Published : 23 Nov 2020 10:14 AM
Last Updated : 23 Nov 2020 10:14 AM

சித்திரச்சோலை 15: அத்தையின் கடைசி ஆசை

சிவகுமார்

இளமைக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஹீரோவைப் பிடிக்கும். அப்படி சிறு வயதில் என் இதயத்தில் குடிபுகுந்தவர் சிவாஜி கணேசன்தான். சிவாஜி-பத்மினி ஜோடி என்றால் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும். திரையுலகில் மட்டுமல்ல, சொர்க்கத்திலும் அவர்கள் இணைபிரியாது இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான்.

சிவாஜி கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்திருப்பினும், பத்மினியுடன் அவர் 59-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார். அதில் மறக்க முடியாத படங்கள், 'எதிர்பாராதது', 'உத்தமபுத்திரன்', 'தங்கப்பதுமை', 'தில்லானா மோகனாம்பாள்', 'வியட்நாம் வீடு' ஆகியவை.

காதலன் சிவாஜி வெளிநாடு படிக்கப்போய் விமான விபத்தில் இறந்து விட்டதாகச் செய்தி. விதிவசமாக சிவாஜியின் தந்தை நாகையாவுக்கு பத்மினி மனைவியாகி விடுவார். விபத்தில் இறந்துவிட்டதாக நினைத்த சிவாஜி திரும்பி விடுவார். ஆனால் கண்பார்வை இழந்திருப்பார்.

ஒரு மழைநாளில் ‘சிற்பி செதுக்காத பொற்சிலையே - என் சித்தத்தை நீ அறியாயோ?’ என்று உருக்கமாகப் பாடிக் கொண்டு வர, பழைய நினைவுகளில் மூழ்கிய பத்மினி முன்னாள் காதலனை நெருங்க -ஒரு விநாடியில் சுதாரித்து, தான் தவறிழைக்கவிருந்ததை மின்னல் வேகத்தில் உணர்ந்து சிவாஜியை அடி அடியென்று அடித்து புரட்டி எடுத்து விடுவார்.

நாள் முழுக்க மழையில் நனைந்துகொண்டே நடித்ததுடன் பத்மினி தாக்குதலும் சேர்ந்துகொள்ள சிவாஜிக்கு ஜுரம் வந்து படுக்கையில் விழுந்துவிட்டார். செய்தி அறிந்த பத்மினி, சிவாஜிக்குப் புதிய கார் ஒன்றை வாங்கிப் பரிசளித்துச் சமாதானப்படுத்தியதாகச் சொல்வார்கள்.

சிவாஜியுடன் பத்மினி

இதேபோல ‘தெய்வப்பிறவி’யில் தன் கணவனை மரியாதைக் குறைவாகப் பேசிவிட்ட தம்பி எஸ்.எஸ்.ஆரை., குடைக்கம்பிகள் உடைந்து கிழியும் வரை அடித்து நொறுக்கி விட்டார். எஸ்.எஸ்.ஆரும்., அன்றிரவு ஜுரத்தில் நடுங்கினார். பாவம் அவருக்கு கார்தான் கிடைக்கவில்லை.

‘உயர்ந்த மனிதன்’ ‘க்ளைமேக்ஸில்’ சிவாஜி பிரம்பால் அடிக்கும் காட்சி. படமாக்கப்படும் முன்னரே சிவாஜி சொல்லிவிட்டார். அடிக்கற விஷயத்தில் மட்டும் என்னால் நடிக்க முடியாது. பின்னி எடுத்துவிடுவேன் என்று. அதேபோல்தான் நடந்தது. பிரம்பால் அடி அடின்னு அடித்து, பிரம்பு ஒடிந்து விட்டதனால் காலால் என்னை எட்டி உதைக்க பக்கத்திலிருந்த சோபா மீது நான் தெறித்து விழுந்தபோது, வலது தோள்பட்டை மூட்டு கழண்டு கொண்டது. அப்போது ராம் தியேட்டர் அருகில் 24 மணி நேர ஆஸ்பத்திரி ஒன்றிருந்தது. அங்கு போய் மூட்டை மாட்டிக்கொண்டு வந்தேன்.

‘விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் - வீட்டுக்கு கெஸ்ட்டாக வந்த ராணி காஞ்சனாவை பத்மினி வரவேற்கவில்லை என்பதற்காக சிவாஜி ஓர் அறை விட்டார். அவ்வளவுதான். காதில் இருந்த தோடு கழன்று குதித்து குதித்து ஓடி அடுத்த FLOOR-ல் 15 அடி தாண்டிப் போய் விழுந்துவிட்டது.

அசிஸ்டன்ட் டைரக்டர்கள் தேடி எடுத்து வந்தனர். லைட்டிங் எல்லாம் செய்து முடித்து அடுத்த ‘ஷாட்’டுக்கு பத்மினியைத் தேடினார்கள். அவர் எங்கும் தென்படவில்லை. எதிர் FLOOR-ல் இருட்டறையில் சேரில் தனியே உட்கார்ந்து குலுங்கிக் கொண்டிருந்தார்.

