Published : 13 Aug 2021 09:04 AM
Last Updated : 13 Aug 2021 09:04 AM
ஓவியக்கலை படிக்க சென்னை போயே தீருவேன் என்று நான் பிடிவாதம் பிடித்ததும், வேறு வழியில்லாமல் என் தாயார் சம்மதித்தார். ஆனாலும் ஒரு விஷயம் சொன்னார்: ‘பரதேசம் போய் பொழைக்கோணும்னு ஆண்டவன் உன் தலையில எழுதீட்டான். மகராசனா போ. ஆனா, மெட்ராஸ்ல கார் வாங்கிட்டேன்; பங்களா வாங்கிட்டேன் வாம்மா’-ன்னு கூப்பிடலாம்னு மட்டும் நெனச்சிராதே. செத்தாலும் நான் இந்த ஊர்லதான் சாவேன். அங்கெல்லாம் வரவே மாட்டேன்!’ என்று தீர்மானமாகச் சொல்லி அனுப்பினார்.
7 ஆண்டுகள் ஓவியக்கலை, 2 ஆண்டுகள் சினிமா வாழ்க்கை பறந்து விட்டது. கோவை சென்று, ‘கந்தன் கருணை’ படத்தை ராயல் தியேட்டரில் அம்மாவுடன், சொந்தக்காரர்களை அழைத்துச் சென்று காட்டினேன்.
அன்றிரவு அம்மா, சமையல் செய்து கொண்டே -என் முகத்தை பார்க்காமல் (எப்போதுமே முகம் பார்த்து பேச மாட்டார்கள்) ‘‘ஏஞ்சாமி! என்னை மெட்ராசுக்கு கூட்டீட்டுப் போறியா? மண்ணோட மல்லாடி ஓஞ்சு போயிட்டேன். முடியலேய்யா. நீ எனக்காக ஒரு சிரமும் பட வேண்டாம். மூணு வெள்ளைப் புடவை இருக்கு. இப்போதைக்கு கிழியாது. 10 அடிக்கு 10 அடி ரூம்ல நீ தங்கியிருந்தேன்னா, நீ கட்டில் மேல படுத்துக்க. நான் கட்டிலுக்கடியில் நாய் மாதிரி படுத்துக்கறேன். ஓட்டல் சாப்பாட்டுக்கு குடுக்கற காசை, எங்கிட்ட குடு. அரிசி பருப்பு வாங்கி ஆக்கிப் போட்டு, மிச்சம் இருந்தா சாப்பிடறேன். இல்லாட்டி சும்மா படுத்துக்கறேன். உட்டுட்டு மட்டும் போயிராதே!’’
‘‘அம்மா, அம்மா! நீ எங்கூட இருக்கற சந்தோஷத்தை விட பெரிசு எதுவுமே இல்லே. வா போலாம்!’னு கூட்டீட்டு வந்தேன். அம்மா சமையல் ஆள் வைத்துக் கொள்ள மாட்டார். தானே மாவு அரைத்து இட்லி தோசை ஊத்துவார். என்னுடைய எல்லா நண்பர்களையும் வரவேற்று சாப்பிடச் சொல்வார்.
சத்யராஜ் சினிமாவில் நடிக்க முடிவெடுத்து சென்னை வந்து விட்டார். மாதம்பட்டி சிவகுமார் -உறவுக்கார் -மாதம் ரூ. 350 அவருக்கு அனுப்பி வைப்பார். வசதியாக வாழ்ந்த பிள்ளை. 20 நாளுக்கு மேல் அந்தப் பணம் வராது. மீதி நாட்கள் என்னோடு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து ஷூட்டிங் பார்த்து விட்டு, என்னோடு சாப்பிட்டுப் போவார். மாதத்தின் கடைசி நாட்கள் இரவு சாப்பாடு கட்டாயம் எங்கள் வீட்டில்தான்.
நல்ல பாடி பில்டர். எம்ஜிஆர் ரசிகர். கர்லா கட்டை சுற்றுவார். உடற்பயிற்சி செய்வார். சுப்பாராவ் அவின்யூ வீட்டிலிருந்து சேத்துப் பட்டு பாலம், ஸ்பர்டாங் ரோடு, எழும்பூர் சிக்னல், பந்தியன் ரோடு என்று 5, 6 கி.மீ அதிகாலை ஓடுவார். 22 வயது வாலிபர். நன்றாகப் பசி எடுக்கும். சத்யராஜ் எங்கள் வீட்டுக்கு வந்தால் என் சகோதரி மகள் சின்ன லட்சுமி-பாட்டிக்கு உதவியாக ஊரில் இருந்து இங்கு வந்து தங்கி இருப்பவள் - உடனே புதிதாக தேங்காய் ஒன்று உடைப்பாள். அதாவது இருக்கும் கொஞ்சம் சட்னி, அவருக்கு போதாது என்பதால்.
