Published : 13 Dec 2015 01:22 PM
Last Updated : 13 Dec 2015 01:22 PM

இலாசந்திர ஜோஷி 10

இந்தி இலக்கியத்தில் மனோதத்துவ நாவல்களின் ஆரம்பகர்த்தா எனக் கருதப்படும் இலாசந்திர ஜோஷி (Ilachandra Joshi) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

உத்தராகண்ட் மாநிலம் அல்மோடாவில் (1903) பிறந்தார். அது இமயமலைப் பகுதி என்பதால், அதன் நீர்ப் பிரவாகங்கள், அருவிகள், நதிகளோடு கூடிய இயற்கை எழில் இளம் வயதிலேயே இவரது படைப்புத் திறனை விழிப்படையச் செய்தது.

* அறிவுக் கூர்மை, கற்பனை வளம் மிக்கவர். புராணங்கள், இதிகாசங்கள், காவியங்களை சிறு வயதிலேயே கற்றார். பல அறிஞர்களின் படைப்புகளையும் படித்தார். பள்ளிக் கல்வியில் பெரிதாக ஆர்வம் இல்லாததால், 10-ம் வகுப்போடு கல்வி முடிவுக்கு வந்தது.

* சுய முயற்சியில் பல மொழிகளைக் கற்றார். சிறிய வயதிலேயே எழுதவும் தொடங்கினார். முதல் கதை வெளிவந்தபோது இவருக்கு 12 வயது. 1929-ல் வெளிவந்த ‘கிருணாமயீ’ நாவல் இவருக்கு இலக்கிய உலகில் ஓரளவு அறிமுகம் பெற்றுத் தந்தது. 1940-ல் வெளியான ‘சன்யாசி’ நாவலால் பேரும் புகழும் பெற்றார்.

* கல்கத்தா சென்று, இவரது மனம்கவர்ந்த படைப்பாளியான சரத் சந்திர சட்டோபாத்யாவை சந்தித்தார். சில காலம் வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். கவிதை, விமர்சன நூல், கதைகள் என இலக்கியத்தின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தாலும், நாவல் ஆசிரியராகவே பிரபலம் அடைந்தார்.

* லஜ்ஜா, பர்தே கீ ராணி, முக்திபத், ஜிப்ஸி, சுபஹ், நிர்வாசித், பிரேத் அவுர் சாயா உள்ளிட்ட இவரது நாவல்கள் மிகவும் பிரசித்தம். தனது நாவல்கள் மூலம் சமூகத்தில் உயர்ந்த மதிப்பீடுகளை நிலைநிறுத்த முயற்சி செய்தவர். மனோதத்துவ யதார்த்தவாதம் இவரது நாவல்களின் அடிநாதமாகத் திகழ்ந்தது.

* இவரது படைப்புகளில் டால்ஸ்டாய், தஸ்தோயெஸ்கியின் தாக்கம் அதிகம் காணப்பட்டது. இவரது படைப்புகள் வெளி உலகில் நடைபெறும் நிகழ்வுகளை விடுத்து ஆழ்மன உலகை நோக்கி வாசகர்களை திருப்பிவிடும் தன்மை கொண்டிருந்தன.

* மொழி, இலக்கியத்தில் ஆழ்ந்த ஞானம், ஈடுபாடு கொண்டவர். இந்தி இலக்கியத்துக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கியவர். தன் கதைகளில் பெண்களின் நிலை, அவர்களது பிரச்சினைகள் குறித்து எழுதியதோடு அவற்றுக்கான தீர்வையும் வழங்கினார்.

* இவரது படைப்புகளின் நாயகர்கள் வீரதீர பராக்கிரமராக, சர்வ வல்லமை பெற்றவராக இல்லாமல், சாதாரண மனிதனுக்குரிய பலம், பலவீனங்களுடனே காணப்படுவார்கள். தூப்ரேகா, ஆஹுதி, கண்டஹர் கீ ஆத்மாயே உள்ளிட்ட கதைகள், ரவீந்திரநாத், சரத்: வ்யக்தி அவுர் சாகித்யகார் உள்ளிட்ட வாழ்க்கை வரலாற்று நூல்கள், சாகித்ய சர்ஜன், சாகித்ய சிந்தன் போன்ற விமர்சன நூல்கள் இவரது முக்கியப் படைப்புகள்.

* ஜோஷிஜி, கல்கத்தா சமாச்சார், சாந்த், விஷ்வவாணி, சுதா, சமாலோசக் பத்ரிகா, தர்மயுக், சாகித்யகார் உட்பட பல பத்திரிகைகளில் பணிபுரிந்துள்ளார். குழந்தை இலக்கியத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

* இவர் சிறந்த மொழிபெயர்ப்பாளரும்கூட. தாகூரின் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார். வங்க மொழி, ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இந்தி இலக்கிய உலகின் தலைசிறந்த படைப்பாளியாகப் போற்றப்பட்ட இலாசந்திர ஜோஷி 79-வது வயதில் (1982) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x