‘என்னம்மா ஆச்சு?’

‘ஒன்றுமில்லை. சிவாஜி குடுத்த அறையில் பல்லு ஆடுதான்னு சந்தேகப்பட்டேன். அப்படி எதுவும் இல்லை. ஆனா, வலி தாங்காமல் உடம்பு நடுக்கமெடுத்திட்டுது. வலி போக கொஞ்ச நேரம் அழுதிட்டு வந்திடறேன்!’னு சொன்னாங்க.

பத்மினி ஓவியம்

இதை நானே பார்த்தேன். சிவாஜிகிட்ட அடி வாங்கின மறுநாள் அப்பா, ராணியோடு நெருக்கமாகப் பழகுவதாக நான் அம்மாவிடம் சொல்ல, அப்பாவைப் பற்றிப் பேச உனக்கு யார்றா தைரியம் குடுத்ததுன்னு 10 வரி வசனம் பேசி கன்னத்தில அறையற ஷாட்.

சிவாஜி, பத்மினி பொதுவா டயலாக் பேசும்போது வார்த்தை பிசகாது. ஒளற மாட்டாங்க. அன்னிக்கு எனக்கு நேரம் சரியில்லை. பளார், பளார்னு ஓங்கி அறைஞ்சிட்டு அந்த நீண்ட வசனத்தைப் பேசணும். கொஞ்சம் அளவுக்கு மேல உணர்ச்சி வசப்பட்டுட்டாங்க.. அதனால ஏழு ‘டேக்’ ஆயிருச்சு. வசனம் பேசினதுக்கப்புறம் அறையற மாதிரி ‘ஷாட்’ அமைச்சிருந்தா தப்பா பேசும் போதே கட் ஆயிருக்கும். அடி வாங்காம தப்பிச்சுக்கலாம். ஆனா, அறைஞ்சதுக்கப்புறம் வசனம் பேச வேண்டி வந்ததால ஒவ்வொரு முறையும் 7,8 அறை கன்னத்துல அறைஞ்சிட்டு, அப்புறம்தான் வசனம் பேசணும்ங்கறபோது 7 டேக் X 8 அறை 56 தடவை அவர் கைவிரல்கள் என் கன்னத்தில விளையாடிட்டது.

தோலுரிச்ச தர்பூஸ் பழம் மாதிரி ரெண்டு கன்னமும் வீங்கி விட ஐஸ்கட்டியை வைத்துக் கொண்டே அன்று மாலை டைரக்டர் பஞ்சு மகள் செளமித்ரா-நரேந்திரன் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள ராஜேஸ்வரி கல்யாண மண்டபம் சென்று வந்தேன்.

நான் வரைஞ்ச பத்மினி ஓவியம் நவ இந்தியாவுல முத முதல்ல வெளியாயிருந்திச்சு. அதன் மூலமாக நிறைய பேனா நண்பர்கள் கிடைச்சாங்கன்னு முன்னமே சொல்லியிருக்கேன்.

விளையாட்டுப் பிள்ளை படத்தில்...

மோகன் ஆர்ட்ஸ்ல -வேலை பார்த்தப்போ ‘பொன்னு விளையும் பூமி’ன்னு ஒரு படம் எடுத்திட்டிருந்தாங்க. விளம்பர பேனர் வரைய அந்தப் படத்தோட போட்டோக்கள் வந்திருந்திச்சு. அதில பத்மினி படம் ஒண்ணு ரொம்பவும் அழகா இருந்திச்சு. 1958-ன் கடைசி மாதத்தில் அதை ‘பிளாக் அண்ட் ஒயிட்’டில் ‘வாஷ் டிராயிங்’ (WASH DRAWING) ஆக வரைஞ்சிருந்தேன். ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் நுழைவுத் தேர்வுல தேர்வு எழுத வந்த மாணவர்களை மிரட்டின ஓவியங்கள்ல அதுவும் ஒண்ணு.

2006-ல் பத்மினியோட உறவுக்கார இளைஞன் வினீத்ங்கிற நடிகர் திருமண விழா. வினீத் பரதம் கத்துகிட்ட நடிகர். கலை நிகழ்ச்சிகள்ளே அவர் நாட்டியம் நிச்சயம் இருக்கும். அந்த விழாவுக்கு பத்மினி படத்தை ‘பேக்’ பண்ணி எடுத்திட்டுப் போயிருந்தேன்.

பப்பியம்மாவைப் பாத்ததும், ‘அம்மா! இதுக்குள்ள என்ன இருக்கு சொல்லுங்க பார்ப்போம்னேன். ‘சாரி! நீயே சொல்லிடுப்பா..!’ன்னாங்க. பார்சலை பிரிச்சுக் கொடுத்தேன். முகம் பிரகாசமாயிருச்சு. ‘ஏம்பா, நான் இவ்வளவு அழகா இருந்தேனா?’ன்னு கேட்டாங்க. ‘இதை விட அழகா இருந்தீங்க!’ன்னு சொன்னேன். வயசுப் பொண்ணு மாதிரி கன்னம் சிவக்க வெட்கப்பட்டாங்க.

