Published : 29 May 2021 01:29 PM
Last Updated : 29 May 2021 01:29 PM

எலிசபெத் மகாராணிக்கு முன்னால்: ஆடர்லி ராதாகிருஷ்ணனின் நீங்கா நினைவுகள்!

மல்லிகா

ராதாகிருஷ்ணனோட அப்பா 1940ல மெட்ராஸ் கவர்னருக்கு சாரட்டு ஓட்டிக் கொண்டிருந்தார். தன் அப்பாவுடன் இவன் அடிக்கடி குதிரை லாயத்துக்குப் போய் குதிரை ஓட்டப் பயின்று கொண்டான். கவர்னர் சடங்கு அணிவகுகுப்புகளுக்கு (ceremonial parade) போகும்போது அவருடைய சாரட்டுக்கு முன்னே போகும் குதிரைகள் ஓட்டும் அணியில் ஒருவனாக ராதாகிருஷ்ணன் சேர்த்துக் கொள்ளப்பட்டான். ஒரு சமயம் வைஸ்ராய் லார்ட் மௌன்ட்பேட்டன் மெட்ராஸுக்கு வந்தபோது அவருடைய சாரட்டுக்குப் பின்னே சென்ற குதிரை அணியில் ஒருவனாகப் பங்கெடுத்தான்.

ராதாகிருஷ்ணனுடைய அம்மாவிற்குத் தன் மகன் மௌன்ட்பேட்டன் துரையின் குதிரை அணியில் பங்கெடுத்தது சொல்லி மாளாத பெருமை.

^^

1947ல சுதந்திரம் கிடைச்சுது. சில காலம் கவர்னர் ஜெனரலா இருந்துவிட்டு லார்ட் மௌன்ட்பேட்டன் இங்கிலாந்துக்குத் திரும்பினார்.

1950ல இந்தியா குடியரசு ஆனதும் கவர்னர் ஜெனரலுடைய எட்டுக் குதிரை சாரட், மாகாண கவர்னர்களோட நாலு குதிரை சாரட்டுகள், சாரட்டுக்கு முன்னும் பின்னும் போகும் குதிரைகள் போன்ற படாடோபங்களை டெல்லி அரசாங்கம் நிறுத்தியது.

கவர்னர்களுடைய கார்களுக்கு முன் குதிரைகள் இல்லாமல் “சைட் கார்” வைத்த மோட்டார் பைக் இருந்தால் போதும் என்று முடிவெடுத்தது. பளபளன்னு அலங்காரம் செய்திருந்த 1 குதிரைத் திறன்( horse power) குதிரைகளிலிருந்து சற்றே பல்லைக் காட்டும் 19 குதிரைத் திறன் (horse power) உடைய ராயல் என்ஃபீல்டு சைட் கார் வைத்த மோட்டார் பைக்கை ராதாகிருஷ்ணன் ஓட்ட ஆரம்பித்தான்.

ராதாகிருஷ்ணனுடைய அம்மாவிற்குத் தன் மகன் கவர்னருடைய அலங்கார குதிரை அணியைச் சேர்ந்தவன், இப்போது ஒரு சாதாரண மோட்டார் பைக் ஓட்டும் ஆடர்லியாக (orderly) ஆகிவிட்டானே, அந்தஸ்து சற்று குறைந்துவிட்டதே என்று வருத்தம்.

^^

காலப்போக்கில் சுதந்திர குடியரசு இந்தியாவில கவர்னர்கள் காருக்கு முன்னே போகும் மோட்டார் பைக்குகள், ஜனங்களுக்கு வெள்ளைக்காரன் ஜாலியன் வாலாபாக் அரக்கன் ஜெனரல் டயரை நினைவுபடுத்துகிறது என்று சொல்லி 1958இல் மத்திய அரசாங்கம் அதையும் நிறுத்திவிட்டது. இந்த மோட்டார் பைக் ஓட்டின ஆட்களை போலீஸ் இலாகா உபயோகத்துக்குத் தந்துவிட்டது.

