Last Updated : 11 Oct, 2015 03:47 PM

 

Published : 11 Oct 2015 03:47 PM
Last Updated : 11 Oct 2015 03:47 PM

கலாம் நெஞ்சமெலாம்! 4

இந்திய அரசின் முதன்மை அறி வியல் ஆலோசகர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அப்துல் கலாம், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்ற உள்ளார் என பத்திரிகைகளில் படித்ததும், எனக்குள் சந்தோஷம் கரைபுரண்டோடி யது. அவருடைய சுய சரிதையில் குறிப்பிட்டிருந்த பல விஷயங்கள் குறித்து அவரிடம் கூடுதல் தகவல்களை அறிய ஆர்வம் கொண்டிருந்தேன்.

குறிப்பாக, அவருடைய குழந்தைப் பருவத்தின் முக்கிய நிகழ்வுகள், ராணுவ விமானம் ஓட்ட வேண்டும் என்ற கனவை அந்தப் பிஞ்சுப் பருவத்தில் எப்படி வலுப்படுத்திக்கொள்ள முடிந்தது? ராமேசுவரத்தில் தேசியவாதி மாணிக்கத் திடம் இருந்து இரவல் வாங்கிப் படித்த புத்தகங்கள் எப்படிப்பட்ட தாக்கங்களை ஏற்படுத்தின?

சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் செயல் விளக்கத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்களைப் பார்த்ததும் ஏற்பட்ட பரவசத்தில், தன்னந்தனியாக நீண்ட நேரம் அவற்றின் பக்கத்திலேயே உட்கார்ந்திருந்தபோது அவர் மனதில் தோன்றிய எண்ணங்கள்…

பெங்களூரு விமான வடிவமைப்பு மேம்பாட்டு அமைப்பில், றெக்கை இல்லாத, இலகுவான, ஹோவர் ரக விமான மாதிரியை இந்தியாவிலேயே வடிவமைத்து, உருவாக்கும் நால்வர் குழுவுக்குத் தலைமையேற்று செயல் பட்டபோது, அவரைக் குறிவைத்து ஏவப்பட்ட சொல்லம்புகள் ஏற்படுத்திய ரணத்தை எப்படி சரிபடுத்த முடிந்தது?

இப்படிப்பட்ட பல கேள்விகளுக்கு அவரிடம் விளக்கம் பெற்றுவிடலாம்; அவரது வாழ்க்கைப் பயணத்தின் இன்னும் எத்தனையோ அனுபவங்களை அறிந்துகொள்ள முடியுமே என அவரின் சென்னை வருகைக்காக ஆசையுடன் காத்திருந்தேன். அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்த சில நாட்களிலேயே அவர் சுற்றுப் பயணம் புறப்பட்டுவிட்டார். நான் கற்பனை செய்து இருந்ததற்கு மாறாக ஏகப்பட்ட வேலைகளில் அவர் மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், எனது ஆசை கடைசி வரை நிறைவேறவே இல்லை.

ஆனாலும், அவரை நான் சந்தித்த பல தருணங்களில் அவருடன் உரை யாடும்போது, அதனையொட்டி நான் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், எனக்கு ஒரு பாதையை அமைத்துக்கொடுத்தன.

நானும் பதிப்பாளர் காந்தி கண்ண தாசனும் அண்ணா பல்கலைக்கழகத்தில் சந்தித்து முதல்முறையாக சுமார் 2 மணி நேரம் பேசிக்கொண்டிருந்த அந்த நாள் (15.2.2002), என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு திருநாள்.

என்னைப் பார்த்ததுமே அவர் கேட்ட முதல் கேள்வி ‘‘எப்படி நீங்க டிரான்ஸ்லேட் செய்தீங்க? ராக்கெட், சாட்டிலைட் பத்தியெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? எப்படி இவ்வளவு நல்லா உங்களால எழுத முடிஞ்சுது? அதை நீங்க எனக்கு சொல்லணும்” என்று ஆர்வத்துடன் கேட்டார். இந்த மொழிபெயர்ப்பில், பத்திரிகையாளர் சந்திரனின் பங்களிப்பு பற்றி விரிவாகக் கூறினேன். ‘‘அக்னிச் சிறகுகளை நான் டிரான்ஸ்லேட் செய்ததா நினைக்கலை சார். நீங்க பக்கத்தில இருந்து எனக்கு டிக்டேட் செய்த மாதிரி இருந்தது சார்’’ என்று பணிவாகச் சொன்னேன்.

