Published : 07 May 2016 10:43 AM
Last Updated : 07 May 2016 10:43 AM

பாண்டுரங்க வாமன் கானே 10

சமஸ்கிருத அறிஞர், சமூக சீர்திருத்தவாதி

‘பாரத ரத்னா’ விருது பெற்ற தலைசிறந்த சமஸ்கிருத அறிஞரும், சமூக சீர்திருத்தவாதியுமான பாண்டுரங்க வாமன் கானே (Pandurang Vaman Kane) பிறந்த தினம் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் (1880) பிறந்தார். வக்கீலான தந்தை, புரோகிதர் தொழிலும் செய்துவந்தார். பள்ளிப் பருவத்திலேயே சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார் கானே. வேத, சாஸ்திரங்கள், புராணங்களையும் நன்கு கற்றார்.

l பள்ளி இறுதித் தேர்வில் தங்கப் பதக்கம் பெற்றார். சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார். வேதாந்த புரஸ்கார் விருதும், சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த ஞானத்துக்காக பாவுதாஜி சமஸ்கிருத விருதும் பெற்றார். ஆசியர் பயிற்சித் தேர்வில் பிராந்தியத்திலேயே முதல் இடத்தில் தேர்ச்சி பெற்றவர், மாவட்ட துணை கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

l அந்த பதவியை ஏற்காத இவர் இலக்கிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு, வி.என்.மாண்டலிங் தங்கப் பதக்கம் பெற்றார். பம்பாய் எல்ஃபின்ஸ்டன் கல்லூரியின் சமஸ்கிருத ஆசிரியராக 1907-ல் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், பண்டைய இந்திய இலக்கியம் குறித்த இவரது மற்றொரு ஆராய்ச்சிக்காக மறுபடியும் மாண்டலிங் தங்கப் பதக்கம் பெற்றார்.

l சட்டத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். எல்ஃபின்ஸ்டன் கல்லூரி பணியில் இருந்து விலகி, வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். பம்பாய் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பின்னர் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.

l சமூக ஏற்றத் தாழ்வுகளை வேரறுக்கவும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். கலப்பு மற்றும் விதவைத் திருமணங்களை ஆதரித்தார். விவாகரத்து செய்யும் பெண்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார்.

l ஏராளமான இலக்கிய, வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டார். இதுகுறித்து ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் பல கட்டுரைகள், பல நூல்களை எழுதினார். இவரது படைப்புகள், சமஸ்கிருத இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன. மராட்டி, இந்தி, உருது, பாரசீகம், ஜெர்மனி, பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் வல்லவர்.

l கி.மு. 600 முதல் கி.பி. 1800 வரையிலான இந்தியாவின் மதம், பாரம்பரியம், கலாச்சாரம் தொடர்பான பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு உரிய சான்றுகளோடு 1930-ல் இவர் எழுதிய ‘ஹிஸ்டரி ஆப் தர்மசாஸ்திரா’ இவருக்கு புகழ் மகுடம் சூட்டியது. 5 தொகுதிகளாக வெளிவந்த இந்நூல் 6,500 பக்கங்கள் கொண்டது.

l 40 ஆண்டுகாலம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்த படைப்பு, இன்றளவும் தர்ம சாஸ்திரங்கள், பண்டைய பழக்க வழக்கங்களில் எழும் சந்தேகங்களுக்கு பதில் கூறும் சட்ட புத்தகமாகத் திகழ்கிறது. இந்நூலுக்கு 1956-ல் சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

l சமஸ்கிருத மொழியின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்த வர். குருஷேத்ரா பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு துணை நின்ற வர். மாநிலங்களவை உறுப்பினராக 2 முறை நியமிக்கப்பட்டார்.

l மத்திய அரசு 1942-ல் இவருக்கு ‘மகாமகோபாத்தியாயர்’ என்ற பட்டம் வழங்கியது. 1963-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. பம்பாய் பல்கலைக்கழகம் இலக்கியத்துக்கான கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இந்திய பாரம்பரியப் பெருமைகளை உலகெங்கும் பரவச் செய்தவரும், சமூக அநீதிகளுக்கு எதிரான போராளியுமான பாண்டுரங்க வாமன் கானே 92-வது வயதில் (1972) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x