^^

சைட் கார் வைத்த மோட்டார் பைக் ஓட்டும் எட்டு ஆடர்லிகளை, நவீன இந்தியாவோட புது மன்னர்களான சீனியர் ஐபிஎஸ் ஆபிஸர்கள் தங்களுடைய ஆடர்லிகளாக பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த சமயத்துல் மெட்ராஸ் நகருக்கு எஸ்.பி.யாக (Superintendent of Police) இருந்த அர்ஜுனன் ஐபிஎஸ் அதிகாரிக்கு ராதாகிருஷ்ணன் ஆடர்லியாக வந்து சேர்ந்தான்.

^^

ஆடர்லி என்பது இந்த ஆபிஸர்களுக்கு ஸ்டேட்டஸ் சிம்பில். போலீஸ் இலாகாவின் நியமனப்படி ஐஜிக்கு 4, டிஐஜி, எஸ்.பி.க்கு தலா மூணு ஆடர்லி, டிஎஸ்பிக்கு இரண்டு ஆடர்லி. இந்தியாவில் வழக்கமாக எல்லா அமைப்பிலும் இருக்கும் சிஸ்டம் இந்த ஆடர்லிகளுக்குள்ளேயும் அடுத்த வினாடி உருவாயிற்று. ஐ.ஜி.யின் ஆடர்லிகள் டிஐஜியின் ஆடர்லிகளை விட மேல் தரம்! டிஐஜியின் ஆடர்லிகள் எஸ்.பி.யின் ஆடர்லிகளை விட மேல் தரம்!

பல போலீஸ் ஆபிஸர்கள் ஆடர்லிகளை வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்திக் கொண்டார்கள். தோட்ட வேலை, துணி தோய்க்கும் வேலை, சமையல் வேலை, தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு விடும் வேலை, கடை கண்ணிகளுக்குப் போகும் வேலைக்கெல்லாம் எடுபிடி ஆட்களாக உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.

^^

அர்ஜுனன் I.P.S.

ஆள் பாதி, ஆடை பாதி என்னும் வசனத்துக்கு எஸ்.பி. அர்ஜுனன் நல்ல உதாரணம். மொடமொட என்று கஞ்சி போட்டு கத்தி முனை மாதிரி இஸ்திரி செய்த பேன்ட், ஷர்ட்; கருகருவென்று கட்டபொம்மன் மீசை; மீசையால் மறைக்கப்படாத முகம் தெரியும் போல் பாலிஷ் செய்யப்பட்ட பூட்ஸ், பாத்திரக் கடையில் இருக்கும் புதுப் பாத்திரம் போல் பளபளக்கும் பெல்ட் பக்கிள், ஷர்ட் தோள் பட்டையில் இருக்கும் காதில் “I.P.S.” என்னும் எழுத்துக்கள், கம்பீரமான மூன்று சிங்கம் ஸ்தூபம், Superintendent of Police “SP” க்கு அடையாளமான பட்டை, கோழி முட்டை வடிவத்தில் வெளிநாட்டிலிருந்து வரவழித்த கருப்புக் கண்ணாடி, கையில வெள்ளிப் பூண் போட்ட பிரம்புக் குச்சி.

^^

1961ல எலிசபெத் மகாராணி மெட்ராஸுக்கு வந்தபோது மாகாண உள் விவகார மந்திரி அர்ஜுனனைத் தன்னைப் பார்க்க வரச்சொல்லி எலிசபெத் ராணியின் விஜயத்தின் முழு பந்தோபஸ்துக்கான பொறுப்பையும் ஒப்படைத்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் அர்ஜுனன் Royal protocol officerகளுடன் பல விஷயங்களைப் பற்றி பேச வாய்ப்புக் கிடைத்தது. மகாராணி open top காரில் போவார்கள் என்று Royal Protocol officer சொன்னார். வெயிலாக இருக்குமே மகாராணியுடைய Bentley காரின் top ஐ மூடி விடலாமா என்று அர்ஜுனன் சொன்னார். அதற்கு அவர்கள், வெய்யிலாக இருந்தாலும் “It is never sufficient for Her Majesty to just see the common people, but it is vital to be seen by the people. In the UK a platoon of the Royal Mounted Guards lead her processions. But since India retired the Mounted Guards when she became a Republic, we request if a motorbike with a sidecar lead the retinue? It will please Her Majesty’s Government if a senior police officer of the district rides in the side car in full ceremonial uniform” என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள்.

