Last Updated : 26 Apr, 2016 03:23 PM

 

Published : 26 Apr 2016 03:23 PM
Last Updated : 26 Apr 2016 03:23 PM

ரஃப் நோட்டு - 1 : சாம்பார் புராணம்!

புதிய அனுபவத் தொடர்

‘ஜெமினிகணேசனுக்கு உங்க ஊருலேயும் ‘சாம்பார்’ னுதான் பேரா?’ இதுதான் முருகேசன் முதன்முதலாக என்னிடம் கேட்ட கேள்வி.

நானும் முருகேசனும் தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயில் வாசலில் பேசிக் கொண்டு இருந்தபோதுதான், இப்படி ஒரு கேள்வியை முருகேசன் கேட்டான்,

ஆமாம்... சாம்பார் என்கிற பெயர் ஏன் ஜெமினிக்கு வந்தது? சாம்பாரும் ஒரு கமகம அயிட்டம்தானே? அரை லிட்டர் சாம்பாரில் இரண்டே இரண்டு இட்லியைக் கரைத்துக் குடிக்கும் பல பலசாளிகள் இருக்கிறார்கள். திருவல்லிக்கேணி ‘ரத்னா கஃபே’ சாம்பார் இட்லியாலேயே ரொம்ப ஃபேமஸ்! எம்.ஜி.ஆர் என்கிற ஆக் ஷன் நாயகனுக்கும், சிவாஜி என்கிற உணர்ச்சி பிழம்புக்கும் நடுவில் மென்மையாக ’சின்ன சின்ன கண்ணனுக்கு... என்னதான் புன்னகையோ’ என்று பாடி நடித்தினாலேயே, ஜெமினிக்கு சாம்பார் என்கிற பரிவட்டம் கட்டியிருப்பானோ தமிழன்?

தனது ஊரில் மட்டும்தான் ஜெமினிக்கு சாம்பார் என்கிற பெயர் என்று நம்பிக்கொண்டு இருக்கிற பல முருகேசன்கள் ஒவ்வோர் ஊரிலும் இருக்கிறார்கள். ஜெமினி என்றதும் பலருக்கு சாம்பார் நினைவில் நீந்துவது போல, ஜெமினி என்றதும் எனக்கு கீழே உள்ள செய்தி நினைவில் நீச்சலடிக்கிறது...

கனிவாய் ஒரு கடிதம்

ஜெமினியின் காதல் மனைவி நடிகை சாவித்திரி... ஊட்டியில் ஓர் அழகான பங்களாவைப் பார்த்துவிட்டு அதனை வாங்கித் தரும்படி ஜெமினியிடம் கேட்டிருக்கிறார். அந்தப் பங்களாவை போய் பார்த்த ஜெமினிக்கு ஆச்சர்யம். அவ்வளவு அற்புதமாக கலை பொங்கி வழியும் பங்களா அது. பல லட்ச ரூபாய் விலை சொன்னார்கள். அந்தப் பங்களா உரிமையாளருக்கு ஒரு லெட்டர் எழுதினார் ஜெமினி கணேசன்.

‘என்மனைவி உங்கள் பங்களாவை வாங்கித் தரும்படி கேட்டாள். அவ்வளவு தொகை என்னிடம் இல்லை. ஆனால், ஓரே ஒரு விஷயம் உங்களை கேட்க வேண்டும் என்றுதான் இந்த லெட்டரை உங்களுக்கு எழுதுகிறேன். இப்படி ஒரு பங்களாவை விற்க உங்களுக்கு எப்படிமனசு வந்தது? நானாக இருந்தால் உயிர் போனாலும் விற்க மாட்டேன்’ என்று எழுதினாராம்.

அந்த பங்களா உரிமையாளார் தான்சொன்ன விலையைவிட பன்மடங்கு குறைந்த விலைக்கு ஜெமினியிடமே அந்தப் பங்களாவை விற்க முன்வந்தாராம். என்றைக்கு நினைத்தாலும் ஜெமினியைப் பற்றிய கமகமக்கும் செய்தி இது!

சாம்பாருக்காக எதையும்...

எனது மாமா விஸ்வநாதனுக்கு சாம்பார் சாதம் என்றால் உயிர். ஓரு பட்டை சாம்பார் சாதம் தந்தால் போதும் 24 மணிநேரமும் விழி மூடாமல் எந்த வேலையையும் மாங்கு மாங்கென்று செய்துவிடுவார். அவர் இன்கம் டாக்ஸ் ஆபீஸில் வேலைக்காக கும்பகோணத்தில் இருந்து மாயவரத்துக்கு போகும் தினங்களில்... நித்தமும் சாம்பார் சாதத்தைத்தான் கட்டிக்கொண்டு போவார். சலித்துக்கொண்டதேஇல்லை. பல வருஷம் கழித்து அவரை சந்தித்தபோது ‘‘ இப்பவும் சாம்பார் சாதக் கட்சிதானா நீங்க?’’ என்று கேட்டேன்.

