Published : 22 Feb 2021 10:32 AM
Last Updated : 22 Feb 2021 10:32 AM

திரைப்படச்சோலை 8: கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்

சிவகுமார்

மாயவரத்தை அடுத்த சின்ன கிராமம் மல்லியம். காலை 9 மணி. எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி. சுப்பையா, பத்மினி, நாகேஷ் ஆகியோருடன் நானும் இருந்தேன்.

கேஎஸ்ஜி வந்தார். 'கண்கண்ட தெய்வம்' படத்தில் பத்மினி கேரக்டர் என்ன என்பதையெல்லாம் விளக்கியவாறே முதல் காட்சியில் தொடங்கி ஒவ்வொரு காட்சியிலும் நடிகர்கள் பேசும் வசனத்தை அப்படியே அவர்களைப் போல் பேசி நடித்துக் காட்டி, அங்கங்கே சிரித்து, பல இடங்களில் உணர்ச்சிவசப்பட்டு கூச்சலிட்டு, அழுது அரற்றி 2 மணி நேரத்தில் ‘மோனோ ஆக்டிங்’ முறையில் முழுப் படத்தையும் பார்த்தது போல் நடித்துக் காட்டிவிட்டு குப்புறப்படுத்து அழுதார்.

எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு முழுப் படத்தையும் நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்திய கோபாலகிருஷ்ணனை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, ‘‘டேய்! நீ நவீன அகஸ்தியன்டா. உன்னை மாதிரி ஒருத்தனைப் பாக்கவே முடியாது!’’ என்றார் ரங்காராவ்.

காட்சிகள், வசனங்கள் எல்லாம் மூளையில் தயாராக இருக்கும். மத்த டைரக்டர்கள் போல் பேப்பரில் எழுதி ஃபைல் போட்டு அதைப் பார்த்துப் படம் எடுப்பவர் அல்ல.

எந்தப் படப்பிடிப்புக்குப் போனாலும் உதவி இயக்குநர் வந்து, ‘சார், இன்னிக்குப் படமாக்கப் போற காட்சியில், உங்க வசனம் இது. மனப்பாடம் பண்ணி பயிற்சி எடுத்துக்குங்க!’ என்று சொல்வார்கள்.

இவர் கம்பெனியில், வசனத் தாள் கேட்டால், ஏதோ அரையும், குறையுமாக கிறுக்கிய பேப்பரைக் காட்டுவார்கள். ஆனால், மனப்பாடம் செய்யவிட மாட்டார்கள். காரணம். நடிக்கும் போது வசனங்களை மாற்றி, மாற்றிச் சொல்லிக்கொண்டே இருப்பார் கே.எஸ்ஜி.

கண்கண்ட தெய்வம் - சிவா -ஓஏகே தேவர்

பத்து வரி வசனத்தை நாம் சிரமப்பட்டு 10 நிமிடத்தில் மனப்பாடம் செய்து தயார் என்று சொன்னால், கேமரா ஓடுவதற்கு முன்பு, சிவகுமார் அந்த வசனத்தில் 8 வது வரிய தூக்கி 2- ஆக வச்சுக்க, 6 வது வரியக் கடைசியில சொல்லு, ‘டேக்’ என்பார். நமக்குத் தலை சுற்றிவிடும்.

ஒரு தடவை இந்த மாதிரி ஒரு ஷாட்டில் எஸ்.வி. சுப்பையாவை மாற்றிச் சொல்லச் சொன்னபோது அவரால் முடியவில்லை. ‘அட சட்! என்னண்ணே நீங்க. இதைக்கூட சரியாச் சொல்லலே?’ன்னு, எல்லார் முன்னாலயும் சொன்னதால அவமானப்பட்ட எஸ்.வி.எஸ், ‘இனி கோபாலகிருஷ்ணன் ஸ்டுடியோ இருக்கற பக்கமே தலை வச்சுப் படுக்க மாட்டேன்னு கோவிச்சுகிட்டுப் போயிட்டாரு.

முதலில் 5, 6 படங்களில் எனக்கு டூயட் காட்சி வரவில்லை. 'கண்கண்ட தெய்வம்' படத்தில், நான் தனியே பாடும் ஒரு பாடல் காட்சி, டூயட் என்று இரண்டு பாடல்கள் இருந்தன.

நாளைய தினம் பாடல் காட்சி படமாக்கப் போவதாகத் தெரிந்தது. டைரக்டர் வீட்டுக்கு எதிரேயுள்ள ரைஸ் மில் களத்தில் ‘டான்ஸ் மூவ்மென்ட்’ 3 மணி நேரம் ஒத்திகை பார்த்து வியர்த்து விறுவறுத்து வந்தேன். ‘என்னப்பா பண்றே ரைஸ் மில்லிலே?’ என்றார் கேஎஸ்ஜி.