அவருடைய அளவு கடந்த பாராட்டு தர்மசங்கடமாகக்கூட இருந்தது. 275 பொறியாளர்கள் தேவைப்பட்ட எஸ்.எல்.வி-3 ராக்கெட் திட்டத்தை வெறும் 50 பொறியாளர்களுடன் வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டியது; இந்த ராக்கெட்டுகளுக்கான 10 லட்சம் உதிரிப் பாகங்களையும், சுதேசித் தயா ரிப்புகளாக 300 தொழிற்சாலைகள் மூலம் உருவாக்க வைத்தது; அக்னி ஏவுகணைத் திட்டத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்காக எல்லா முனைகளில் இருந்தும் ஏவிவிடப்பட்ட நிர்பந்தங்களை நீர்த்துப் போகச்செய்தது என எத்தனையோ சாதனைகளை நிகழ்த்திய இந்த வெற்றி நாயகனை ‘அக்னிச் சிறகுகள்’ தமிழ் வடிவம் இந்த அளவுக்கு கவர்ந்துள்ளதா என வியந்தேன்.

ஒரு சிறிய மேஜையைச் சுற்றி நாங்கள் மூன்று பேரும் அருகருகே அமர்ந்தவாறு அந்த மாலைப்பொழுதில் அவ்வளவு நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த காட்சி இப்போதும் என் மனக் கண்ணில் விரிகிறது.

அவரது கவிதைகள், கட்டுரைகள், சொற்பொழிவுகள், பள்ளிக் குழந்தை களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் இவை அனைத்தையும் ஒரு நூலாகத் தொகுக்கும் பணிக்காக எங்கள் இருவரையும் அன்று வரச்சொல்லி இருந்தார்.

கையில் கிடைத்த தாள்களின் ஓரங்களைக்கூட விடாமல் அவரது சிந்தனைகளை எழுதி வைத்திருந்தார். மக்களைக் கொத்துக் கொத்தாக காவு வாங்கிய லாட்டூர் (குஜராத்) பூகம்பத்தில் பலியான ஒரு குடும்பத்தினரின் தரை மட்டமான வீட்டருகே ஒரு நாய், தன் னைப் பராமரித்து வளர்த்த அந்தக் குடும்பத்தில் ஒருவர்கூட உயிர் பிழைக் காததால், அங்கேயே பட்டினி கிடந்து மடிந்த துயரத்தை ஒரு கவிதையில் குறிப்பிட்டிருந்தார். நெஞ்சை உலுக்கும் இந்த சோகத்தை, சொத்து தகராறில் பெற்ற தந்தையைப் பட்டினி போட்டு சித்திரவதை செய்த ஈவிரக்கமற்ற மகன் மீதான நீதிமன்ற வழக்கோடு ஒப்பிட்டு, பாசமும், மனிதமும் மரித்துப் போன கொடுமையை சாடியிருந்தார்.

கவிதைகளின் சில இடங்களில் அவர் கையெழுத்துப் புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த சந்திப்பில் இதுகுறித்து நான் கேட்டபோது உரிய விளக்கம் அளித்தார். ‘‘தேவைப்படும் இடங்களில் நீங்கள் மாற்றம் செய்துகொள்ளுங்கள்’’ என்றார்.

‘‘சார் எனக்குக் கவிதை தெரியாது’’ என்று சொன்னேன்.

‘‘உங்கள் ‘அக்னிச் சிறகுகள்’ மொழிபெயர்ப்பே ஒரு கவிதைதானே?’’ என முகமலர்ச்சியுடன் கூறினார்.

‘‘சார்! அது உங்களோட அக்னிச் சிறகுகள்’’ என்றதும் மவுனமாக புன்னகைத்தார்.

பாரதியாரின் கட்டுரைகளும், கவிதை அல்லாத பிற படைப்புகளும் அடங்கிய பாரதி ஆய்வாளர் சீனி.விஸ்வநாதனின் ஒரு தொகுப்பு பெரிய புத்தகமாக வெளிவந்திருந்தது. இந்த நூலை அருமை நண்பரான பத்திரிகையாளர் அரவிந்தனிடம் இருந்து இரவல் வாங்கி, அப்துல் கலாமிடம் காட்டுவதற்காகக் கொண்டு சென்றேன். அதைப் பார்த்ததும் ஆசையாக வாங்கி வைத்துக் கொண் டார். திருப்பிக் கேட்க எனக்கு மன மில்லை. அரவிந்தன் அறியாமலேயே அவரது அன்புப் பரிசாக இந்த நூல் கலாமிடம் போய் சேர்ந்துவிட்டது.

சிறகுகள் விரியும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: mushivalingam@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x