Published : 09 Aug 2021 09:02 AM
Last Updated : 09 Aug 2021 09:02 AM
அப்பா சுப்ரமணியம் இறந்து போனதால் விதவையான வாசன் அவர்களின் தாயார் வாலாம்பாள் திருத்துறைப்பூண்டியில், தெருவோரம் இட்லி சுட்டு வியாபாரம் செய்து குடும்பத்தை நடத்தினார்.
பள்ளிக்குப் புறப்பட்ட சீனிவாசனுக்கு அம்மா 4 இட்லி பரிமாறி சாப்பிட வைத்தார். இட்லி போதாததால், விற்பனைக்கு வைத்திருந்த இட்லி கூடையிலிருந்து, இரண்டு இட்லியை எடுத்துச் சாப்பிட்டான் சீனு.
இதைப் பார்த்து விட்ட பெரியம்மா வாலாம்பாளிடம் உன் மகன் சீனு இரண்டு இட்லியை திருட்டுத்தனமாக எடுத்துச் சாப்பிட்டான் என்று குற்றம் சுமத்தினாள்.
இட்லிக்கடை நடத்துவதே சீனுவுக்காகத்தானே. குழந்தே பத்தலேன்னா சாப்பிட்டுட்டுப் போகட்டும் என்றாள் தாய்.
பள்ளிப்படிப்பு முடிந்து சென்னைக்குப் போய் ஏதாவது தொழில் செய்து பிழைக்க இளைஞனுக்கு ஆசை. வேறு வழியில்லாமல் 300 கி.மீ. சென்னைக்கு சைக்கிளில் தன்னந்தனியாக வந்து சேர்ந்தான்.
ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்து அச்சிட்டு, தானே எடுத்துச் சென்று ரயில்களிலும், பஸ்களிலும் விற்று வயிறு பிழைக்க வழி கண்டான். அந்த இளைஞன்தான் எஸ்.எஸ்.வாசன்.
1928-ல் ‘ஆனந்த விகடன்’- பத்திரிகையை ஒரு எழுத்துக்கு 25 ரூபாய் வீதும் 8 எழுத்துக்கு 200 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினார்.
1948-ல் சந்திரலேகா என்ற பிரம்மாண்டமான படத்தை தயாரித்து தென்னாட்டின் சிசில்பி, டெமில்லி என்று பெயரெடுத்தார். ரூ.40 லட்சம் செலவில் தயாரிக்கப்பட்ட படம். எல்லா வகையிலும் கடன் வாங்கி படத்தை முடித்தாயிற்று. பின்னணி இசை (ரீ-ரீகார்டிங்) கோர்ப்புக்கு ரூ. 75 ஆயிரம் பணம் போதவில்லை என்று வாசன் தவிப்பதைப் பார்த்து தாயார் வீட்டில் உள்ள நகைகளையெல்லாம் கொண்டுவந்து கொடுத்து வேலையை முடி என்றார். படம் வெளியாகி வெற்றி பெற்றதும் அந்த நகைகளைப் போல இரண்டு மடங்கு வாங்கி அம்மாவிடம் கொடுத்து பாதம் தொட்டு வணங்கி ஆசி பெற்றார்.
6 வருடங்கள் போராடி ஒளவையார் படத்தை 1953-ல் வெளியிட்டார். கே.பி.சுந்தராம்பாள் அம்மையார் கேட்காமலே ரூ.4 லட்சம் சம்பளம் கொடுத்தார்.
புதுக்கோட்டை ஆர்.கணேஷ் ஜெமினிக்கு வாய்ப்பு கேட்டு வந்து கதாநாயகனுக்கேற்ற முகமில்லை என்று சொல்லி- நடிகர்களை தேர்வு செய்யும் வேலையில் அமர்த்தி மாத சம்பளம் கொடுத்தது ஜெமினி நிறுவனம். அவர்தான் பின்நாளில் வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தின் ஹீரோவான ஜெமினி கணேசன்.
ஒளவையார் படம் பார்த்த லதா மங்கேஷ்கர், கே.பி.சுந்தராம்பாள் அம்மையாரை வரச்சொல்லி அவர் தொண்டைப் பகுதியை தடவி இந்த இடத்திலிருந்தா இப்படிப்பட்ட பாடல்கள் வருகிறது என்று புல்லரித்துப் போனார்.
