Last Updated : 31 Dec, 2015 09:49 AM

 

Published : 31 Dec 2015 09:49 AM
Last Updated : 31 Dec 2015 09:49 AM

இதுதான் நான் 6: அப்பாதான் என் ஹீரோ!

எல்லா பசங்களுக்கும் அவங்க அப்பாதான் ஹீரோ. எனக்கும் அப்படித்தான். நான் தாடியோடவே இருக்குறதுக்குக் காரணமும் அப்பாதான். நான் பாக்குறதுக்கும் அப்பா மாதிரிதான் இருப்பேன். சின்ன வயசுலேர்ந்து இப்போ வரைக்கும் அப்பாவ தாடியில்லாம நான் பார்த்ததே இல்லை. அப்பான்னா வீட்ல எங்க எல்லோருக்கும் பயம். மாசத்துல பத்து நாட்களாவது அப்பா அவுட்டோர் ஷூட்டிங் போய்டுவாங்க.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்கு வர்றப்ப அண்ணன் ராஜூவும் தம்பி பிரசாத்தும் ஓடிப்போய் அப்பாவ கட்டிப்பிடிச்சிப்பாங்க. ஒரு தடவைக்கூட நான் அப்படி செஞ்சதே இல்லை. அதுக்குக் காரணம் சொல்லத் தெரியல. ஆனா, அப்பாவ ரொம்பப் பிடிக்கும்!

சின்ன வயசுலயே தாடி வெச்சதுக்கு இன்னொரு காரணமும் சொல்லலாம். பதினைஞ்சு வயசுல டான்ஸ் மாஸ்டரா ஆயாச்சு. மெச்சூர்டா தெரியணும்கிறதுக்காகவும் தாடி வெச்சேன். தாடி எனக்கு நிறைய விஷயத்துல யூஸ்ஃபுல்லா இருந்திருக்கு. அதுல இதுவும் ஒண்ணு. அப்பாவுக்கு தாடி இருக்குறதால அம்மாவும் அத பெருசா எடுத்துக்கலேன்னு நினைக்கிறேன். வீட்டை பொறுத்தவரைக்கும் அது சாதாரண விஷயமா ஆச்சு. உடம்புல ஒரு அங்கமாவே நினைச்சிட்டிருந்த தாடியில இப்போ கொஞ்சம் வெள்ளையும் வந்திருச்சு. ஃபிரெண்ட்ஸ் பார்த்தாங்கன்னா ‘‘என்னடா மச்சான், ஸ்கூல்ல பார்த்த மாதிரி அப்படியே இருக்கியேடா. என்ன, தாடிதான் கொஞ்சம் நரைச்சுடுச்சு. டை அடிச்சுக்கோடா’’ன்னு சொல்வாங்க. ‘‘இப்போதான் இண்டர்வெல் முடிச்சு லைஃப்ல செகண்ட் ஆஃப் ஆரம்பிச்சிருக்கு. பரவாயில்லடா அது அப்படியே இருந்துட்டு போவட்டும்’’ன்னு சொல்லிட்டு சேர்ந்து சிரிச்சிப்போம்..

வளர்ந்து, ஹீரோ ஆன பிறகும்கூட, ‘‘ஏன் எப்பவும் தாடியோடவே இருக்கீங்க?’’ன்னு சிலர் கேட்டாங்க. தாடி இல்லாம என்னால இருக்கவே முடியாது. தாடி இல்லேன்னா ஏதோ வாழ்க்கை முழுமையே இல்லாத மாதிரி தோணும். தாடி வெச்சிக்காதவங்களப் பார்த்தா ‘அய்யோ பாவம் எப்படித்தான் இவங்க எல்லாம் தாடியில்லாம வாழ்றாங்களோனு!’ன்னு தோணும். ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் டபுள் ரோலில் நடிச்சிருப்பேன். அந்த நேரத்தில், ‘‘எப்படி ரெண்டு கேரக்டரும் தாடியோடவே நடிக்க முடியும்?’’ன்னு ஒரு பத்திரிகையாளர் கேட்டார். ‘தாடியே வெச்சிக்காம டபுள் ரோல் பண்றப்ப, இது கூடாதா?’ன்னு கேட்டேன். அவர் சிரித்தார். ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ படத்துக்காக தாடியை எடுத்தேன். சிலர் படத்துக்காக வெயிட் குறைப்பாங்க, ஏத்துவாங்க. ஏன், என்னன்னமோ பண்றாங்க. நான் தாடியத்தான் எடுத்தேன். இருந்தாலும் படத்துக்காக நாம எவ்வளவோ செய்றோம்னு பெரிய விஷயமா தோணுச்சு.

ஒரு கட்டத்தில் தாடியை மட்டும் வெச்சி அவுட்லைன் வரைஞ்சா கூட போதும். அதுதான் நான்னு அடையாளம் தெரியுற அளவுக்கு என் தாடி ஃபேமஸ் ஆச்சு. இப்போ என் பசங்கள கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்குறப்ப ‘அப்பா தாடி குத்துதுப்பா’னு சொல்றாங்க. இப்பதான் அதுக்குப் பிரச்சினை வந்திருக்குன்னு நினைக்கிறேன்.