^^

எலிசபெத் மகாராணி மெட்ராஸில் இருந்த ஒரு நாள் முழுவதும் அர்ஜுனன் IPS மோட்டார் பைக் சைட் காரில் ராணியோட காருக்கு முன்னாடி பவனி. பல பத்திரிகைகளில் மறுநாள் இந்த விஜயத்தைப் பற்றிய செய்திகளைப் பிரசுரித்து அத்துடன் அர்ஜுனன், ராதாகிருஷ்ணன் சைட் கார் காட்சி போட்டோவையும் போட்டிருந்தார்கள். ஒரு பத்திரிகைக்காரன் “மஹாபாரத அர்ஜுனனுக்குச் சாரதி கிருஷ்ணன். இந்த மெட்ராஸ் அர்ஜுனனுக்கும் சாரதி (ராதா) கிருஷ்ணன்”னு தமாஷாக எழுதியிருந்தான்.

ராதாகிருஷ்ணனுடைய அம்மாவிற்குக் கழுத்து தலையில் நிற்கவில்லை. தன் பையன் எலிசபெத் ராணியின் பவனியின்போது மோட்டார் பைக் ஓட்டினான் என்று சொல்லி மாளாத பெருமை.

^^

ராணி விஜயம் முடிந்ததும் அர்ஜுனன் ராதாகிருஷ்ணனைத் தன்னோட நிரந்தர மோட்டார் பைக் ஆடர்லியா நியமிச்சுட்டார். அது வரைக்கும் ஜீப்புல மட்டும் போயிண்டிருந்த SP அர்ஜுனன் அன்றிலிருந்து சைட் கார் பைக்கில். பத்திரிகைகாரர்கள் “Side car SP” என்று எழுத ஆரம்பித்தார்கள்.

அர்ஜுனனோட மனைவிகூட “ஏங்க நீங்க படபடக்கற வெய்யில்ல, கூட இப்படி பைக்குல போகறீங்க?”ன்னு கேட்டதுக்கு “எலிசபெத் ராணிக்கு பந்தோபஸ்து பண்ணினபோது சில விஷயங்கள் தெரிஞ்சுண்டேன். போலீஸ் ஆபிஸர் சத்தம் இல்லாத ஜீப்புல போனா ஊர் ஜனங்களை ஆபிஸர் பார்க்கலாம். ஆனா அதே போலீஸ் ஆபிஸர் பளிச்சுனு யூனிஃபார்ம் போட்டுண்டிருக்கற ஆடர்லி ஓட்டற மோட்டார் பைக்கோட சைட் கார்ல போனா அந்தச் சத்தத்துக்கே ஊர் ஜனங்க ஆபிஸரை எட்டிப் பார்ப்பாங்க. தனி பயம் கலந்த மதிப்பு வரும். மதில் சுவத்துல ஒட்டின சினிமா விளம்பர போஸ்டரோட எஃபெக்டை விட, ரோட்டுல தம்பட்டம் அடிச்சுண்டு தள்ளுவண்டில ஒட்டின சினிமா போஸ்டரோட எஃபெக்ட் பல மடங்கு ஜாஸ்தி இல்லையா!” என்று முடித்தார்.

^^

ராணியோட விஜயம் நல்லபடியா முடிந்து மூன்று மாதம் ஆனது. உள் விவகார மந்திரி அர்ஜுனனைத் திருச்சிக்கு DIG பதவிக்கு ப்ரமோஷன் செய்தார். ராதாகிருஷ்ணனுக்குச் சொந்த ஊர் திருச்சியானதுனால் அவருக்கு இது பழம் நழுவிப் பால்ல விழுந்த மாதிரி இருந்துது.