‘நாளைக்குப் பாடல் காட்சி படமாக்கப் போறீங்களே. அதுக்கு ஒத்திகை பார்க்கறேன்!’.

‘‘முட்டாள். மரத்து மேல் உன்னை உட்கார வச்சு முழுப் பாட்டையும் நீ அங்கிருந்தே பாடற மாதிரி படமாக்கப் போறேன். எதுக்கு வீணா சிரமப்படறே?’’ என்றார்.

ரங்காராவ் -சுப்பையா -டைரக்டர்

‘‘ஐயய்யோ! மரத்து மேல பாட்டுன்னா, 100 பேர் வேடிக்கை பாக்கறப்போ, ஏறுய்யா மரத்து மேலன்னு சொன்னா, நாம மாட்டிக்குவமே. மரமேறத் தெரியாதேன்னு -பக்கத்தில மரம் ஏறுகிற ஆசாமியைப் புடிச்சு -‘அண்ணா, மரம் ஏறக்கத்துக் குடுங்கண்ணா!’ன்னேன்.

திடீர்னு ஒரு யோசனை. நாகேஷ் நம்ம ஊர்க்காரர்தானே? அவரு குரங்கு மாதிரி வேக, வேகமாத் தாவி ஏறுறாரு. நாம ஏற முடியாதா? சின்னப் புள்ளேதானேன்னு, காலுல தாம்புக்கயிறு போடாம தத்தி, தத்தி 10 அடி உயரம் ஏறிட்டேன். ரெண்டு காலும் தந்தி அடிச்சுது.

‘சாமி, சாமி கால் நடுங்குதே!’ன்னாரு.

‘என்ன ஆகும்?’ னேன்.

‘கீழே விழுந்திடப்போறீங்க பத்திரம்!’னாரு.

‘ஐயோ, அப்படியா?’ன்னு மரத்தைக் கட்டிப் பிடிச்சேன்.

‘கட்டிப்புடிக்காதீங்க. நெஞ்சு உறிஞ்சு போகும்!’னாரு..

‘அட, அதை விட உயிர் முக்கியம்!’னு ‘சர்.. சர்..சர்..!’னு கீழே வந்திட்டேன். நெஞ்சுப் பக்கமெல்லாம் சிராய்ச்சு ரத்தம் வடிஞ்சுது. பக்கத்தில ஓடின மோட்டார் பம்ப் தண்ணில கழுவிட்டு, ரூமுக்குப் போய் பவுடர் அடிச்சிட்டு, ‘ரவுண்ட் நெக்’ -பனியன் போட்டுக்கிட்டேன்.

‘என்னய்யா! ஊருக்குச் சம்பந்தமில்லாம ஸ்டைலா பனியன்?’ அப்படின்னாரு டைரக்டர்.

‘மரம் ஏறி நெஞ்சு உறிஞ்சு போச்சு!’ன்னேன்.

‘மடையா! ஏணி வச்சு ஏத்தி விடுவம்ல? நீ எதுக்கு கஷ்டப்பட்டு இதெல்லாம் கத்துக்கப் போனே?’ன்னு திட்டினாரு.

‘ஏம்பா! இதெல்லாம் முன்னாடியே சொல்லக்கூடாதா?’

‘சொல்ல மாட்டாங்க. 7000 ரூபாய் சம்பளம் வாங்கறவங்கிட்ட இதெல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லே. பாதிப்படம் வேலை நடக்கும்போதே காலையில மல்லியத்தில 5 மணிக்கு டைரக்டர் கூட நாய்க்குட்டி மாதிரி ‘வாக்கிங்’ போவேன்.

ரங்காராவ் -பத்மினி

‘‘அடுத்த படத்தில நீதான் ஹீரோ! ஜோதிலட்சுமி ஜோடி. 2 பாட்டு ஏற்கெனவே ரெக்கார்டு பண்ணி வச்சிருக்கேன். குற்றாலம் போய் ஒரே தம்மா படத்தை முடிச்சிரலாம்!’’ன்னு சொல்லிட்டிருந்தாரு.

‘கண்கண்ட தெய்வம்’ படம் சரியா ஓடலே. 2 மாதம் இடைவெளியாயிருச்சு. ஆபீஸ்ல போய் பார்த்தேன். தினத்தந்தி நிருபர் அதி வீர பாண்டியன் வந்திருந்தார்.