டான்ஸ் மாஸ்டர்ங்கிறதால அப்பாவ எல்லோரும் ‘மாஸ்டர்ஜி’னுதான் கூப்பிடுவாங்க. கன்னடத்துல அப்பாவ ‘அப்பாஜி’னு சொல்வாங்க. அதனால நாங்க எப்பவுமே ‘அப்பாஜி’னுதான் கூப்பிடுவோம். அப்பாகிட்ட பலதடவை நான் அடி வாங்கியிருக்கேன். ஸ்கூல்ல பரீட்சை முடிஞ்சு புராகரெஸ் கார்டு கொடுக்குறப்போ அதில் கையெழுத்து வாங்குற அனுபவம் இருக்கே... எப்படா அப்பா ஷூட்டிங் போவார்னு வெயிட் பண்ணிக்கிட்டே இருப்பேன். போனதும், அம்மாகிட்ட ஓடிப்போய், ‘சீக்கிரம் சீக்கிரம்’னு மார்க்கை பார்க்கக்கூட விடாம, கையெழுத்த வாங்கிட்டு ஓடுவேன். ஆனா, அம்மாவுக்குத் தெரியும் என்ன மார்க்குன்னு.

அப்பா ஆடுறதை சின்ன வயசுலேர்ந்து பார்த்திருக்கேன். எப்பவுமே கிரேஸ்ஃபுல்லா ஆடுவார். நாங்க எல்லாம் சினிமாவுல முழு மூச்சா இறங்கின நேரம், அவருக்கும் வயசாச்சு. டான்ஸ்லேர்ந்து ஓய்வு எடுத்துக்கிட்டு மைசூர்ல ரிலாக்ஸா வாழ ஆரம்பிச்சுட்டார். சில வருஷத்துக்கு முன்னாடி ‘கமல் 50’ நிகழ்ச்சியில நானும், அப்பாவும் மேடையில ஒண்ணா சேர்ந்து ஆடினோம். அப்பாவுக்கு நான்தான் ஸ்டெப்ஸ் எல்லாம் சொன்னேன். அவரால ரொம்பவும் ஸ்பீடா ஆட முடியலை. அதுக்கு வயசுதான் காரணம். அதெல்லாம் ஓ.கே. சில ஸ்டெப்புங்கள மறந்துடுறார்.

டான்ஸ்ல ஒவ்வொரு ஸ்டெப்பையும் புதுசா உருவாக்கியவர், அப்போ சின்னச் சின்ன ஸ்டெப்பை மறப்பதை பாக்குறப்போ தாங்கிக்க முடியலை. அதை மறக்கவும் முடியலை. கஷ்டமா இருந்துச்சு. சின்ன வயசுலேர்ந்து அவரோட மூவ்மெண்ட்ஸை பார்த்து வளர்ந்தவன் நான். அன்னைக்கு நான் அவருக்கு ஸ்டெப்ஸ் சொல்றேன். அந்த ஃபீலிங்க் என்னன்னே எனக்குப் புரியலை. நமக்கு ஹீரோ அப்பாதான். அந்த ஹீரோவுக்கு எப்படி ஸ்டெப் மறக்கும்? ஏன் வேகமா ஆட முடியல? இதை எப்படி உங்ககிட்ட சொல்றதுன்னு எனக்கு வார்த்தை வரலை. உங்க வீட்லயும் உங்க ஹீரோங்க இருப்பாங்க. உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.

எல்லா வீட்லயும் அப்பா வேலைக்குப் போவதை பார்த்திருப்போம். சிலர் போலீஸா இருப்பாங்க, டீச்சரா இருப்பாங்க, ஆபீஸ் போவாங்க. வேலைக்குப் போய்ட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்துடுவாங்க. பெரும்பாலும் அப்பா ஆடுறத அவங்க பசங்க பார்த்திருக்க மாட்டாங்க. ஆனா, நான் என்னோட அப்பா ஆடுறத பார்த்தே வளர்ந்தேன். ஆரம்பத்துல அது எனக்கு புது அனுபவமாத்தான் இருந்தது. வீட்ல கண்டிப்பா இருக்குற அப்பா ஆடுறத பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். இப்படி ஜாலியா ஆடிக்கிட்டிருக்குற அப்பா, ஏன் அப்புறம் பயங்கர ஸ்டிரிக்டா இருகாருன்னும் அந்த வயசுல தோணுச்சு. சில நாளுங்க அப்படியே நினைச்சிக்கிட்டுத் தூங்கியிருக்கேன். திடீர்னு ஒருநாள் காலங்காத்தால அஞ்சரை மணிக்கு அண்ணன், தம்பி, என்னையும் எழுப்பினாங்க? ரெட் அண்ட் ரெட்டுல டிரெஸ் போட்டிருந்த ஒருத்தர் முன்னாடி கொண்டுபோய் நிறுத்தினாங்க? அவர் யாரு?

- இன்னும் சொல்வேன்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x