’’இல்லைப்பா... அதைத் தவிர எல்லாத்தையும் சாப்பிடுவேன்’’ என்றார்.

’‘பூனை கவுச்சியை ஒதுக்குன கதையால்ல இருக்கு... உங்க மத்தியப் பிரதேசம் எப்படி சாம்பார் சாதத்துக்கு தலாக் கொடுத்திச்சு’’ என்றேன் .

‘என் பையன் கேன்சர்ல அவதிப்பட்ட நாட்கள் அது... ஒரு நாள் மத்தியானம் ‘உனக்கு என்னப்பா வேணும்னு கேட்டேன் அவன் ஆசையா ‘சாம்பார் சாதம்’ என்றான். நான் மங்களாம்பிகா விலாஸ் போய், சாம்பார் சாதப் பொட்டலம் வாங்கியாந்து பார்க்கிறேன்... பையன் உசிரு போயிட்டு. இதுல என்ன வேடிக்கைன்னா அவனுக்கு சாம்பார்னா பிடிக்கவே பிடிக்காதுங்குறதுதான். அன்னிலேந்து நான் சாம்பார் சாதம் சாப்பிடுறதை விட்டுட்டேன்’’ என்றார்.

வாழ்வில் கமகமக்கும் சில விஷயங்களை ஏதோ ஒரு தருணம் நறுக்கிப் போட்டுவிடுகிறது என்பதற்கு இது ஒரு காட்சி.

சட்டையை மாற்றும் சாம்பார்

பெரும்பாலும் சைவப் பிரியர்களின் உணவு வகையில் ஒன்றாகவே சாம்பார் இருக்கிறது.சாம்பார் வீட்டுக்கு வீடு தனது சட்டையை மாற்றிக் கொண்டுவிடும். ஒட்டல் சாம்பாருக்கும் வீட்டு சாம்பாருக்குமே நிறைய வித்தியாசம் உண்டு. சாம்பார் பொடி யூஸ் பண்ணுவார்கள் ஒட்டலில். வீட்டில்அப்படி இல்லை.

அது மட்டுமில்லீங்க... சாம்பாரில் என்ன காயைப் போடுகிறார்களோ, அதுக்கு தகுந்த மாதிரி அது தனது மூஞ்சியை காட்டும். வெண்டைக்காய் என்றால் சாம்பார் கொளகொளக்கும். கத்திரிக்காய், அவரைக்காயோடு கூட்டணி சேர்ந்தால் சாம்பார் பரம சாது. முள்ளங்கி என்றால் வீடு முழுக்க ஒரு மாதிரி வாசம் பிச்சிக்கும். முள்ளங்கி சாம்பார் என்றால் எனக்கு எப்பவுமே அலர்ஜி. குசு வந்தால் ஏரியாவே டர்ர்ர்ராயிடுங்கிற பயம்தான் அதுக்குக் காரணம். முள்ளங்கி சாம்பார் பலருக்கு அஜாத சத்ரு.

மனோரஞ்சன் என்கிற என் நண்பன் (‘கனவே கலையாதே’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, போன்ற படங்களில் உதவி இயக்குநராக வேலை பார்த்து, இப்போது காரைக்கால் தலத்தெருவில் ஏர் ஒட்டிக்கொண்டு இருப்பவன்) தன்னுடன் சாப்பிடும் யாராவது சாம்பாரில் கிடக்கும் பச்சை மிளகாயை கீழே விட்டறிந்தால் ‘‘என்னப்பா... நீ... இதோட மகத்துவம் புரியாம கீழே வீசிட்டே’’ என்று அதை எடுத்து சப்புக் கொட்டிச் சாப்பிடுவான். பார்த்துக்கொண்டு இருக்கிற நமக்கு கண்ணில் நீர் கட்டும்.

சாம்பாரில் ரொம்ப பிரசித்திப்பெற்றவை வெங்காயச் சாம்பாரும் முருங்கைக்காய் சாம்பாரும்தான். சின்ன வெங்காயத்துக்கு சாம்பார் வெங்காயம் என்றே ஒரு பெயர் உண்டு. அதுவும் முருங்கைக்காய் சாம்பார் என்றால், சாம்பார் தன்னைத்தானே அலங்கரித்து கொண்டுவிடுமோ என்னவோ? அப்படி ஒரு ருசி சாம்பாரில் வந்து சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டுவிடும்.