அம்மா இறந்தபோது எம்.ஜி.ஆர் தவிர (அப்போது அவர் உயிரோடு இல்லை) சிவாஜி, கமல், முதலமைச்சர் கலைஞர், அமைச்சர் கண்ணப்பன், டி.ஆர்.பாலு, எம்.என். நம்பியார், ஏவிஎம் சரவணன், கா.ராசாராம், பிரபு, மேஜர் சுந்தரராஜன், பி.எஸ். வீரப்பா, கார்த்திக், நாசர், வைரமுத்து, ஜெமினி கணேஷ், எம்.என்.ராஜம், விஜயகுமாரி, பாரதி ராஜா, பஞ்சு அருணாசலம், திருலோகச்சந்தர், முக்தா சீனிவாசன், பி.மாதவன், எஸ்.பி.முத்துராமன், பாலுமகேந்திரா -இப்படி அரசியல், திரையுலகம், நட்பு வட்டம் என்று கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரியவர்கள் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.
சத்யராஜ் வெளியூரில் படப்பிடிப்பில் இருந்ததால் இரண்டு நாட்கள் கழித்து வந்தார். அன்று பாலுமகேந்திரா என்னோடு பேசி விட்டு விடைபெற்றதும் ‘அப்புறம் ராஜூ’ என்றேன். குபீரென்று வெடித்து சிதறி கோவென்று குரலெடுத்து அழுதுவிட்டார். பக்கத்து வீடு எதிர்வீட்டு மக்கள் என்னவோ ஏதோ என்று ஓடி வந்து எட்டிப் பார்த்தார்கள்.
ஒரு வழியாக சமாதானம் செய்து அனுப்பி வைத்தேன். மாதம்பட்டி சிவகுமார் துணைவியார் மறுநாள் - என்ன ராஜூ! சிவகுமார் அண்ணன் வீட்ல ஊரையே கூட்டற மாதிரி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணீட்டீங்களாமே!’ என்று கேட்டிருக்கார்.
‘அக்கா மாதம்பட்டி அண்ணன் மாசாமாசம் பணம் அனுப்பறாரு. நான் கொஞ்சம் செலவாளி. மாசக்கடைசில சிவகுமார் அண்ணன் வீட்டுக்கு கட்டாயம் போய் ராத்திரி சாப்பாடு சாப்பிடுவேன். பொதுவா, டைனிங் டேபிளில் நாம நாலு பேர் பேசிகிட்டே சாப்பிடும்போது, ஐட்டம் வந்துகிட்டே இருக்கும். நாம போதும்னு சொல்லாம, ஜாலியா அரட்டை அடிச்சிட்டே சாப்பிடுவோம். அங்கே பொறுமை இழந்து ‘தம்பி, இன்னொரு தோசை போடட்டுமா?’ன்னு கேட்டாங்கன்னா -அது எச்சரிக்கை, அதாவது அது கடைசி தோசை என்று அர்த்தம்.
சாதாரணமா நான் 10, 15 தோசை சாப்பிடுவேன். ஒரு நாள் கூட அந்த ஆத்தா போதுமா ராஜூன்னு கேட்டதே இல்லை. ஊத்திகிட்டே இருப்பாங்க. நாமதான் போதும்னு சொல்லணும். அப்படிப்பட்ட ஆத்மா போயிடுச்சேன்னு நெனைச்சப்ப தாங்க முடியலே!’ என்றாராம்.
படிக்காத கிராமத்து தாயாக இருந்தாலும், விருந்தாளிங்க சந்தோஷம் முக்கியம்னு நெனச்சிருக்காங்க. இந்த உணர்வுக்கு வள்ளுவர் எழுதிய குறள்:
‘விருந்து புறத்ததாத் தானுண்டல் -சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று’
*************************
குறள் கதை 13: ஒரு பொய்
அப்போது சென்னையில் 120 சபாக்கள். மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அரங்கேற்றம் முடிந்தால் மடமடவென்று 100 நாடகங்கள் சென்னையில் ஒப்பந்தமாகி விடும். 3 மாதங்களில் 100 நாடகங்கள் நடத்தியிருக்கிறோம். அதாவது சனி, ஞாயிறுகளில் மாட்னி, மாலைக்காட்சி என 2 முறை நடத்துவோம்.
