Last Updated : 18 Oct, 2015 02:29 PM

 

Published : 18 Oct 2015 02:29 PM
Last Updated : 18 Oct 2015 02:29 PM

கலாம் நெஞ்சமெல்லாம் 5: குழந்தைப் பருவம் என்ற பொக்கிஷம்

யாருமே தங்களை அற்பமானவர்கள் என்றோ நிராதரவானவர்கள் என்றோ எப்போதுமே நினைக்கக் கூடாது என்று கூறியுள்ள கலாம், நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை மாணவ சமுதாயத்தினரிடம் குறிப்பாகப் பள்ளிக் குழந்தைகளிடம் வேரூன்ற வைப்பதில் முழு மூச்சாக செயல்பட்டார்.

“எனது குழந்தைப் பருவம் எனது விலைமதிப்பில்லாத பொக்கிஷம்” என தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ள அவர், ஒவ்வொரு குழந்தையும் இந்தப் பொக்கிஷத்தைக் கண்டுணர வழிகாட்டினார்.

ஒருநாள், அண்ணா பல்கலைக்கழகத் தில் அவரை சந்திக்கப் போனபோது, ஒரு கடிதத்தைக் காட்டினார். திருப்பூரை அடுத்த தாராபுரம் அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ஒருவர் எழுதி யிருந்த கடிதம் அது. அந்தப் பள்ளிக்கூட மாணவர்களிடம் கலாம் பேச வேண்டும் என ரத்தினச் சுருக்கமாக எழுதி அழைப்பு விடுத்திருந்தார்.

“இந்த ஊருக்கு கோயம்புத்தூரில் இருந்து காரில் போனால் எவ்வளவு நேரமாகும்னு உங்களுக்குத் தெரியுமா சார்?” என்று கேட்டார். எனக்குத் தெரியலை சார். நண்பர்கள்கிட்ட கேட்டு இன்னிக்கே உங்களிடம் சொல்றேன்’’ என்றேன்.

“சரி, ஆனா அந்த ஸ்கூலுக்கு நான் வரப்போறேன்று முன்கூட்டி அவங்க கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க. கோயம் புத்தூர்ல ஒரு புரொகிராம் இருக்கு. அதுக்குப் போனா அந்தப் பள்ளிக் கூடத்துக்கும் போகலாம்னு நினைக் கிறேன். ஒருவேளை கோயம்புத்தூருக்கு என்னால் போக முடியலேன்னா அந்த ஸ்கூலுக்கும் என்னால் போக முடியாது’’ என விளக்கமாகச் சொன்னார்.

அந்தக் கிராமத்து மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தார். என்னிடம் மட்டுமல்ல; அன்றைய தினம் அவரைப் பார்க்க வந்திருந்த அவருக்கு நன்கு அறிமுகமான அனை வரிடமும் கோவையில் இருந்து அந்தக் கிராமத்துக்குச் செல்வதற்கான பயணநேரம் குறித்துக் கேட்டிருந்ததை அவரது செயலாளர் பின்னர் என்னிடம் கூறினார்.

எந்த அழைப்பும் இல்லாமலேயே சென்னையில் உள்ள ஒரு பள்ளிக்குச் சென்று மாணவக் கண்மணிகளிடம் கலந்துரையாடி, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்த சம்பவமும் நிகழ்ந்தது.

ஜனாதிபதி பதவிக்குப் போட்டி யிடுவதற்கான வேட்புமனுவை டெல்லி யில் தாக்கல் செய்த ஓரிரு நாட்களில், குரோம்பேட்டை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்தார் அப்துல் கலாம். விமான நிலையத்தில் இருந்து தாம்பரம் அருகே உள்ள பூண்டி பஜார் சந்திப்பைக் கடந்து தாம்பரம் சானட்டோரியம் வழியாக அந்தக் கல் லூரிக்கு அவர் செல்ல இருந்ததால், பாதுகாப் புக்காக தமிழக போலீஸார் வழியெங்கும் குவிக்கப் பட்டிருந்தனர்.