‘‘பாண்டியன்! அடுத்தபடம் ‘டபுள் ஹீரோ’ சப்ஜக்ட். ஜெமினி கணேசன் சிவகுமார் நடிக்கிறாங்க!’’ என்று பேட்டி கொடுத்தார்.

2 மாதங்கள் கழிச்சுப் போனேன். அசிஸ்டன்ட் டைரக்டர், ‘நீங்க செகண்ட் ஹீரோவா நடிக்கிறீங்க!’ன்னாரு. ‘டபுள் ஹீரோ’ன்னா பாதிக்குப் பாதி வலுவான வேஷம். செகண்ட் ஹீரோன்னா 2 காட்சியில கூட நம்ம வேஷம் முடிஞ்சிடும்.

‘பக்’குன்னு ஆயிருச்சு. அப்புறம் ஒரு மாதம் கழிச்சு கேஎஸ்ஜியோட கற்பகம் ஸ்டுடியோ போனேன்.

‘‘நீ... ம்... உம்... இந்தப் படத்தில இருக்கே!’ அப்படின்னாரு.

2 காட்சிகளில் புஷ்பலதாவுடன் நடிக்கிற மாதிரி சீன் படப்பிடிப்பு நடக்கும்போது ஒரு வேகம் வந்து சிவகுமாருக்கு ஒரு பாட்டு சேர்க்கலாம்னு- அன்னிக்கு சாயங்காலமே உடுமலை நாராயணகவியை வரச் சொல்லி ‘வாம்மா, வாம்மா, வாம்மா.. தெருவாசலை சாத்திட்டு வாம்மா! நாம மாடிக்குப் போவோமா? நூறு தரம் நெனைச்சதை ஒரு தரம் சொல்லணும். நொடிக்குள்ளே நமக்குள்ளே பெருங்கதை பேசணும். 6 மணி ரயிலுக்கு ஊருக்குப் போகணும். அடுத்த வருஷம்தான் மறுபடி பாக்கணும்’ -பாட்டு எழுதி, சீர்காழியைப் பாடச் சொல்லி, அடுத்த 2 -நாளில் படப்பிடிப்பும் முடிந்தது. ஆக, 2 காட்சி, ஒரு பாட்டு ஓகேன்னு சந்தோஷப்பட்டேன்.

ஏதோ ஒரு பத்திரிகையில கேஎஸ்ஜி அறிமுகப்படுத்தின நடிகை, ‘நடிகைகள் பிறக்கிறார்கள். உருவாக்கப்படுவதில்லை!’ அப்படின்னு பேட்டி குடுத்திருக்காங்க. அதைப் படிச்சதும் இவருக்கு கோபம் வந்திருச்சு.

தெருத்தெருவா வேஷங்கேட்டு சுத்துனவளை நான்தான் ஹீரோயின் ஆக்கி பேரு வாங்கிக் குடுத்தேன். இவளுக பிறவி நடிகைகளா?’-ன்னு கோவிச்சுக்கிட்டு அந்தப் படத்தில் ஜெமினி -சரோஜா தேவி வேஷத்தை பாதியாக் குறைச்சிட்டு நாகேஷ், அலேக் நிர்மலா வேஷத்தை டெவலப் பண்ணிட்டாரு. ‘எலந்தப் பழம், எலந்தப் பழம் செக்கச் செவந்த பழம்’னு ஒரு பாட்டு, ‘வாழைத்தண்டு போல உடம்பு அலேக்!’-னு ஒரு பாட்டு போட்டு மசாலா படமாக்கிட்டாரு.

என்னை ரொம்ப நாள் ஷூட்டிங் கூப்பிடவே இல்லை. ஒரு மாதம் கழிச்சு ஒரு நாள் கார் வந்திச்சு. வண்டியில டி.கே.பகவதி அண்ணா இருந்தாரு.

என்னைப் பார்த்ததும் ஒரு கேள்வி கேட்டாரு.

‘‘ஏன் தம்பி! நீங்க இந்தப் படத்தில நடிக்கிறீங்களா?’’

‘‘ஏண்ணே?’’

‘‘ஒரு மாசமா நான் வர்றேன். இன்னிக்குத்தான் உங்களைப் பார்க்கறேன். இதுவரைக்கும் உங்களை ஷூட்டிங்ல பாக்கலயே அதான் கேட்டேன்!’னாரு.

பேசும் தெய்வம். சிவாஜி -பத்மினி

ஏதோ வில்லங்கம் நடந்திருக்குன்னு தெரிஞ்சுட்டு, ஸ்டுடியோ போய் கேமராமேன் டிரைவர்கிட்ட, ‘என்ன நடந்துச்சு’ன்னு கேட்டேன்.