அந்தக்காலகட்டத்தில் 1972-ல் பம்பாயில் நாடகம் போட மேஜர் சுந்தரராஜன் குழுவுடன் ரயிலில் பயணமானேன். ரயிலிலேயே சமைத்து சாப்பிட்டு, பாடி, ஆடி, கும்மாளமடித்து பயணம். என்னே இனிய நாட்கள்...
ஆசியாவின் மிகப்பெரிய நாடக அரங்கங்களில் ஒன்று கிங் சர்க்கிளில் உள்ள ஷண்முகாநந்தா ஹால். சென்னை கிறித்துவக்கல்லூரியில் பேராசிரியராக இருந்த ராமானுஜம் என்ற பெரியவரின் கனவு அரங்கம். அரங்கத்தையொட்டி பக்கவாட்டில் 3 மாடிகளிலும் நடிகர்கள், டெக்னீசியன்கள் தங்கிக் கொள்ள அறைகள். சனி, ஞாயிறுகளில், கர்நாடக இசை நாட்டியம் ஒத்திகை பார்க்க மேலேயே குட்டி ஹால் எல்லாம் உண்டு. நாங்கள் அந்த அறைகளில் தங்கி மெயின் ஸ்டேஜில் காலை ஒத்திகை பார்த்து விட்டு, ஓய்வெடுத்து மாலை நாடகம் போடுவோம்.
நான், டி.எஸ்.மகாதேவன் என்ற பாலக்காட்டுக்காரர் - ‘மஸகன் டாக்’ என்ற கப்பல் துறைமுகத்தில் கப்பல் வடிவமைப்பாளராக இருந்த பெரியவர் வீட்டில் காலை சிற்றுண்டி முடித்துக் கொண்டு, அவர் மகன் சுவாமியை அழைத்துக் கொண்டு பம்பாய் நகரின் அழகிய தோற்றங்களை ஸ்கெட்ச் எடுக்க புறப்பட்டு விடுவேன். முந்தைய நாள் ஓபராய் ஷெராட்டன் அருகில் இருந்த எக்ஸ்பிரஸ் டவரின் 15-வது மாடியிலிருந்து கழுகுப்பார்வையில் பம்பாயின் பெரும்பகுதியை டாப் வியூ-வில் 3 மணி நேரம் ஸ்கெட்ச் போட்டேன்.
அடுத்தநாள் கேட்வே ஆப் இந்தியா -தாஜ் ஓட்டல் உள்ள பகுதியில் தாஜ் ஓட்டலின் வலதுபுறம் கடற்கரையோரமாக ஒரு கி.மீ சென்றால் ரேடியோ கிளப் ஹவுஸ் வருகிறது. அதன் மீது ஏறி கேட்வே ஆஃப் இந்தியா கட்டிடம், தாஜ் ஹோட்டல், துறைமுகம் பகுதியை கம்போஸ் செய்து இரண்டரை மணி நேரத்தில் ஸ்கெட்ச் முடித்த போது -போலீஸ் வந்து கைது செய்யப்போவதாக சொன்னார்கள்.
இது பாதுகாக்கப்பட்ட பகுதி. எதிரி நாட்டினர் புகைப்படம் எடுத்து சென்று விமானம் மூலம் இந்த இடங்கள் மீது குண்டு போட வாய்ப்பு இருக்கும் என்பதால், புகைப்படம், ஓவியம் யாரும் தீட்ட அனுமதிக்க மாட்டார்களாம். அனுமதி இன்றி ஓவியம் தீட்டிய உம்மை கைது செய்கிறோம் என்றனர். அந்த சூழலில் வள்ளுவர் என்னைக் காப்பாற்றினார்.
‘‘சார் சார்... நான் பம்பாய் ஜே.ஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மாணவன். நேற்று எக்ஸ்பிரஸ் டவர் மீது இருந்து வரைந்த ஓவியம் இதோ. இன்று இங்கு வந்தேன். நான் மாணவன்தான் என்று சொன்னதும் -அந்த ஓவியத்தைப் பார்த்து மலைத்துப் போன போலீஸ் WOULD YOU CARE FOR A CUP OF COFFEE. தம்பி காபி சாப்பிடறியா என்று கேட்டனர். அதெல்லாம் வேண்டாம். ஆளை விட்டால் போதும் என்று ஓடி வந்து விட்டேன்.
உயிர் ஆபத்து வரும்போது ஒரு பொய் சொன்னால் தவறில்லை என்று வள்ளுவர் சொல்கிறார்:
‘பொய்மையும் வாய்மையிடத்த -புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்’
****
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT