Last Updated : 26 Jun, 2014 10:00 AM

 

Published : 26 Jun 2014 10:00 AM
Last Updated : 26 Jun 2014 10:00 AM

ஜூன் 26, 2000 - மனித மரபணுவின் மாதிரி வரைபடம் வெளியான நாள்

மனித மரபணு பற்றிய ஆய்வுகளின் ஒருபகுதியாக, மனித உடலில் உள்ள டி.என்.ஏ. ரசாயன அடிப்படை இணைகளால் உருவாக்கப்பட்ட விதம் பற்றிய ஆய்வைத் தொடங்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் விரும்பினர். இதையடுத்து, பல நாடுகள் இணைந்து இதற்கான ஆய்வைத் தொடங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

1984-ல் இதற்கான திட்டம் தொடங்கப்பட்டு, 1990-ல் ஆய்வு முறையாகத் தொடங்கியது. உயிரியல் தொடர்பாக மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட கூட்டு ஆய்வு இது. இதைப் பரிந்துரை செய்ததுடன் நிதியுதவியும் அளித்த நாடு அமெரிக்கா. பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ரூ.1.8 லட்சம் கோடி செலவில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டது. சர்வதேச நாடுகளின் தொடர்ந்த ஒத்துழைப்பும், மரபணுத் தொகையியல் (ஜினோமிக்ஸ்) துறையில் ஏற்பட்ட முன்னேற்றங்களும், ஆய்வின் வேகத்தை விரைவாக்கின. அதன்பலனாக, 2000-ல் மரபணுவின் ஒரு வரைவு மாதிரி உருவாக்கப்பட்டது.

மரபணு ஆய்வு வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வரைவு மாதிரி உருவாக்கப்பட்ட செய்தியை, அதே ஆண்டு ஜூன் 26-ல், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் பில் கிளிண்டன் மற்றும் பிரிட்டனின் அப்போதைய பிரதமர் டோனி பிளேர் இணைந்து அறிவித்தனர்.

முழுமையான மரபணு வரைபடம், திட்டமிட்டதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக, 2003-ல் இறுதிசெய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், மனித இனத்தில் 20,500 விதமான மரபணுக்கள் உள்ளன என்று தெரியவந்தது.

மேலும், மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைப் பற்றியும் மனிதப் பரிணாமத்தைப் பற்றியும் அறிந்துகொள்வதிலும், மானுடவியல் உள்ளிட்ட பல துறைகளுக்கும் இந்த மரபணு வரைபடம் பெரிதும் உதவுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x