Published : 18 Mar 2016 11:09 AM
Last Updated : 18 Mar 2016 11:09 AM

அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி 10

மலையாளக் கவிஞர், எழுத்தாளர்

கேரள மாநில சாகித்ய அகாடமி விருது பெற்ற மலையாளக் கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி (Akkitham Achuthan Namboothiri) பிறந்த நாள் இன்று (மார்ச் 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கேரளாவின் பாலக்காடு மாவட் டம் குமாரநல்லூரில் (1926) பிறந்தவர். பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தார். ஆனாலும் பட்டம் பெறவில்லை. சமஸ்கிருதம், இசை, ஜோதிடம், ஓவியம், பெயின்டிங் ஆகியவற் றைக் கற்றார்.

l ‘உன்னி நம்பூதிரி’ என்ற சிறு இதழில் பத்திரிகையாளராகப் பணியில் சேர்ந்தார். ‘மங்களோ தயம்’, ‘யோகஷேமம்’ இதழ்களில் துணை ஆசிரியராகப் பணியாற் றினார். 1950-களில் இவரது இலக்கியப் பணிகள் கவனம் பெறத் தொடங்கின.

l ‘இருபதாம் நூட்டாண்டின்டே இதிஹாசம்’ என்ற காவியத்துக்காக 1952-ல் ‘சஞ்சயன்’ விருது பெற்றார். இது மலையாள நவீன இலக்கியத்தின் ‘மாஸ்டர் பீஸ்’ எனப்படுகிறது. இவரது ‘தேச சேவிகா’, ‘பாலிதர்ஷனம்’ ஆகிய சிறு காவியங்களும் பலராலும் போற்றப்பட்டன.

l கோழிக்கோடு அகில இந்திய வானொலியில் 1956-ல் சேர்ந்தார். 1975 வரை அங்கு பணிபுரிந்தார். பின்னர் திருச்சூர் வானொலி நிலையத்தில் ‘வயலும் வீடும்’ நிகழ்ச்சியின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

l குழந்தைகளுக்காக இவர் எழுதிய ‘உன்னிக்கினவுகள்’, ‘ஒரு குல முந்திரிங்கா’, ‘களிகோட்டிலில்’ ஆகிய 3 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. 2 பாடல் தொகுப்புகள், ‘அவதாலங்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்தன. இவர் எழுதிய கட்டுரைகள் ‘உபநயனம்’, ‘சம்வர்த்தனம்’ ஆகிய பெயர்களில் தொகுக்கப்பட்டு வெளிவந்தன.

l சி.ஆர்.தாஸ் எழுதிய ‘சாகர் சங்கீத்’ நூலை ‘சாகர சங்கீதம்’ என்ற பெயரில் மலையாளத்தில் மொழிபெயர்த்தார். மத்பாகவதத்தை மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ளார். இது இவரது எழுத்துப் பணிகளிலேயே மிக மதிப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

l ஒருசில நாடகங்களும் எழுதியுள்ளார். அவை பல பள்ளி ஆண்டு விழாக்களில் மாணவர்களால் அரங்கேற்றப்பட்டன. ‘அரங்கேற்றம்’, ‘நிமிஷ ஷேத்ரம்’, ‘இடிஞ்சு பொலிஞ்ச லோகம்’, ‘அம்ரிதகடிகா’, ‘அக்கிதத்தின்டே தெரஞ்செடுத்த கவிதகள்’ ஆகிய படைப்புகள் பிரபலமானவை.

l வேதங்களை பிரபலப்படுத்த தொடங்கப்பட்ட ‘ஆண்டி’ என்ற இதழில் முக்கியப் பங்காற்றினார். திருநாவாயா, கடவலூர், திருச்சூரில் உள்ள வேதக் கல்வி மையங்கள் மூலம் வேதங்களை மக்களிடம் பரவச் செய்தார். அனைத்து சாதியினரும் வேதக் கல்வி பெற முனைப்புடன் பாடுபட்டார். திருச்சூரில் ‘யோகஷேம சபை’ அமைப்பின் உறுப்பினராக இருந்து, பல சமூக சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.

l வேத ஞானபீட விருதுக் குழுவின் மூர்த்தி தேவி விருது, கேந்திரிய சாகித்ய அகாடமி விருது, ஆசான் பரிசு, வல்லத்தோள் விருது, லலிதாம்பிகா சாகித்ய விருது, கேரள சாகித்ய அகாடமி விருது, ஓடக்குழல் விருது, கிருஷ்ணகீதி விருது, வயலார் விருது என இலக்கிய சேவைக்காகப் பல விருதுகள், கவுரவங்களைப் பெற்றுள் ளார். பிரபல ஓவியர் அக்கிதம் நாராயணன், இவரது தம்பி.

l கேரளாவில் பெரிதும் போற்றப்படும் படைப்பாளியும், இலக்கிய உலகில் ‘அக்கிதம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி இன்று 90 வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x