சிட்டாடல் ஞானசவுந்தரி படமும், ஜெமினியின் ஞான சவுந்தரி படமும் ஒரே நாளில் வெளியாயிற்று. சிட்டாடல் படம் அசல் கிருத்துவ சடங்குகளுடன் எடுக்கப்பட்டதால் ஹிட் ஆகி விட்டது. ஜெமினி படம் தோல்வி. ஒரே நாளில் தமிழ்நாட்டு தியேட்டர்களிலிருந்து பிரிண்ட்களை வாங்கி கொளுத்திப் போட்டார் வாசன்.
ராஜாஜி மீது வாசனுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் அவரது சுதந்திரா கட்சிக்கு தேர்தல் நிதி கேட்டபோது -காங்கிரஸ் தவிர யாருக்கும் நிதி தரமாட்டேன் என்று பணிவுடன் மறுத்து விட்டார்.
ஆனந்த விகடனில் வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை தொடராக வெளியிட்டார் வாசன். நல்ல வரவேற்புக் கிடைத்தது. ஜெமினி சார்பில் கட்டபொம்மன் படத்தை எடுக்கப்போவதாக அறிவித்தார். அதே சமயத்தில் சிவாஜி- கட்டபொம்மனுக்கு நாடக வடிவம் கொடுத்து தமிழ்நாட்டையே கலக்கிக் கொண்டிருந்தார்.
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் கட்டபொம்மன் படமாக்க விரும்பிய பந்துலுவும், சிவாஜியும் நேரே ஜெமினி சென்று வாசனை சந்தித்து -கட்டபொம்மனை நாங்கள் தயாரிக்க விட்டுத்தர வேண்டும் என்று கேட்டபோது -அந்த கட்டபொம்மனே நேரில் வந்து கேட்பது போல் உணர்கிறேன், தாராளமாகச் செய்யுங்கள் என்று விட்டுக் கொடுத்தார் வாசன்.
ஆனந்த விகடனில் வெளியான தில்லானா மோகனாம்பாள் நாவலை படமாக்க ஏபிஎன்னிடம் வெறும் ரூ. 10 ஆயிரம் மட்டுமே வாங்கி அதன் உரிமையை விட்டுக் கொடுத்து விட்டார்.
அதை எழுதிய கொத்தமங்கலம் சுப்பு எழும்பூர் கண் ஆஸ்பத்திரியில் இருந்தார். அவருக்கு மரியாதை செய்ய ரூ. 5000 ஏபிஎன் கொடுத்த போது, நேற்றைக்கே வாசன் வந்து நீங்கள் கொடுத்த ரூ. 10 ஆயிரத்தை கொடுத்து விட்டுப் போனார் என்றார்.
பச்சையப்பா கல்லூரியில் பகல் உணவுக்கு வழியில்லாமல் வாசன் திண்டாடியபோது, அவருக்கு உணவு கொடுத்து படிப்பைத் தொடர வைத்த பேராசிரியர் வாசுதேவப் பொதியாளை கடைசி காலத்தில் தன்னுடனேயே வைத்து பிள்ளை போல் கவனித்துக் கொண்டார்.
புற்றுநோயால் தான் அவதிப்படுவதை குடும்பத்தாருக்கு கடைசி வரை சொல்லவே இல்லை. தனக்கு ஏதாவது நடந்து விட்டால் இரவு யாருக்கும் தகவல் கொடுத்து சிரமப்படுத்த வேண்டாம். காலையில் துக்க செய்தியை போனில் தெரிவித்தால் போதும் என்றார்.
1969 ஆகஸ்ட் 26-ம் தேதி தனது 65 வயதில் இவ்வுலகை விட்டுப் பிரியும் நேரம் வந்தபோது ஒரு ஏழை பிராமணனுக்கு செய்வது போல - ஒரு தென்னை ஓலை பாடை கட்டி 4 பேர் தூக்கிச் சென்று அடக்கம் செய்யுங்கள்- மாலை மரியாதை, இரங்கல் கூட்டம், சிலை வைப்பது எதுவும் கூடாது என்று உத்தரவு போட்டிருந்தார்.
அந்த இறுதி ஊர்வலத்தில் நடந்து போய் மரியாதை செய்யும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது.
