Last Updated : 21 Mar, 2016 04:40 PM

 

Published : 21 Mar 2016 04:40 PM
Last Updated : 21 Mar 2016 04:40 PM

மத்திய அரசு மீதான ஒரு சாமானியரின் 10 விமர்சன குறிப்புகள்

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தபோது வாக்களித்த மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின்னர் கிளீன் இந்தியா, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏகத்துக்கும் அறிவிப்புகள் வெளியாகிவிட்டன.

அறிவிப்புகள் ஒருபுறம் இருக்க மதவாதம், சகிப்பின்மை, மாட்டிறைச்சி சர்ச்சை, மானியங்களை ஒழிக்க நினைக்கும் அரசு, தலித் விரோத ஆட்சி, மாணவர்கள் மீதான அடக்குமுறை, எனத் தொடங்கி சமீபமாக தொழிலாளர் வட்டி விகிதங்களில் மாற்றம் என பல்வேறு விமர்சனங்களுக்கு பாஜக அரசு உள்ளாகியுள்ளது.

வாக்களித்த ஒரு சாமானியராக நான் பாஜக அரசில் எதிர்ப்பது என்ன...? எதிர்பார்ப்பது என்ன?

1. பொன் மகள், பொன் மகன் திட்டங்களை உங்களின் குழந்தைகளுக்காக, அவர்களின் எதிர்கால நலனுக்காக ஒன்பது சதவீகித வட்டி என்று மாபெரும் ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகப்படுத்திய திட்டத்தில், வந்த வேகத்தில் இப்போது வட்டியைக் குறைக்கும் அறிவிப்பும், அதே வேகத்தில் வருகிறது, இப்போது குழந்தைகளின் எதிர்கால நலனைப் பற்றிய மத்திய அரசின் அக்கறை எங்கே போயிற்று?

2. ஒருவர் மாத சம்பளத்திற்கு வேலைக்குச் சேரும்போது, முதலாளிகள் அந்த ஊழியரின் சம்பளமென அவர்கள் பங்காக அந்த ஊழியருக்கு செலுத்தும் வைப்புத் தொகையை கணக்கிட்டே அவனின் சம்பளத்தின் சேமிப்பு என்பார்கள். இதில் மாத மாதம் வைப்புத் தொகையை பிடித்தம் செய்து, வரி விலக்கென்று ஒரு சிறு சதவீகிதத்தை அளித்து, மிச்சத்தை அவனுக்கு சம்பளமெனத் தருவார்கள். அப்படி ஒவ்வொரு ஊழியரும் வட்டியின்றி அரசுக்கு பி.எஃப். என்ற பெயரில் தரும் பல லட்சம் கோடிகள் அரசுக்கு இலவச முதலீடு!

இந்த முதலீட்டையும் இலவசமாக பெற்றுக் கொண்டு, முதலீடு செய்தவன் பணத்தை திரும்பப் பெற நினைக்கும்போது, உனக்கு 56 வயதாகட்டும், அப்பொழுது முழுத்தொகையைப் பெற்றுக் கொள், அதுவரை கடனாய் ஒரு தொகையைப் பெற்றுக்கொள் என்பது எத்தகைய கேலிக் கூத்து என்று யோசித்துப் பாருங்கள். இந்த சேமிப்பு கடைசி காலத்தில் உதவும் என்பதில் ஐயமில்லை. ஆனால், அதற்கு முன்பே அவசர அவசிய தேவையின்போது எளிதில் பயன்படுத்த முடியாதது வேதனைதானே?

3. ஒரு சீட்டுக் கம்பெனியில் பணம் போடுகிறீர்கள் அல்லது ஒரு கம்பெனியின் ஷேர்களில் முதலீடு செய்கிறீர்கள், இவர்கள் உங்கள் முதலீட்டில் வட்டியென்றோ அல்லது அபராதம் என்றோ பணத்தைக் பிடித்துக் கொண்டாவது உங்கள் முதலீட்டுப் பணத்தைத் திருப்பித் தர முடியாவிட்டால் என்ன ஆகும்? வழக்குகள் பாயும், கம்பெனிகள் திவாலாகும்..... ஆனால் ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது, நம்முடைய முதலீட்டைத் திருப்பித் தர ஏறக்குறைய ஒவ்வொரு வருடமும் விதிமுறைகளை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இது எவ்வகையில் நியாயம்.

4. உங்களின் அவசர தேவைகளுக்கு நகைக்கடன், தனிநபர் கடன் பெறுகிறீர்கள், வீடு கட்ட வீட்டுக் கடன் பெறுகிறீர்கள், இப்படி ஒவ்வொன்றுக்கும் நீங்கள் அரசு சார்ந்த அல்லது அரசுடமையாக்கப்பட்ட அலுவலகங்களில், வங்கிகளில் ஏன் தனியார் அமைப்புக்களிடம் கூட கடன் வாங்கும் போதும், அரசு மற்றும் தனியார்கள், அவற்றுக்கென நம்மிடம் நிர்ணயிக்கும் வட்டி எட்டு சதவீகிதத்தில் இருந்து பதிமூன்று சதவீகிதம் வரை இருக்கிறது, அதுவும் வீட்டுக் கடனில் வட்டி விகிதத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள், நாம் எந்தக் கேள்வியையும் கேட்டு விட முடியாது. இதைப்போலவே வங்கிகளில் நீங்கள் பல்வேறு திட்டங்களில் செலுத்தும் எந்தத் தொகைக்கும் ஆறு முதல் எட்டு சதவீகிதத்திற்கு மேல் வட்டிக் கிடையாது! அதாவது, அவர்களிடம் நீங்கள் வாங்கும் கடனுக்கு, வட்டியை அவர்கள் நிர்ணயம் செய்வார்கள், உங்களிடம் பெறும் முதலீடு என்கிற கடனுக்கு உங்களுக்கு எவ்வளவு வட்டித் தருவது என்று அவர்களே முடிவு செய்வார்கள்!

