Published : 08 Nov 2015 12:09 PM
Last Updated : 08 Nov 2015 12:09 PM

ஆற்றல் ஞாயிறு: என் வாழ்வில் திருக்குறள் 2

திருக்குறள் காட்டும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றும் வாழ்வின் முக்கிய அம்சங் களைக் கொண்ட கையேடு. ஆயிரக்கணக் கானோர் மேன்மேலும் திருக்குறளை ஆய்வு செய்து புதிய எண்ணங்களை உலகுக்குக் கொடுக்க வேண்டும். திருக்குறள் ஒரு கடல். அதில் எல்லா செல்வங்களும் உள்ளன.

‘பயனில சொல்லாமை’ என்ற அதிகாரத்தில் கடைசிக் குறளைப் படிக்கும்போது, என் உள்ளத்தில் எழுச்சி ஏற்பட் டது. இந்தக் குறளைப் படித்தவுடன் திரு வனந்தபுரத்தில் விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்கு நராக இருந்த பேராசிரியர் பிரம்ம பிரகாஷ் தான் என் நினை வுக்கு வந்தார்.

1972-ல் இந்தியாவின் முதல் ராக்கெட்டை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்றும் தலைமைப் பொறுப்பு எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது எனது இயக்குநராக இருந்த போராசிரியர் பிரம்ம பிரகாஷ், என் வாழ்க்கை நெறிக்கு வழிகாட்டிய இக்குறளுக்கு முன்னுதாரணமாகவே திகழ்ந்தார்.அந்தக் குறள் இது:

‘சொல்லுக சொல்லின் பயனுடைய சொல்லற்க
சொல்லின் பயனிலாச் சொல்’

இந்த நாட்டுக்குத் தேவையான மிக முக்கிய மான அணு உலை உலோகப் பொருட்களை ஆராய்ச்சி மூலம் உருவாக்கி உற்பத்தி செய்து கொடுத்தவர் அவர். உலோகப் பொருட்களை உற்பத்தி செய்யும் விஞ்ஞானத்திலும் தலைசிறந்த விஞ்ஞானி. எவ்வளவு பெரிய திட்டமானாலும், சிறந்த ஆராய்ச்சி விளைவுகளானாலும் அவர் சகவிஞ்ஞானிகளை, குறிப்பாக இளம் விஞ்ஞானிகளைப் பேசத் தூண்டி, அவர்களது எண்ணங்களைக் கேட்கத் துடிப்பார். எந்த ஒரு விஞ்ஞானக் கலந்துரையாடலிலும் அவர் பேசுவது ஒரு சில வார்த்தைகளே. இதனால் பலர் தங்களது எண்ணங்களைத் தங்குதடை யின்றி வெளிபடுத்தவும், தங்களது திட்டங்களை உறுதிபட விளக்கவும் வாய்ப்பை வாரி வழங்கி னார். அதே நேரத்தில் தனது முடிவை வெகு விரைவாகக் கூறி, அதற்கான வழிமுறைகளையும் சொல்வார். இப்படியாக அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் ஓர் ஆழ்ந்த கருத்தைக் கொண்டதாக இருக்கும். அவர் கேட்பது அதிகம்; பேசுவது குறைவு. இதனால் குறைந்த நேரத்தில் முடிவெடுக்க முடியும். அதுதான் அந்த மாமனிதரின் அரும்பெரும் குணம். அவரிடத்தில் பணிசெய்த ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அடிநாதமாக அமைந்து, எப்போதும் பயனுடையதாகவே பேசவும், எண்ணவும், செயல்படவும் செய்தது. ஒரு விஞ்ஞானியோ, தொழில் தலை வரோ அல்லது ஆசிரியரோ தன் வாழ்வில் உயர உயர, ‘பயனில சொல்லாமை’ என்ற குணத்தை வளர்த்து, இளைய தலைமுறையினரின் கருத்துகளை வெளிவரச் செய்ய வேண் டும். அவர்களுக்கு ஊக்கம் அளித்து பயனுள்ள சொற்களையே சொல்வதற்கும், சிந்திப்பதற் கும், செயல்படுவதற்கும் வழிகாட்டி, வாய்ப்புகளை அளிக்க வேண்டும்.

இந்தக் குறளின் சாற்றை ஒவ்வொரு குடும்பத்திலும் பெற்றோர் தங்கள் குழந்தை களுக்குப் புகட்ட வேண்டும். கல்வி நிலையங்களில் ஆசிரியர்கள் இதை மாணவர் மனதில் பதியச் செய்து, அவர்கள் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் நம் மக்களின் சக்தியைப் பன்மடங்காக உயர்த்த முடியும். வளர்ந்த நாடாக இந்தியா பரிணமிக்க முடியும்.

2200 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் அளிக்கப்பட்ட திருகுறளில் ஓர் இடத்திலாவது ஒரு நாட்டைப் பற்றியோ, ஒரு மதத்தைப் பற்றியோ, ஒரு கடவுளைப் பற்றியோ, தாய் மொழி தமிழைப் பற்றியோ, ஒரு சொல்கூட கூறப்படவில்லை. திருவள்ளுவர் ஒரு நாட்டுக்குரிய தத்துவஞானி அல்ல; உலகத் தத்துவ ஞானி!

அவர் மதங்கள், மார்க்கங்களுக்கு அப்பாற் பட்டவர். அப்பெரும் மகான் தந்துள்ள உலக மறை நூலை, அவரின் சிந்தனைகளை, எண்ண எழுச்சிகளை என்றென்றும் நினைவுகொண்டு ஆய்வுப் புத்தகங்கள் பல தோன்றி மக்களின் வாழ்வைச் சிறப்பு செய்யவேண்டும்.

- நல்வழி நீளும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x