக்களை சந்திப்பது, ‘ஈ..’ என்று இளித்தபடியே மக்களை நோக்கி கைகூப்பிக்கொண்டே நிற்பது.. இந்த வேலையெல்லாம் அவர்களுக்கு சில நாட்கள்தான். அப்புறம், வேலையே கிடையாது. மூக்கு பிடிக்க சாப்பிட்டுக்கொண்டு, அரண்மனையில் ஜாலி வாழ்க்கை வாழலாம். இதற்கு ஆசைப்பட்டு நூற்றுக்கணக்கானவர்கள் வேட்பாளர் வேலையில் சேர்ந்துவிட்டார்கள்.

கடந்த சில நாட்களாக அவர்களுக்கு கடும் வேலை. சோறு, தூக்கம்கூட சரியாக இல்லை. மன்னருக்கே பாவமாக இருந்தது. கூட்டமாக அவர்களை காட்டுக்கு சுற்றுலா அனுப்பி வைத்தார்.

போனவர்கள்.. போனவர்கள்தான். அவர்களைப் பற்றி எந்த தகவலும் இல்லை. தேடிக்கொண்டு புறப்பட்டார் மன்னர்.

காட்டுக்குள் ஓரிடத்தில் வேட்பாளர்கள் சென்ற ரதங்கள் உடைந்து கிடந்தன. அருகே பாறைகள் சரிந்து கிடந்தன. சின்னூண்டாக நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதை புரிந்துகொண்டார் மன்னர்.

எங்காவது பேண்டேஜுடன் நிற்பார்கள் என்று ஊகித்து அருகே இருந்த கிராமத்துக்கு சென்றார். கிராமத் தலைவரை கூப்பிட்டு, ‘‘ரதங்களில் வந்த வேட்பாளர்களைப் பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?’’

‘‘ஓ.. அதுவா! எல்லோரும் நிலச்சரிவில் இறந்துவிட்டார்கள் மன்னா’’ - கூலாக சொன்னார் தலைவர்.

‘‘என்ன.. எல்லோருமா? பார்த்தால் சாதாரண நிலச்சரிவு போலத்தானே தெரிகிறது!’’ சந்தேகத்துடன் கேட்டார் மன்னர்.

‘‘நம்பாவிட்டால் நீங்களே வந்து பாருங்கள்’’ என்று கூறி மன்னரை ஒரு மைதானத்துக்கு அழைத்துப் போனார் கிராமத் தலைவர். அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், இங்கும் அங்குமாக உருண்டு கொண்டிருந்தனர் வேட்பாளர்கள். ‘‘யோவ், நாங்கள்லாம் உயிரோடதான்யா இருக்கோம். அவுத்துவுடுங்கய்யா..’’ என்று கை, கால்களை ஆட்டியபடி அவர்கள் கத்திக்கொண்டிருந்தனர்.

மன்னருக்கு திக்கென்று ஆகிவிட்டது. ‘‘கிராமத் தலைவரே, என்ன கூத்து இது? உயிரோடு இருப்பவர்களை கட்டிப் போட்டிருக்கிறீர்களே’’ என்றார்.

‘‘அட போங்க மன்னா, வேட்பாளர்கள் எப்ப உண்மை பேசியிருக்காங்க. உயிரோடு இருக்கிறதா பொய் சொல்றானுங்க’’ என்றார்.

‘‘உண்மை பேசுங்க.. உண்மை பேசுங்கன்னு அடிச்சிக்கிட்டேன். இப்ப நல்லா அனுபவியுங்க’’ என்று கூறிக்கொண்டே புறப்பட்டார் மன்னர். ‘‘பயந்துடாதீங்க மன்னா! சின்ன ஷாக் ட்ரீட்மென்ட். மொத்த பயல்களையும் அரிச்சந்திரனாக்கி அனுப்பி வைக்கிறோம்’’ என்று காதைக் கடித்தார் கிராமத் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x