இவரைப் போன்ற பெருந்தகையாளர்களுக்கு வள்ளுவர் எழுதியிருக்கும் குறள்பா:
‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப- எண்ணியார்
திண்ணியராகப் பெறின்’
---
குறள் கதை 11: நூறு வயது
நானம்மா என்று ஒரு மூதாட்டி. கோயமுத்தூரில் சென்ற ஆண்டு வரை வாழ்ந்தார். 100 வயதைத் தொட்டவர்கள் அபூர்வமாக அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். அவர்களுக்கு நடமாட்டம் பெரிதாக இருக்காது. நூறு வயதிலும் காடுகரைக்கு நடந்தே போய் மாட்டுக்குப் புல் பிடுங்கிக் கொண்டு வந்து போடுவது. அந்தக்கால சம்பவங்களை நினைவு தப்பாமல் பேசுவது. பற்கள் விழாமல், கண்பார்வை மங்காமல், காது மந்தமாகாமல், கைத்தடி வைத்துக் கொள்ளாமல் 100 வயது வாழ்ந்தவர்கள் -வாழ்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள்.
இந்த நானம்மா நூறு வயதைத் தொட்ட போதும், 10 வயது குழந்தை போல் உடம்பை வளைத்து, நாம் நினைத்துப் பார்க்க முடியாத யோகாசனங்களைச் செய்து கொண்டிருந்தார்.
வசதியான குடும்பமோ, அபரிமிதமான பராமரிப்போ இல்லை. கிராமப்புறத்துப் பெரியவர்கள் என்ன சாப்பிடுவார்களோ அது போல் சாப்பிட்டு, அவர் செய்த ஆசனங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் மேன்மைக்கு மத்திய அரசு பத்ஸ்ரீ விருது கொடுத்து கெளரவித்தது.
இதுவரை பத்து லட்சம் பேர் முன்பு உலகளவில் யோகாசனங்களைச் செய்து காட்டியிருக்கிறார். 600 யோகாசன ஆசிரியர்கள் உருவாக்கி விட்டிருக்கிறார்.
45 ஆண்டுகளாக தினம் 100 பேருக்காவது யோகாசனப் பயிற்சி எடுத்திருக்கிறார். மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட் எல்லாம் சென்று யோகாசனத்தின் பெருமையை மேடைகளில் செய்து காட்டி அசத்தியிருக்கிறார்.
மற்ற ஆசிரியர்கள் போல் வாய்வழியா யோகக் கலை பற்றி பேசுபவர் அல்ல. கடினமான ஆசனங்களை பல்லாயிரக்கணக்கானோர் முன்பு, மீடியா வெளிச்சத்தில் கூச்சப்படாமல் செய்து காட்டுவார்.
பேச்சு குறைவு. செயல்பாடு அதிகம். ஆங்கில மருந்துகள் கடைசி வரை அவர் தொடவே இல்லை.
உலக அளவில் 100 வயதிலும் யோகாசனம் செய்தவர்களை நாம் தேட வேண்டும். அதுவும் 6 வாரிசுகள், 12 பேரக் குழந்தைகள், 11 கொள்ளுப்பேரன் பேத்திகளுடன் பரிபூரண குடும்ப வாழ்க்கை வாழ்ந்த பெண்மணி.
100 வயது பெயருக்கு வாழ்வதல்ல. நம் கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, வாயால் சாப்பிட்டு, நினைப்பதை தங்கு தடை இன்றிப் பேசி, போக வேண்டிய இடத்துக்கு கைத்தடி இல்லாமல் நாமே நடந்து போய், இயற்கையாக பசி எடுத்து சாப்பிட்டு 100 வயது வாழ்வது உண்மையிலேயே சாதனைதான்.
நானம்மா, எந்த வித உடல் குறைபாடும் இல்லாமல் நிரந்தர வியாதி இல்லாமல், ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி இல்லாமல், மூட்டுக்கள் தேயாமல், தொப்பை விழாமல் ஆரோக்கியமாக 100 ஆண்டு வாழ அவரது ஒழுக்கமான வாழ்க்கை முறையும், யோகாசனப் பயிற்சியும், பேராசைப்படாமல், இருப்பதைக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்ததும்தான் காரணம்.
இவர்களைப் போன்றோரைப் பார்க்கும் போது நமக்கு நினைவுக்கு வரும் குறள்:
‘ஒழுக்கம் விழுப்பம் தரலான்- ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்’
--
கதை பேசுவோம்...
தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT