Last Updated : 23 Aug, 2021 09:29 AM

 

Published : 23 Aug 2021 09:29 AM
Last Updated : 23 Aug 2021 09:29 AM

திருக்குறள் கதைகள் 18 - 19: பகைவன்

பூலித்தேவன், வேலு நாச்சியார், முத்துராமலிங்க சேதுபதி, கட்டபொம்மன் வரிசையில் கொங்கு மண்டலத்தில் பிறந்தவன் தீரன் சின்னமலை.

1756-ல் ஆனூர் அரண்மனையில் ரத்தின சர்க்கரை என்ற ஜமீன்தார் மகனாகப் பிறந்தவன்.

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினான், வில்வித்தை, வாள் வித்தை, குதிரை ஏற்றம், சிலம்பம் இவற்றில் மிகுந்த தேர்ச்சி பெற்றான்.

எல்லா சாதிக்காரர்களையும் நண்பர்களாக ஏற்று தோள்மீது கை போட்டுப் பழகுவான்.

தெற்கத்து மனிதர் கருப்பன் சேர்வை அவனுக்கு வித்தை கற்றுக் கொடுத்து மெய்க்காப்பாளனாக இருந்தார்.

மைசூரில் ஆட்சி செய்த திப்புசுல்தான், சேலம், தர்மபுரி, சங்ககிரி, ஆத்தூர், ராசிபுரம், ஓமலூர் பகுதிகளை 7 ஆண்டுகளுக்கு முன்னாலேயே பிடித்து தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வந்து விட்டான்.

மணியம் செல்வன் ஓவியங்கள்

அவருடைய ஆட்கள் சங்ககிரி கோட்டையில் முகாம் இட்டு தங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் பலவீனமாக உள்ள பாளையக்காரர்களிடமெல்லாம் கப்பம் வசூல் செய்ய தன்னுடைய ஆட்களை அனுப்பினார்கள். ஒருவன் வசூலித்த பணத்தை சேர்த்து நேரே சங்ககிரியிலிருந்து மைசூர் திப்பு சுல்தானுக்கு அவர் ஆட்கள் எடுத்துப் போனபோது சின்னமலை அவர்களை தடுத்தான்.

தமிழ்நாட்டில் இனிமேல் இந்த வேலையை நீங்கள் செய்ய முடியாது என்று சிவன்மலை எச்சரித்தபோது, திப்புவிடம் நீங்கள் யார் என்று எப்படி நாங்கள் சொல்வது என்று கேட்டனர்.

சிவன்மலை -சென்னிமலைக்கு இடையே சின்னமலை தடுத்தான் என்று சொல்லுங்கள் என்று விரட்டியடிக்கிறான்.

சின்னமலை வீரத்தை மெச்சி திப்பு அவனை நண்பனாக்கிக் கொள்கிறான். நம் இருவருக்கும் பொது எதிரி ஆங்கிலேயேன்தான். அவனை நாம் சேர்ந்து விரட்டலாம் என்று கூட்டு சேர்ந்து கொள்கிறான் திப்பு.

சின்னமலை வீரர்கள் 10 ஆயிரம் பேர் மைசூர் போய் சேருகிறார்கள். ஜெனரல் ஹாரிஸ் படை கள்ளிக்கோட்டையிலிருந்து 27 ஆயிரம் வீரர்கள், ஆம்பூர், பம்பாயிலிருந்து பல ஆயிரம் வீரர்கள் வருகிறார்கள்.

20 நாள் சண்டை, ஒரே வீச்சில் மைசூர் டவுனைப் பிடித்து விட்டனர். 2-வது மாதம் மொத்த மைசூரும் ஆங்கிலேயேர் வசம். திப்புவின் ஆட்களே காட்டிக் கொடுக்க -சல்லடையாக திப்பு உடலைத்துளைத்துப் போட்டனர் ஆங்கிலேயே வீரர்கள்.

தீரன் தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தான். படையைப் பெருக்க வேண்டும். கோட்டை ஒன்று கட்ட வேண்டும் என்று திட்டமிட்டு, ஓடாநிலையில் பெரிய கோட்டை ஒன்றை கட்டினான்.

அடுத்து கர்னல் மேக்ஸ்வெல். தமிழ்நாட்டை நீயே ஆண்டுகொள். காவிரிக்கரையில் எங்கள் குதிரைகளை நிறுத்த மட்டும் அனுமதி கொடு என்று கேட்டான் கர்னல். சின்னமலை மறுக்கவே, 1801-ல் கர்னல் மேக்ஸ்வெல் குதிரைப்படையோடு வந்தான். ஆற்றில் தண்ணீர் போகும்போது சில இடங்களில் பாறை இருப்பது, சுழல் ஏற்படுவது பொதுவாக தெரியாது.

