Last Updated : 22 Jun, 2014 11:57 AM

 

Published : 22 Jun 2014 11:57 AM
Last Updated : 22 Jun 2014 11:57 AM

கப்பி காரில் சவாரி!

நண்பர் ஒருவர் சொன்னார்: ‘‘இப்போ இருக்கிற குழந்தைகள்லாம் அதிசயமா எதையுமே பார்க்க மாட்டேங்குறாங்க, கேட்க மாட்டேங்குறாங்க'' என்று. அவர் சொன்னதில் உண்மை இல்லாமல் இல்லை. எல்லாமே கணினியில், தொலைக்காட்சியில் இன்றைய குழந்தைகளின் விழிகளின் முன் விரிந்துவிடுகின்றன. ஆனால், இன்று 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு அண்ணாந்து பார்த்து ரசித்த பொருட்களில் பலவற்றைக் காலம் தன் சுருக்குப் பையில் போட்டு எங்கோ தூர வீசியெறிந்துவிட்டது.

தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற சிற்றூர் அது. ஒரு காலைவேளை. நாங்கள் பள்ளியில் இருந்தோம். நாங்கள் என்பது - அப்பாகுண்டு, மணிவண்ணன், நட்டு, என்னையும் சேர்த்த நால்வர் அணி. ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்துக்கொண்டு ரயில் வண்டியாய் காலம் எங்களை நகர்த்திய நாட்கள் அவை.

உடைந்த பாதி பிளேடை வாயில் வைத்து மோர்சிங் வாசித்துக்கொண்டிருந்த நட்டுவின் காதில் அப்பாகுண்டு ஏதோ கிசுகிசுக்க, அது மெல்ல நகர்ந்து எங்கள் காதுக்கு வந்தபோது எங்களால் வகுப்பில் உட்காரவே முடியவில்லை.

‘‘டேய்! நம்ம ரோட்டுக்கு கப்பி கார் வந்திருக் காம்…'' என்பதுதான் அந்த ரகசிய சேதி.

சரியாக ஒரு மணிக்கு பள்ளியில் ஒரு மூலையில் தொங்கும் தண்டவாளத் துண்டில் மணியடிக்கப்பட, நாங்கள் மு.ரா.சன்ஸ் மஞ்சப் பையை (அதுதான் அப்போது எங்களின் ‘ஸ்கூல் பேக்’) தோளில் சாய்த்துக்கொண்டு சாலையை நோக்கி ஓடினோம். அய்யனார் சிலை உயரத்துக்குச் சாலையை அடைத்துக்கொண்டு கப்பி கார் நின்றது.

முன்னும் பின்னும் ராட்சஸ இரும்பு ரோலர்களைக் கால்களாகக் கொண்டு பிரம் மாண்டமாக அது நின்றது. அதன் மேலே ஓர் ஆள் உட்கார்ந்திருந்தார். அவர்தான் கப்பி காரின் பாகன். ஊரே அதை அதிசயமாகப் பார்த்தது. நாங்கள் அதைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தோம். யானையைத் தொட்ட சந்தோஷம்.

ரோடு ரோலரை எங்கள் ஊர்க்காரர்கள் கப்பி கார் என்றார்கள். ரோடு முழுக்க நிரவப்படும் கருங்கல் ஜல்லிகளுக்குக் கப்பிக் கல் என்று பெயர். கப்பிக் கல்லைத் தன் இரும்புப் பாதங்களால் நசுக்கி நகரும் ரோடு ரோலருக்கு கப்பி கார் என்கிற பெயர் எவ்வளவு பொருத்தம்!

கப்பி கார் வந்த நாளில் ஊருக்கே ஒரு திருவிழா முகம் வந்துவிட்டது. ஊரே சாலையில் திரண்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை மறந்தோம்.

‘‘டேய்! இது பத்து நாளைக்கு முன்னால திருவாரூர்ல கிளம்புச்சாம். இன்னிக்குத்தான் நம்மூருக்கு வந்திருக்கு'' என்று கப்பி காரின் இயந்திரவியலைப் புட்டுப்புட்டு வைத்தான் மணிவண்ணன்.

“அப்படின்னா, இது டெல்லிக்குப் போக எத்தனை மாசம் ஆகும்” என்று நான் விரல் விடாமல் எண்ணிப் பார்த்தேன்.

‘‘எனக்கு கப்பி கார் ஓட்டுற வேலை கெடச்சா போக மாட்டேம்பா. எல்லா காரும் இத முந்திக்கிட்டுப் போயிடும். இது டொடக்கு டொடக்குனு நவுரும்'' என்றான் அப்பாகுண்டு.

எங்கள் ரோட்டில் கப்பிக் கல்லை நிரப்பி தார் போட்டு முடிக்கப் பத்து நாட்கள் ஆயின. அங்குலம்அங்குலமாக நகர்ந்து சாலையைச் சமன்படுத்திக் கம்பீரமாக நின்றது கப்பி கார். ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கே அதை வேடிக்கை பார்ப்பதுதான். அது நின்ற இடத்தில் தற்காலிகமாகப் பட்சணக் கடையும், கடலைக் கடையும் முளைத்திருந்தன. யானையின் முதுகில் சுண்டெலிகள் துள்ளிக் குதிப்பதைப் போல மாலைவேளைகளில் அமைதியாக நிற்கும் கப்பி காரின் மேலே ஏறி நாங்கள் விளையாடுவோம்.

‘‘கப்பி காருக்கு நான்தான் டைவர்'' என்றான் நட்டு.

‘‘நான்தான் கண்டக்டரு'' என்றேன் நான்.

நாங்கள் கப்பி காருக்கு பக்கத்தில் நிற் பதையே பெருமையாக நினைத்து நின்று கொண்டிருந்தபோது எங்கள் பள்ளிக்கூடத்தில் மூணு வருஷமா எட்டாங்கிளாஸிலேயே இருக்கும் சுப்பிரமணி அங்கு வந்தான். மேலும் கீழும் அதைப் பார்த்தவன், அதன் பின்னால் சென்று தம்கட்டித் தள்ளினான். அதுவா நகரும்? என்ன நினைத்தானோ, கப்பி காரின் ரோதையை ஓங்கி உதைத்துவிட்டு, ‘‘இதுக்குத் திருட்டுப் பயலே வர மாட்டான்டா...” என்று சொல்லிவிட்டுப் போனான்.

தூரத்தில் கப்பி காரின் ஓட்டுநர் வருவதைப் பார்த்து நாங்கள் மிரண்டுபோனோம். அருகில் வந்த அவர், ‘‘பயல்களா… வர்றீங்களாடா… ஒரு ட்ரிப் அடிக்கலாம்'' என்று அழைத்தார். அவருடன் தொற்றிக்கொண்டோம். எங்களைச் சுமந்தபடி மெல்ல நகர்ந்தது அந்தப் பேரதிசயம். சில நூறு சென்டிமீட்டர் தூரம் போன பிறகு எங்களைக் கப்பி காரிலிருந்து இறக்கிவிட்டார் பாகன்.

அதன் பிறகான காலங்களில் நான் பல நூறு மைல் தூரங்களைக் கடந்துவிட்டேன். என் நினைவின் சாலையில் அந்தக் கப்பி கார் இப்போதும் எங்கள் ஊரைவிட்டுத் தாண்டவே இல்லை!

- மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x