^^

அர்ஜுனன் திருச்சி Range DIG ஆகி இரண்டு வருஷ காலம் ஆகிற்று. DIG அர்ஜுனனுக்கு அரசாங்கத்தில் நல்ல பேர்.

ராதாகிருஷ்ணனுடைய அம்மாக்கு தன் பையன் சாதாரண DIGக்கு மோட்டார் பைக் ஓட்டும் ஆடர்லியாக இருக்கான்னு வருத்தம். ஆனாலும் கண் காணாத மெட்ராஸில் பெரிய அதிகாரிகளுக்கு வேலை செய்வதை விட, உள்ளூரில் கொஞ்சம் குறைவான முக்கியப்பட்டவருக்கு வேலை செய்தாலும் தனக்கு சினிமா தியேட்டர்களில் சுலபமாக டிக்கெட் கிடைக்கறது போன்ற வசதிகளை நினைத்து மனதை சமாதானம் செய்து கொண்டாள்.

^^
ஹெட் குவார்ட்டர்ஸ்

திருச்சி கன்டோன்மென்ட்

DIG அர்ஜுனன் தலைமையில் அவருடைய ரேஞ்ச்ல அடங்கிய புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாதிரியான இடங்களுடைய Superintendent of Police (SP) Deputy Superintendent of Police (DSP)க்களின் annual இரண்டு நாள் கான்ஃபரன்ஸ் நடந்து கொண்டிருந்தது. இன்று இரண்டாவது நாள். வந்திருந்த எல்லாருமே Indian Police Service (IPS) officers. இந்த SP, DSPகள் அவரவர்களுடைய ஆடர்லிகளும் வந்திருந்தார்கள்.

^^

உள்ளே போலீஸ் ஆபிஸர்கள் கான்ஃபரன்ஸ். வெளியில் மரத்தடியில அந்த ஆபிசர்களோட ஆடர்லிகள் கான்ஃபரன்ஸ். ஆடர்லிகள் அவனவன் தன்னை ஆபிஸர்கள் எப்படி நடத்துகிறார்கள் என்கிற விவர பரிவர்தனை.

ராதாகிருஷ்ணன்: “மோட்டார் பைக் ஓட்டணும், வண்டியை டிப் டாப்பா வெச்சுக்கணும், நான் போட்டுக்கற யூனிஃபார்மும் டிப் டாப்பா இருக்கணும். ட்யூட்டி சமயத்துல பீடி குடிக்கக் கூடாது…”

புதுக்கோட்டை ஆடர்லி: என்னை ஒரு வேலைக்காரனா நடத்துவாரு. பள்ளிக்கூடத்துக்கு ஐயாவோட பசங்களை சைக்கிள்ள இட்டுண்ணு போவணும்…”

நாகப்பட்டினம் ஆடர்லி: “அம்மா கடைக்குப் போகையில அவங்க பின்னாடி பை எடுத்துட்டு போவணும்ப்பா. என் ஊட்டுக்காரிக்குக் கூட நான்…”

கும்பகோணம் ஆடர்லி: “ஐயா வீட்டுல நான் சமையல்காரன், தோட்டக்காரன்…”

தஞ்சாவூர் ஆடர்லி: “ஒங்க பொளப்பெல்லாம் பரவாயில்லீங்க. ஐயாக்கு வேலைக்கு வந்த அன்னிலேந்தே கழுதை மேல துணியை எடுத்துக்கிட்டு காவேரிக்கரைக்குப் போய் துணி தோய்ச்சுட்டு வரணும். மானம் என்னிக்கோ போயிடுத்து. சமயத்துல தற்கொலை பண்ணிக்கலாம்னு தோணுது…”

ராதாகிருஷ்ணன்: “மெய்யாலுமா?! ஐயா என்னை ரொம்ப கௌரவமா வெச்சிட்டிருக்காரு. ஊட்ல அம்மா, சம்சாரம் எல்லாருக்குமே சந்தோசந்தான்…நீ எப்படிதான் சமாளிக்கறயோ? பாவம்ப்பா நீ…”

^^

கான்ஃபரன்ஸ் முடிந்து மூன்று மாதம் ஆகி இருக்கும்.