தீரன் தன் படைகளை அந்தப் பாறைகள், ஆபத்தான சுழல் இருக்கும் இடங்களுக்குப் பக்கத்தின் நிறுத்தினான். ஆங்கிலேயர் குதிரைகள் அந்தப் பாறைகளில் சிக்கின. சுழலில் அகப்பட்டு உருண்டன. இந்த சமயத்தில் தன் படைகளோடு போய் அந்தக் குதிரைகளை வெட்டிச் சாய்த்தான். தப்பினால் போதும் என்று மற்றவர் பறந்து விட்டனர்.

1802-ல் அதே மேக்ஸ்வெல் பெரும்படையோடு வந்து ஓடாநிலை கோட்டையை முற்றுகையிட்டான். 3 நாட்கள் மும்மரமாக சண்டை. சேனாதிபதி கருப்பன் சேர்வை, கழுத்தில் கர்னல் மேக்ஸ்வெல் கத்தி இறங்க- சின்னமலை சீறிப்பாய்ந்து நொங்கு சீவுவது போல கர்னல் தலையை சீவி -கரும்புள்ளி செம்புள்ளி குத்தி தலையை ஊர்வலமாக எடுத்துப் போனான்.

1804-ல் மைசூரில் சண்டையிட்ட ஹாரிஸ் நயவஞ்சகமாக அரச்சலூர் அம்மன் கோயில் திருவிழாவுக்கு ஊர் மக்கள் பூராவும் போயிருந்தபோது- 3 ஆயிரம் வீரரர்களுடன் கோட்டைக்குள் நுழைந்து விட்டான்.

கோயிலுக்குள் ஷூ காலுடன் நுழைந்த ஹாரிஸ் குதிரையை சின்னமலை வெடிகுண்டு வீசி அதன் காலை உடைத்தான். ஒற்றை ஆளாக வெடிகுண்டு வீசியே 20 குதிரைகளை விரட்டி அடித்தான் சின்னமலை.

கடைசியாக சென்னையிலிருந்து பீரங்கிகள், கள்ளிக்கோட்டையிலிருந்து யுத்த தளவாடங்கள் கொண்டு வந்து விடியற்காலை 4 மணிக்கு ஓடாநிலை கோட்டையை முற்றுகையிட்டான். நீண்டமெளனம். உள்ளே காக்கா குருவியில்லை. ஒரு செருப்பு மட்டும் கிடந்தது. அதன் அடியில் பெட்டி போன்ற பகுதி. அதன் உள்ளே செய்தி வைத்து அனுப்பியிருக்கிறார்கள்.

சங்ககிரி கோட்டை

அந்த செருப்பைச் செய்த பொல்லானைப் பிடித்து விசாரிக்க முயன்றபோது கோட்டை மேலிருந்து குதித்து உயிரை விட்டான் பொல்லான்.

பழனி பக்கம் கருமலைப் பகுதியில் தீரன் சின்னமலையும், ஆட்களும் பதுங்கி இருந்தனர். சின்னமலைக் கூட்டத்திலேயே நல்லான் என்று ஒரு சமையல்காரன் -பகல் உணவு சாப்பிடும் வேளையில் வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுக்க 200 சிப்பாய்கள், தீரன், கிலேதர் (தம்பி) இருவரையும் கைது செய்து சங்ககிரி கோட்டை உச்சியில் 1805 -ஜூலை 31-ந்தேதி தூக்கிலிட்டனர். இது போன்ற மாவீரர்களின் வீர மரணமே நம் சுதந்திரத்திற்கு வித்தாக இருந்தது.

பொல்லான் என்ற தாழ்த்தப்பட்ட இனத்து மனிதன் தீரன் சின்னமலையை காட்டிக் கொடுக்காமல் உயிரை விட்டான். நல்லான் என்ற தீரன் இனத்துக்காரன் காட்டிக் கொடுத்து துரோகம் செய்தான்.

வாளோடு நேருக்கு நேர் மோதும் பகைவனைக் கண்டு கூட அஞ்ச வேண்டியதில்லை. கூடவே இருந்து குழி பறிக்கும் பகைவனிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

‘வாள்போல் பகைவரை அஞ்சற்க -அஞ்சுக

கேள்போல் பகைவர் தொடர்பு’

பின்குறிப்பு: முன்னாள் முதல்வர் ஜெயலிதா -சென்னையில் தீரன் சின்னமலைக்கு சிலை வைத்து மரியாதை செய்தார். ஓவியர் மணியம் செல்வன் சிலை வடிக்க ஸ்கெட்ச் வரைந்து கொடுத்தார்.

****

குறள்கதை 19 பெரியம்மா மடியில்

கல்லம்பாளையத்திலிருந்து மாமன் மகன் லட்சுமணன் வந்திருந்தான். நானும், அவனும் ஒரே வயது. எங்கள் வீட்டுக்கு வெளியில் வாயிற்படியின் இருபுறங்களிலும் 3 அடிக்கு 3 அடி சதுரத்தில் சிமெண்ட் திண்ணை இருந்தது. வழிப்போக்கர்கள் அமர்ந்து இளைப்பாற கிராமப்புறங்களில் அதைக் கட்டியிருப்பார்கள்.

அவனும் நானும் அந்தத் திண்ணையில் பம்பரத்தை ஆட விட்டு விளையாடிக் கொண்டிருந்தோம். என் அத்தையின் பேத்தி 10 வயது வால்- மணி என்று பெயர்- சிறுவயதில் அவளைத் தூக்கி வளர்த்தவன் நான். அவ்வப்போது என் கையை கடித்து விடுவாள். பிடிவாதத்தின் முழு வடிவம். பம்பரம் கண்ணில் பட்டு விடும் தள்ளிப்போ என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் திண்ணைப் பக்கத்தில் விறைத்துக் கொண்டு நின்றாள். லட்சுமணன் விட்ட பம்பரம், திண்ணையில் பட்டு எகிறி, அந்தப் பெண்ணின் கண்ணோரம் குத்தி விட்டது. அவ்வளவுதான். வாயைத்திறந்தவள் மூடவே இல்லை. கூப்பாடு கேட்டு அம்மா வந்தார். தரதரவென்று என்னை கொல்லைப்புறம் இழுத்துப் போய் உரித்துப் போட்டிருந்த கற்றாளை நார் எடுத்து நாலு வாங்கு வாங்கி விட்டார். தொடையில் ரத்தம் பீறிட்டது.

‘அம்மா, நான் பண்ணலேம்மா. லட்சுமணன் விட்ட பம்பரம் அது!’ என்று என்ன சொல்லியும் -விருந்தாளியை அடிக்கக்கூடாதென்று, ‘நீ ஆடினதனாலதானே அவனும் ஆடினான்’ - என்று வெளுத்துக் கட்டி விட்டார்.

பெரியம்மா

செய்யாத தவறுக்கு இப்படி ரத்தம் வர அடித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதிகபட்சம் 12 வயது அப்போது எனக்கு. மடாரென்று கதவு மேல் ஏறி பரணில் இருந்த கயிற்றை எடுத்து, ‘தூக்குப் போட்டு செத்துப் போகிறேன்!’ என்று கத்தியதும், அம்மாவும், குளத்தூர் பெரியம்மாவும் ஆளுக்கு ஒரு காலைப் பிடித்து இழுத்து, தரையில் போட படாதபாடுபட்டார்கள்.

கோபம் தீர்ந்து, வியர்வை அடங்கி, மனம் சாந்தப்பட்டபோது பெரியம்மா மடியில் படுத்திருந்தேன். ‘ஊருக்கெல்லாம் புத்தி

சொல்ற நீ இப்படி செய்யலாமாய்யா?’ என்று என் தலையை வருடிக் கொண்டே பெரியம்மா கேட்டபோது -எப்பேர்பட்ட மடத்தனம் செய்ய இருந்தோம் என்று உறைத்தது.

இது போன்று எந்தச்சூழலிலும், அன்பு பாசத்தை என் தாய்க்கு பதில், வாரி வழங்கியவர் குளத்தூர் பெரியம்மா.

மூன்றாம் பிறை நிலவைப் பார்த்து விட்டால் உடனே, ‘கண்ணு ஓடியா, ஓடியா!’ என்று கூப்பிட்டு இரண்டு கைகளால் என் முகத்தை பிடித்து அருகே கொண்டு வந்து மூடிய கண்களைத் திறந்து என் முகத்தைப் பார்த்து, ‘இன்னிக்கு உன் முகத்தில முழிச்சிருக்கேன் சாமி இந்த மாசமாவது விடியட்டும்!’ என்று சொல்வார்.

என் சொந்தபந்தங்களில் பெரியம்மா மட்டும் வயல், தோப்பு என்று கொஞ்சம் வசதியாக வாழ்ந்தவர். கூடப்பிறந்த 3 தங்கைகள் குழந்தைகளும் விடுமுறை நாட்களில் குளத்தூரில் கூடுவோம்.

பெரியம்மாவுக்கு 5 பெண்கள், 3 பிள்ளைகள். இரவு உப்புமா தயார் செய்ததும் எல்லோரையும் வரிசையாக உட்காரச் சொல்வார். நான் முதல் ஆள், சித்தி பிள்ளைகள், பத்துப் பதினைந்து பேர் அமர்ந்த பின் கடைசியாகத்தான் தான் பெற்ற பிள்ளைகளை அமர்த்துவார்.

முதல் இரண்டு கரண்டி உப்புமா எனக்கு முழுசாக விழும். கடைசியாக ஆக, தான் பெற்ற பிள்ளைகளுக்கு ஒரு கரண்டி மட்டுமே விழும்.

