Published : 22 Apr 2016 10:48 AM
Last Updated : 22 Apr 2016 10:48 AM

மோன்டால்சினி 10

நோபல் பரிசு பெற்ற இத்தாலி மருத்துவர்

மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற பிரபல இத்தாலிய நரம்பியலாளர் ரீட்டா லெவி மோன்டால்சினி (Rita Levi Montalcini) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இத்தாலியின் டுரின் நகரில் வசதி யான யூதக் குடும்பத்தில் (1909) பிறந்தார். சிறு வயதிலேயே புத்திக் கூர்மையுடன் விளங்கினார். கடைசி வரை திருமணம் செய்துகொள்வ தில்லை என்று தீர்மானித்தார்.

l தந்தையிடம் கெஞ்சிக் கூத்தாடி அனுமதி பெற்று, டுரின் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். அறுவை சிகிச்சை நிபுணராகப் பட்டம் பெற்றார். அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். மைக்ரோஸ்கோப் மூலம் செல்களை ஆராயும் உத்தியை அறிந்துகொண்டார்.

l மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தொழில்களில் யூதர்கள் ஈடுபடக் கூடாது என்று இத்தாலி அரசு 1938-ல் தடைவிதித்தது. இதனால், அதிருப்தி அடைந்தவர் தனது படுக்கை அறையிலேயே ஒரு சோதனைக்கூடம் அமைத்தார். தையல் ஊசிகளை அறுவை சிகிச்சைக் கருவிகளாகப் பயன்படுத்தினார். நரம்புத் திசுக்களின் வளர்ச்சி குறித்து ஆராய்ந்தார்.

l கோழிக்குஞ்சு கருக்களில் நரம்பு வளர்ச்சி குறித்து அமெரிக்க கருவியல் ஆராய்ச்சியாளர் விக்டர் ஹாம்பர்கர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தார். அதில் ஈர்க்கப்பட்டவர், கருக்களில் நரம்பு வளர்ச்சி குறித்து ஆராய்ந்தார். குடும்பம் பல இடங்களுக்கு தப்பிச் சென்று தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தபோதிலும், இவர் ஆராய்ச்சியை நிறுத்தவே இல்லை.

l உலகப் போர் முடிந்ததும் குடும்பம் மீண்டும் டுரின் நகருக்குத் திரும்பியது. அகதிகள் முகாம்களில் மருத்துவம் பார்த்தார். டுரின் பல்கலைக்கழகத்திலேயே மீண்டும் பணியில் சேர்ந்தார். பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இவரது கட்டுரைகளால் கவரப்பட்ட விக்டர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தருமாறு இவரை அழைத்தார்.

l அமெரிக்காவுக்கு 1947-ல் வந்தவர், 30 ஆண்டுகளுக்கு மேல் அங்கு இருந்தார். விக்டருடன் இணைந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். பேராசிரியராகப் பணியாற்றினார். அமெரிக்கக் குடியுரிமை யும் பெற்றார். நரம்பு செல்களின் வளர்ச்சியைத் தூண்டும் புரோட் டீன்கள் குறித்த இவரது ஆராய்ச்சி புற்றுநோய், அல்சீமர், மலட்டுத் தன்மைக்கு சிகிச்சை முறைகளைக் கண்டறிய வழிவகுத்தன.

l அமெரிக்க உயிரியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்லி கோஹனுடன் இணைந்து, ரத்த செல்கள், புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். நரம்பு வளர்ச்சி காரணிகள் குறித்து ஆராய்ந்து அதில் மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். இந்த சாதனைக்காக 1986-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டது.

l நோபல் பரிசு பெற்ற பிறகும் இவர் ஓய்வு எடுக்கவில்லை. இத்தாலியில் செல் உயிரியல் நிறுவனம் உருவாக உதவினார். தொடர்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுவந்தார். ‘யூரோப்பியன் பிரைன் ரிசர்ச்’ நிறுவனத்தை 1992-ல் தொடங்கினார்.

l உலகம் முழுவதும் ஏராளமான கவுரவங்கள், விருதுகளைப் பெற்றார். நரம்பியல் ஆராய்ச்சிகளில் இவரது மகத்தான பங்களிப்புகளுக்காக ‘மாக்ஸ் வெயின்ஸ்டெய்ன்’ விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். ஆராய்ச்சி செய்யவும், தொழில் செய்யவும் இவருக்கு தடை விதித்த அதே இத்தாலி அரசு, ‘நாட்டின் உயர்ந்த ஆராய்ச்சியாளர்’ என்ற கவுரவத்தை வழங்கியது.

l மனிதகுல நன்மைக்காக பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட ரீட்டா லெவி மோன்டால்சினி 103 வயதில் (2012) மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x