‘உங்க சீன் எல்லாத்தையும் வெட்டிட்டு, நாகேஷ் விஜய நிர்மலா மேல கதையை டெவலப் பண்ணிட்டாரு டைரக்டர்னு சொன்னார் டிரைவர்.

அதிர்ச்சியில டைபாய்டு வந்து 15 நாள் படுத்திட்டேன். 1000 ரூபாய் அட்வான்ஸ் குடுத்திருந்தாங்க. மீதி ரூ.6000 வரணும். ஆபீஸ் போனேன்.

‘நீங்க நடிச்ச 2 நாளைக்கு அதுபோதும்!’னாரு மேனேஜர். ‘நான் நடிக்க மாட்டேன்னா சொன்னேன். நீங்கதானே நடிச்ச காட்சிகளை கூட வெட்டிட்டீங்க!’ன்னேன். பதில் ஏதும் பேசவில்லை. அவ்வளவுதான்.

தாங்க முடியாத கோபம். ஏமாற்றம். இவங்க ஆபீஸ் பக்கம் இனி போகக்கூடாதுன்னு வந்துட்டேன்.

‘பணமா பாசமா?’ படம் ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட். நான் படமே பாக்கலே. பூந்தமல்லி ஹைரோட்டுல அருண் ஓட்டலில் வெள்ளி விழா நிகழ்ச்சி. எனக்கும் அழைப்பு வந்தது. போகலாமா; வேண்டாமா? என்று மனப் போராட்டம்.

ஹீரோவாக நடிக்க வைக்கறேன்னு சொல்லி, டபுள் ஹீரோன்னு சொல்லி, செகண்ட் ஹீரோவாக்கி, எடுத்த 2 சீனையும் வெட்டி அவமானப்படுத்தியிருக்காரு. போகாதேன்னு ஒரு மனசு சொல்லுச்சு.

நீ ஒண்ணும் ராஜபரம்பரையில் பொறக்கலை. ஏவிஎம், வாசன் வாரிசும் இல்லை. ஏதோ ஒரு சூழ்நிலையில இப்படி ஆயிடுச்சு. சிவகுமாருக்கு அடுத்த படத்தில நாம நல்ல வேஷம் குடுக்கணும்னு டைரக்டர் நினைச்சிருந்தார்னு வையி. அவார்டு ஃபங்ஷனுக்கு நீ போகலேன்னா திமிர் புடிச்சவன்னு உண்மையிலேயே உன்னைக் கோபிச்சு அந்த ஐடியாவையே அவர் டிராப் பண்ணிட வாய்ப்பு இருக்குல்ல? மரியாதையா ஃபங்ஷனுக்குப் போ!’ன்னு இன்னொரு மனம் சொல்லுசச்சு.

ஆதிபராசக்தி -சுப்பையா -எஸ். வரலட்சுமி

போனேன். மேக்கப், காஸ்ட்யூமர், உதவி டைரக்டர் பேரெல்லாம் கூப்பிட்டு ஷீல்டு குடுத்திட்டு, கடைசியில சிவகுமார்னு கூப்பிட்டு எனக்கும் ஒரு கேடயம் குடுத்தாங்க. பக்கத்தில உட்கார்ந்திருந்தவர், ‘உங்களுக்கு எதுக்கு கேடயம்? படத்தில நடிச்சிருக்கீங்களா?’ன்னு கேட்டாரு. ‘நடிச்சிருந்தேன். எல்லாம் வெட்டிட்டாங்க!’ என்றேன்.

‘வெட்டிப் போட்ட வேஷத்துக்கெல்லாம் கேடயம் தர்ற கேஎஸ்ஜி உண்மையிலயே பெரிய மனுஷந்தான் அப்படின்னாரு. எனக்கு வயிறு எரிந்தது.

குறத்தி மகன் - ஜெமினி - கே. ஆர். விஜயா

ஆனா, உண்மையிலேயே கேஎஸ்ஜி அடுத்தபடம் ‘குறத்தி மகன்’ல பத்மினி மகனாக நடிக்க வாய்ப்பளித்து 2 நாள் படப்பிடிப்பும் நடந்தது. பத்மினி திருமணமாகி அமெரிக்கா போய் விட்டதால் குறத்தி வேஷத்தில் பத்மினிக்குப் பதில் கே.ஆர். விஜயா நடிக்க ஒப்பந்தமானார். என் வேடம் மாஸ்டர் ஸ்ரீதருக்குப் போய்விட்டது. இன்னும் நமக்கான நேரம் வரவில்லை என்று பொறுமையாகக் காத்திருந்தேன்.

---

அனுபவிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x