ஏலம் ஒரு தரம்.... ஏலம் இரண்டு தரம்....

தொண்ணூறுகளின் ஆரம்ப வருஷங்களில் தியாகராய நகர் ரெங்கநாதன் தெருவில் அன்னம்மாள் பில்டிங்கி ல் ஒரு அறையில், ஒரு வாலிபக் கூட்டமாக நெருக்கிப்புடிச்சு தங்கியிருந்தோம். நாங்களே ஸ்டவ் வைத்து பொங்கிச் சாப்பிடுவோம்.

ஒருநாள் ‘‘நான் சூப்பரா சாம்பார் வைப்பேன்’’ என்று சொல்லி ஒரு நண்பர் கரண்டியை தூக்கினார். நாங்கள் முன் வராண்டாவில் கவான் கவான் வயிற்றோடு காத்துக்கிடந்தோம். பசி வயிற்றுக்குள் கபடி ஆடிக்கொண்டிருந்த வேளையில் ‘‘சாப்பாடு ரெடி... வாங்க எல்லாரும்’’ என்று அவர் மணியடிக்க, கையை அலம்பாமலே தட்டின்முன் போய் உட்கார்ந்தோம்.

எல்லோரும் சோறு போட்டுக்கொண்டு சாம்பாரை ஊற்றிக்கொண்டோம். பிசைந்து வாயில் உருட்டித் தள்ளிய ஒவ்வொருவருக்கும் அழுகை பீறிட்டு வந்தது. அந்த நண்பர் பரீட்சார்த்த முயற்சியாக சாம்பாரில் ஏலக்காயை போட்டு எங்கள் வயிற்றை பரிசோதித்து பார்க்க முடிவு செய்ததுதான் அதற்கு காரணம்.

யாரும் சாப்பிடவே இல்லை.. சோற்றை சாக்கடையில் கொட்டினோம். ‘‘என்ன இப்படிபண்ணீட்டீங்க’’ என்று அவரிடம் கேட்டதற்கு... ஏலக்காய் சாம்பாரை உருட்டி உள்ளே தள்ளிக்கொண்டே ‘‘பிரமாதமாய்தானே இருக்கு சாம்பார்’’ என்றார். அன்றைக்கு அவரை நாங்கள் ஏதும் செய்யாமல் விட்டதற்குகாரணம் இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.

பருப்பில்லாமல் கல்யாணமா? என்கிற பழமொழியே சாம்பாரை முன்வைத்து உருவானதுதான். கல்யாணங்களில் சாம்பார் ஒரு வி. ஐ.பி ஐயிட்டம். எது நல்லா இல்லாட்டியும் சாம்பார் நல்லா இருக்கணும். சாம்பார் நல்லா இல்லாட்டி எல்லாம் நல்லா இருந்தாலும் அந்தச் சாப்பாடு எடுபடாமல் போகும் விபத்து ஏற்பட்டுவிடும்.

சென்னை சாலைகளின் கையேந்தி பவன்களில் இரண்டே இரண்டு இட்லி வாங்கி வைத்துக்கொண்டு, ஏகத்துக்கும் சாம்பார் வாங்கி விளாசும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன். பெங்களூருவில் பிஸிபலாபாத்... என்ற ஒரு உணவு வகை ரொம்ப ஃபேமஸ். அதிகாலையிலேயே வாங்கி சாப்பிடுவார்கள். சாம்பார் சாதத்தின் கர்னாடக நாமம்தான் பிஸிபலா பாத்.

மீன் சாம்பார்

எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் ஒரு தடவை ‘‘எங்க வீட்டுல இன்னிக்கு மீன் சாம்பார்’’ என்றார். என் ஆவல் வாய்பிளக்க, ‘‘என்ன மீன் சாம்பாரா?’’ என்றேன். புளி சேர்க்காமல் மீன் போட்டு வைத்தால் அது மீன் சாம்பார்’’ என்றார் நண்பர். உலகத்தில் நான் கேள்விப்படாத ஒரு அயிட்டமாக இருந்தது ‘மீன் சாம்பார்’ என்கிற அந்த பதம்.

என் மனைவியிடம் போய்... ‘‘ஒரு நாள் மீன் சாம்பார் வையேன்’’ என்றேன். ‘‘உவ்வே’’ என்றாள் சீரியஸாக. அது சரி.. நீங்கள் கேள்விபட்டதுண்டா மீன் சாம்பாரை?

மானா பாஸ்கரன் - தொடர்புக்கு baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x