பெரியம்மா தோட்டத்தில் ஆடு,மாடுகள் இருக்கும். நாட்டுக் கோழி குஞ்சுகள் இருக்கும். கட்டுச்சேவல் வளர்ப்பாங்க. பஞ்சவர்ணக்கிளி கூண்டுல இருக்கும். கருப்புப் பூனையும் செவப்பு புள்ளி பூனைகளும் இருக்கும். சிட்டுக்குருவிகளுக்கு பஞ்சமே இருக்காது. இயற்கையின் முழு வடிவத்தையும் அவர் தோட்டத்தில் பார்த்திருக்கிறேன்.

6-ம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி., வரை வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை 100 சதவீதம் குளத்தூரில்தான் தங்குவேன்.

பிறகு சென்னை வந்து ஓவியனாகி, நடிகனாகி, திருமணமாகி, குழந்தைகள் பெற்று வாழ்க்கைப் பயணம் நீண்டு விட்டது.

பெரியம்மாவுடன் தங்கைகள்

ஒரு நாள் சென்னை புறப்படும் விமானம் அரை மணி நேரம் தாமதம் என்று அறிவித்தார்கள். குமரேசனும் நானும் 3 கிலோமீட்டர் தூரத்திலுள்ள குளத்தூர் சென்று பெரியம்மாவைப் பார்த்தோம். 90 வயது கடந்திருந்தாலும் தனக்கு வேண்டியதை தானே சமைத்து சாப்பிடும் பிடிவாதக்காரி பெரியம்மா.

அன்றைக்கு மூன்று கற்களை அடுக்கி, அதன் மீது அலுமினியப் பாத்திரம் வைத்து காய்ந்த விறகுகளை கொண்டு அடுப்பு எரித்து ஏதோ சமைத்துக் கொண்டிருந்தார்.

என்னைப் பார்த்ததும் கண்கள் கலங்கின. கைகளைப் பிடித்துக் கொண்டு திண்ணையில் வந்து உட்கார்ந்தார்.

‘‘கண்ணு எனக்கு என்னவோ போலிருக்கு..!’’

‘‘உடம்புக்கு சரியில்லையா? எங்காவது வலிக்குதா?’’

‘‘அதெல்லாம் ஒண்ணமில்லை. எனக்கு சொல்லத் தெரியலே. எப்படியோ இருக்கு. நான் பொசுக்குனு கண்ணை

மூடிட்டா என் சாவுக்கு நீ வருவியா?’’

நெஞ்சில் ஈட்டி பாய்ந்தது போல் வலி.

‘‘நீ என் மேல வச்சிருந்த பாசம் உண்மையாயிருந்தா, இந்தியாவுல எங்கிருந்தாலும் வந்திருவேன்!’ என்று சத்தியம் செய்தது போல் சொல்லி விட்டு விடைபெற்றேன்.

15 நாள் கழித்து பெரியம்மா போய் விட்டாள்’ என்று போனில் தெரிவித்தனர். செய்தி கேட்டபோது இரவு 7 மணி. ரயில் நிலையம் போன் செய்தால் சேலம் பக்கம் ரயில் விபத்து. மேற்கே எந்த ரயிலும் போகாது என்றனர்.

விமான சர்வீஸ்களுக்கு போன் செய்தேன். வாயுதூத் விமானத்தில் எப்படியும் இடம் தருவதாகச் சொன்னார்கள்.

அதிகாலை. கைநிறைய பணம். ஆனால் டிக்கட் மட்டும் இல்லை. விமானநிலையம் பறந்தேன். வாயுதூத்து புறப்பட தயாராகி காற்றாடிகள் சுழன்று கொண்டிருந்தன.

‘‘சிவகுமார், வாங்க வாங்க...!’’ ஒரு குரல்.

மூச்சிரைக்க ஓடி 21 சீட் உள்ள விமானத்தில் இடம் பிடித்து, காலை 5.30-க்கு புறப்பட்டு, 7 மணிக்கு கோவை பீளமேடு சென்று இறங்கினேன்.

கார் பிடித்து குளத்தூர் போனேன்.

‘‘பெரிசு போயிடுச்சுப்பா. காரியமெல்லாம் முடிய 2, 3 மணி நேரம் ஆகும். பல்லு விளக்கி பழையசோறு குடிச்சிட்டுப் போலாம்’ என்று ஊர் மக்கள் நிதானமாக இறப்பு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த போது முதல் ஆளாக நான்தான் பெரியம்மா தலைமாட்டில் அமர்ந்திருந்தேன்.

என் பெரியம்மா போன்ற பெண்மணிகளை பெருமைப்படுத்த வள்ளுவர் எழுதிய குறள்:

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்-நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

***

கதை பேசுவோம்
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x