5. வட்டியை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளட்டும், அரசு வங்கிகள் நம்மை முதலீட்டில் ஏமாற்றாது என்று நினைப்பவர்களின் கவனத்திற்கு, "ஒரு வங்கி திவாலாகும் நிலை ஏற்பட்டால், நீங்கள் கோடிக்கணக்கில் பணத்தை வைத்திருந்தாலும், வைத்திருக்கும் ஒவ்வொரு கணக்குக்கும் அதிகபட்சமாய், உங்களுக்கு ஒரு லட்சம் மட்டுமே கிடைக்கும்", இதை வங்கிப் பற்றிய விதிமுறைகளில் படித்தது. நாம் படிக்க முடியாத படி நுணுக்கி எழுதப் பட்டிருக்கும் விதிமுறைகளை எல்லா ஆவணங்களிலும் நன்றாக படித்துப் பாருங்கள் கையெழுத்திடும் முன்பு!

6. வரி கட்டிய வருமானத்தை செலவு செய்யும்போதும் ஒவ்வொன்றுக்கும் வரியை கட்டுகிறோம், யாரோ சிலர் வரி ஏய்த்து, வாங்கிய கடனை ஏய்த்து நாட்டை விட்டு ஓடும்போதும், ஆராயாமல் கொடுத்தவனுக்கும் தண்டனையில்லை, ஓடினவனுக்கும் தண்டனையில்லை, பணத்தை இழந்த மக்களுக்கே மீண்டும் புதிய வரிகளில், சலுகைப் பறிப்புகளில் மீண்டும் மீண்டும் தண்டனை!

7. பல கோடி மக்கள் உணவில்லாமல் தவிக்கும்போது, பல கோடி பெண்களும், குழந்தைகளும் பல்வேறு வன்முறைக்களுக்கு ஆளாகும் போது, பல கோடி குழந்தைகள் கல்வியில்லாமல், உணவில்லாமல் தவிக்கும் போது இதை மாற்றும் வழிமுறைகளுக்குத் திட்டம் தீட்டாமல், சில தனிமனிதர்கள் நடத்தும் உலக கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும், சிலரின் பாதுகாப்புக்கும் மக்கள் பணத்தை செலவு செய்யும் செயல்பாட்டினை என்னவென்று கூறுவது?

8. எண்ணெயில் சுற்றுகிறது விலைவாசி என்று அறிந்தும், கச்சா எண்ணெய் விலை குறைந்துக்கொண்டே இருந்த போதும் சளைக்காமல் விலையை உயர்த்திக் கொண்டு வரி வருமானத்தை உயர்த்திக் கொண்டு, விலைவாசியை ஏற்றுகிறார்கள். அரசியல்வாதிகளிடம் இருந்து கருப்புப் பணத்தை மீட்காமல், ஊழலை ஒழிக்காமல், மக்களின் மானியங்களை மட்டும் விட்டுக் கொடுக்கச் சொல்கிறார்கள்.

9. இந்திய ரூபாயின் மதிப்பு அதல பாதளத்திற்கு வீழ்ந்துக் கொண்டே இருக்கும் காரணங்களில் பல்வேறு காரணங்களில், இறங்குமுகமாகிக் கொண்டிருக்கும் ஏற்றுமதியும், அதைச் சார்ந்து தயங்கிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களின் தயக்கமும் முக்கிய காரணங்கள். முதலீட்டாளர்களின் தயக்கங்களுக்கு என்ன காரணம், அவரவர் நாடுகளின் நிலவரமும், நம் நாட்டு ஆட்சியாளர்களின் மாற்றங்களுக்கான நடவடிக்கைகளின் மந்த நிலையே காரணம்!

10. இப்படிப்பட்ட பிரச்சினைகள் நாட்டில் இருக்கும் போது, மந்திரிகள், கட்சிகாரர்கள் எல்லாம் "அவன் நாக்கை வெட்டினால் பணம் தருகிறேன்", "பாரத் மாதா கி ஜெ சொல்லவில்லையென்றால் நாட்டை விட்டு வெளியே போ", "அவரவர் சாதிக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு", "பெண்கள் வீட்டுக்குள் அடங்கி இருந்தால் அவர்கள் ஒழுங்காய் இருந்தால் பாலியல் கொடுமை நிகழாது", "கோஷம் போடும் மாணவனெல்லாம் தீவிரவாதி", "பசுவை இறைச்சிக்காகவும் தோலுக்காகவும் ஏற்றுமதி செய்யலாம், இங்கே உண்பது தவறு, .........." என்று கணக்கிலாடங்கா பொன் வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டேயிருந்தால், பிரதமர் ஆட்சி செய்வது எப்படி?

எந்தக் கட்சியாய் இருந்தாலும், ஓட்டுப்போட்ட அனைத்து மத, சாதி, இன, மொழி நிறங்களை சார்ந்த மக்களை கருத்தில் கொள்ள வேண்டும், எத்தனை விதமாகவும் வரிகளைச் சுமத்துங்கள், அதை ஒரு சிலருக்கு கோடிக்கணக்கில் தானமாக்கி விட்டு மக்களின் கழுத்தை நெறிக்காதீர்கள்!

அடிப்படைகளைச் சாத்தியமாக்கி விட்டு சாமியார்களைப் கூப்பிட்டுக் கொண்டாடுங்கள், அதுவரை மக்களாட்சி என்பதை சாத்தியப்படுத்தும் ஆட்சியைத் தாருங்கள், எல்லா வகையிலும்!

மு.அமுதா -தொடர்புக்கு amudhamanna@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x