Last Updated : 11 Dec, 2015 03:28 PM

 

Published : 11 Dec 2015 03:28 PM
Last Updated : 11 Dec 2015 03:28 PM

மழை முகங்கள்: உத்வேகத்துடன் உதவிகள் புரியும் பாலிடெக்னிக் ஊழியர் பார்த்திபன்!

'தி இந்து' நிவாரண முகாம் நெகிழ்ச்சிப் பதிவுகள்

முகாமுக்கு வரும் ஒவ்வொரு வாகனங்களிலிருந்தும் நிவாரணப்பொருட்களை ஓடிஓடிச் சென்று இறக்கிக் கொண்டிருந்தார் பார்த்திபன். தன்னைப் பற்றிப் பகிர்வதற்கு கூட நேரம் ஒதுக்க தயங்கினார். அந்த அளவுக்குத் தீவிர ஈடுபாடு.

அரசு பாலிடெக்னிக்கில் பணியாற்றி வரும் பார்த்திபனுக்கு ஆவடியில் வீடு. ஆவடி அங்குள்ள வீட்டுவசதி வாரிய ஏரி உடைந்துவிட்டதால் தண்ணீர் சாலைக்கு வந்துவிட்டதாம். வி.ஏ.ஓ. மற்றும் கவுன்சிலர் வந்துபார்த்து, சாலையின் டிவைடர் சுவற்றை உடைத்துவிட்டனர்.

அதனால் சாலைக்கு இந்தப் பக்கம் வந்த ஏரித்தண்ணீர் அவரிருக்கும் ராஜ்பாய் நகர், மூர்த்தி நகர், வசந்த நகர் பகுதிகளுக்குள் எல்லாம் தண்ணீர் சூழ்ந்துவிட்டது.

ஆவடி டிபன்ஸ் பேக்டரியில் ஸ்டோர்ஸ் ஆபீசரான பார்த்திபனின் தந்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நண்பர்களிடம் 75,000 ரூபாய் வசூலித்தார். அங்குள்ள மக்களுக்கு உதவும் நோக்கத்தோடு ஆரம்பத்தில் செயல்பட்டாலும் பாதிககப்பட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்வதென முடிவெடுக்கப்பட்டது. உணவுப் பொட்டலங்களை தயார்செய்து தாம்பரம் பகுதியில் கொண்டுபோய் மக்களிடம் சேர்த்ததைப் பற்றி பார்த்திபனே இனி பார்த்திபன் குரலில்..

''தாம்பரம், முடிச்சூர், மணிமங்கலம், கிழக்குத் தாம்பரம் பகுதிகளில் எல்லாம் மக்கள் மழையால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். முக்கியமாக மணிமங்கலத்தில் மூன்று பக்கம் நீர் சூழ்ந்துள்ளதால் அங்குள்ள எல்லா வீடுகளிலும் புத்தகங்கள், முக்கியமான சான்றிதழ்கள் எல்லாம் வீணாகப் போய்விட்டது. அவர்களுக்கு உதவுவதற்காகத்தான் ஊடகங்களுக்கு பேசினேன். சேப்பாக்கம் நிவாரண முகாமுக்கு வந்ததும் அதையொட்டிதான்.

மணிமங்கலம் காந்திநகர் பகுதி அப்பார்ட்மெண்ட் மாடிகளில் மக்கள் உணவுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். ஹெலிகாப்டரில் உணவுகள் கொண்டுவரப்பட்டன. உயரத்தில் இருந்து போடப்பட்ட நான்கு உணவுப் பொட்டல பைகளில் இரண்டு சேற்றுத் தண்ணீரில் விழுந்துவிட்டன. இதனால் அவர்களுக்கு உணவு சரியாகப் போய்சேரவில்லை. இந்நிலையில் நாங்கள் கொண்டுசென்ற உணவு அப்பகுதி மக்களுக்கு பெரும்அளவில் பயனுடையதாயிருந்தது.

தொடர்ந்து கல்லூரி விடுமுறை என்பதால் இங்கு வந்தேன். இரண்டு நாட்களாக இங்கு வரும் வாகனங்களிலிருந்து பொருட்களை இறக்கிவைப்பதுதான் எனது வேலை. இப்படி நிவாரண முகாமில் வந்து உதவிகள் செய்யவேண்டிய அவசியத்தைப் பற்றி கேட்கிறீர்கள்.. அதற்கு என்னுடைய பதில் இதுதான்... ரெண்டு கைநிறைய எல்லா விரல்களிலும் மோதிரம் போட்டிருப்பவர்கள் எல்லாம் சாலையில் வந்து ரெண்டு துண்டு பண்ணு கிடைக்குமா என கையேந்தும் நிலைக்கு வந்துள்ளார்கள். இந்த நிலையில் இவர்களை விட ஏழ்மையான நிலையில் உள்ளவர்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

ஏழை பணக்காரர்கள் என்றில்லை. பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் பயனடைய வேண்டும். அவர்கள் மீண்டுவரவேண்டும். இந்த உதவி அந்த உதவி என்று இல்லை. நம்மால் எது செய்யமுடியுமோ அதை செய்யவேண்டும் என்று நினைத்தாலே போதும்'' என்று சொல்லிவிட்டு மீண்டும் பணியைத் தொடர்ந்தார் பார்த்திபன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x