தாம்பரம் சானட்டோரியம் அருகே உள்ள ஜெயகோபால் தேசிய மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாக செல்லவிருந்த நாளைய ஜனாதிபதி கலாமுக்கு வாழ்த்துச் சொல்லத் துடிததனர். பள்ளி நிர்வாகமும் அனுமதி அளித்தது. பூண்டி பஜார் சந்திப்பில் இருந்து அந்தப் பள்ளிக்கூடம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் வரையில், சாலையின் இரண்டு பக்கங்களிலும் மாணவர்கள் அணிவகுத்து நின்றனர். அந்த வழியாக அப்துல் கலாமின் கார் வந்ததும், முன் பக்க அட்டையில் அவர் படம் இடம்பெற்றிருந்த பள்ளிக்கூடக் காலண்டரைத் தூக்கிப் பிடித்து கைகளை ஆட்டியவாறு வாழ்த்துத் தெரிவித்தனர். அவரும் காரின் கண்ணாடியை இறக்கிவிட்டு கையசைத்து மாணவச் செல்வங்களை வாழ்த்தினார்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் போலீஸார் குழு ஒன்று மோப்ப நாயுடன் அந்தப் பள்ளிக்குள் நுழைந்தது. கலாம் அங்கு வரப்போவதால் பாதுகாப்பு சோதனைக்காக அந்தக் குழு வந்திருந்ததை அறிந்ததும், ஆனந்தமும் உற்சாகமும் பள்ளி வளாகத்தில் கரைபுரண்டோடியது. கலாம், தனது வழக்கமான பாணியில் கருத்துப் பரிமாற்றம் செய்து ஒன்றரை மணி நேரம் அங்கு செலவிட்டார். மாணவர்களிடம் விடை பெறும்போது, சிலரின் தோள்களில் கைபோட்டவாறு தோழமையுடன் அவர் உரையாடியதைத் தமிழாசிரியர் தாமரைக் கண்ணன் நெகிழ்ச்சியுடன் என்னிடம் நினைவுகூர்ந்தார்.

பள்ளிக்கூடக் குழந்தைகளிடம் உரையாடுவதில் அவருக்குக் கொள்ளை இன்பம். குழந்தைகளைப் பார்த்ததும் அவரே ஒரு குழந்தையாக மாறிவிடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். குழந்தை களை சந்திப்பதில் அவருக்கு இப்படி ஓர் ஆர்வம் பிறந்தது குறித்து அவரிடமே கேட்டேன்.

“குழந்தைகளை சந்திச்சுப் பேசும் போது நிறைய விஷயங்கள கத்துக்கிறேன் சார். அவங்களோட துடிதுடிப்பும் உற்சாகமும் எனக்குள்ளேயும் வந்துடும். அவங்க எவ்வளவு பெரிய பெரிய விஷயங்களை சொல்றாங்க தெரியுமா?” என்று பிரமிப்புடன் கூறினார்.

அவரது இந்தக் கருத்தின் ஆழத்தை அப்போது நான் உணரவில்லை. அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பின்னர் நான் அறிந்தபோதும், பள்ளிக்கூடக் குழந்தைகளிடம் நான் உரையாடும்போது எனக்கு ஏற்படும் அனுபவங்கள் வாயிலாகவும் அவர் களின் சிந்தனையின் வீரியத்தைக் கண்டு பிரமித்துப் போகிறேன். குழந்தைகளை அவர் சந்தித்ததற்கான அடிப்படையை அவரே பின்வருமாறும் குறிப்பிட்டுள்ளார்:

“குதூகலம் பொங்கும் குழந்தை களுடன் உரையாடி கருத்துப் பரிமாற் றம் செய்துகொள்வதன் மூலம் எனக்கு நானே மறுவடிவம் கொடுத்துக்கொள்ள முடிகிறது. நமக்குள்ளே உறைந்துள்ள உள்ளார்ந்த உயர்ந்த சுயத்தைக் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பு கிறேன். பள்ளிக் குழந்தைகளுடன் கலந்துரையாடுவதன் மூலம், அறி வியல் மீது ஒரு காதல் பிறக்கும் வகையில் அவர்கள் மனங்களில் ஒரு பொறியைக் கிளறிவிட முடியும். இந்த அறிவியல் மோகத்தின் காரணமாக, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற குறிக்கோளை எட்ட வைக்கும் லட்சிய தாகத்தை உருவாக்க முடியும் என்றும் கருதுகிறேன்.”

நாட்டை முடக்கிப் போட்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் குழந்தைகள் மூலம் தீர்வு காண முடியும் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை!

பள்ளிக் குழந்தைகளுடனான ஒரு சந்திப்பின்போது, கேட்கப்பட்ட ஒரு கேள்வி தன்னை அடியோடு வீழ்த்தி விட்டதாகவும், பிரதம மந்திரி யால்கூட அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது எனவும் கலாம் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கேள்வி என்ன?

- சிறகுகள் விரியும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: mushivalingam@yahoo.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x