ஹெட் க்வார்டர்ஸில் ராதாகிருஷ்ணன் மோட்டார் பைக்கை பாலிஷ் பண்ணிக் கொண்டிருந்தான். DIG அர்ஜுனோட பியூன் வந்து “சார் ஒன்னை உள்ள வரச்சொன்னாரு”ன்னு கூப்பிட்டான்.

கையில் இருந்த waste cottonஐ டக்குனு கீழே போட்டுட்டு DIGயோட ஆபிஸுக்குப் போனான். பளீர் என்று சல்யூட் அடிச்சுட்டு “சார்…”னு

DIG “ராதாகிருஷ்ணன், என்னை டெல்லியில CBIக்கு பிரமோஷன்ல அனுப்பறாங்க. மூணு வருஷ போஸ்டிங். Trichy Rangeக்கு DIGயா தஞ்சாவூர் SP வராரு. நீ அவருக்கு ஆடர்லியா…”

ராதாகிருஷ்ணன் எண்ணத்துல அந்த தஞ்சாவூர் ஆடர்லி சொன்ன கழுதை காட்சி ஓடுத்து.

அவனோட மனக்குதிரையில …’ராதாகிருஷ்ணா, ஒரு நாளைக்கு வேலையில்லாத பத்திரிகைக்காரன் எவனாவது நீ கழுத பின்னால நடந்து போவறத போட்டோ எடுத்து அது பக்கத்ல மகாராணி வந்தப்போ எடுத்த போட்டோவைப் போட்டு ‘மகாராணிக்கு முன்னால்…. கழுதைக்குப் பின்னால்’ன்னு போட்டுட்டான்னா ஒன் மானம் என்னடா ஆவுது?’

^^

வீட்டுக்கு வந்து அம்மாவிடமும், சம்சாரத்திடமும் விஷயத்தைச் சொன்னான்.

அவனோட அம்மாக்கு மௌன்ட்பேட்டன் துரைக்குக் குதிரை ஓட்டி, எலிசபெத் மகாராணிக்கு மோட்டார் பைக்கும் ஓட்டின என் பையன் கழுதை மேல பொதி மூட்டை ஏத்திண்டு, காவேரிக்குப் போய் துணி தோய்ச்சு…

“வேலையை விட்டுத் தள்ளுடா. மானம்னு ஒண்ணு இருக்குது. அர்ஜுனன் ஐயா நல்லவரு. ஒன்ன நல்லா வெச்சிட்டிருந்தாரு. ஒரு வேளை திரும்ப வந்தார்னா நீ அவர்கிட்ட வேலை கேளு. அது வரைக்கும் திருச்சியிலயே ஒனக்குத் தெரிஞ்சதை வெச்சுகிட்டு வேற எதினாச்சும் வேலை பண்ணி சம்பாரி. ஒனக்கோ ஒங்கப்பாரு காலத்துலேந்தே குதிரை சம்மந்தம் இருக்கு”ன்னா.

ராதாகிருஷ்ணனோட சம்சாரமும் “ஆமாங்க, நம்ம வூட்லகூட நானும், அத்தையும் ஒங்களத் துணிமணி தோய்க்க சொல்றதில்ல. அத்தை சொல்லிட்ருக்கற மாதிரி வேற எதினாச்சும் வேலயைப் பாருங்க”ன்னு சொன்னா.

^^

இரண்டு மாசம் ஆச்சு.

ராதாகிருஷ்ணன் தற்சமயம் திருச்சி ஜங்ஷன்ல ஜட்கா வண்டி ஓட்டிட்டிருக்கான்.

>>>>

கட்டுரையாளர்: மல்லிகா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x