‘இதை நான் வச்சுக்கலாமா?’

‘உங்களுக்காகத்தான் கொண்டு வந்தேன்!’

‘தேங்ஸ்!’

அதே ஆண்டு 2006 சூர்யா -ஜோதிகா திருமண விழா. அடையாறு கேட் ஓட்டலில் நடைபெற்றது. அம்மா வந்து மணமக்களை வாழ்த்தினாங்க. முந்தைய நாள் நடந்த மெகந்தி நிகழ்ச்சிலயும் கலந்துகிட்டு, சின்னப் பொண்ணுகளோட பஞ்சாபி பங்கடா டான்ஸ் ஆடினாங்க.

சூர்யா - ஜோதிகா திருமணத்தில்...

அதே மாதம் 24-ம் தேதி விண்ணுலகம் புறப்பட்டு போயிட்டாங்க. நடிகை ஷோபனா வீட்டில் இறுதி மரியாதை செய்யப்போனேன். கண்ணாடிப் பேழைக்குள்ள, பளிங்கு போன்ற முகம்.

புத்தர் சிலையில் காணப்படும் சாந்தி, புன்சிரிப்பு முகத்தில். மாலை அணிவித்து பாதம் தொட்டு வணங்கிவிட்டு கடைசியாக முகத்தை ஒரு முறை பார்த்தேன். தலைமாட்டில் சிறு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அருகில் பத்மினி படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

திருவிதாங்கூர் சகோதரிகள் -ராஜவம்சத்து வம்சாவளி என்றெல்லாம் தொடக்கக் காலத்தில் பேசப்பட்டவர்கள். நாட்டியங்களில் மட்டும் கலந்து கொள்வார்கள். திரைப்படங்களில் நடிக்க மாட்டார்கள் என்று பேசப்பட்ட காலத்தில் நாடு விடுதலை பெறுவதற்கு முன் ‘வேதாள உலகம்’ படத்தில் லலிதா, பத்மினியை நாட்டியம் ஆட வைத்து பாடலைப் படமாக்கியவர் ஏ.வி.எம். செட்டியார்.

சிவாஜியோட ‘பணம்’ படத்தில் 1952-ல் நடித்தவர். சிவாஜியோடு அதிகப் படங்களிலும், அடுத்து எம்.ஜி.ஆர்., ஜெமினியுடன் சில படங்களிலும் நடித்தவர். ‘வஞ்சிக் கோட்டை வாலிபன்’ படத்தில் வைஜயந்தி மாலாவுடன் அவர் ஆடிய போட்டி நடனம் இன்னும் மறக்க முடியாத ஒன்று.

தெலுங்கில் என்.டி.ராமாராவுடன், நாகேஸ்வரராவுடன் நடித்தவர். இந்தியில் திலீப்குமார், ராஜ்கபூருடன் நடித்தவர்.

16 வயசிலேயே உதய்சங்கர் இயக்கத்தில் ‘கல்பனா’ங்கற இந்திப்படத்தில் நடிச்சவங்க.

மலையாளத்தில் சத்யன், பிரேம்நசீர் கூடயும், கன்னடத்தில ராஜ்குமார் கூடயும் நடிச்சவங்க.

பட்சிராஜாவின் ‘ஏழைபடும் பாடு’ படத்தில 1950-ல முதல் முறையா தமிழ்ப் படத்தில் நடிக்க ஆரம்பிச்சவங்க.

ரஷ்யா -மொழில ‘பர்தேசி’ங்கிற படத்தில ‘ஓலக்’ங்கற ஹீரோவோட நடிச்சவங்க.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ரஷ்யன் மொழிகளில் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடிச்சவங்க.

மாடர்ன் டிரஸ், குடும்பப் பெண்கள் உடை, புராண பாத்திரங்கள், சரித்திர வேடங்கள்-னு அவங்க போடாத வேஷங்கள் இல்லை. அணியாத உடைகள் இல்லை. எடுக்காத போட்டோக்கள் இல்லை.

ஆனா, எந்த போட்டோவும் அவர் உடல் வைக்கப்பட்டிருந்தபோது தலைமாட்டில் இல்லை. இந்த சிவகுமார் வரைஞ்ச பத்மினி ஓவியம் மட்டும் இருந்திச்சு.

உடம்பு முழுக்க சிலிர்த்து காதோரம் விறைத்து கண்கள் நீரில் மிதந்தபடி ஷோபனாவைப் பார்த்தேன்.

‘இது அத்தையோட கடைசி ஆசை!’ன்னு ஷோபனா சொன்னாங்க. மறக்க முடியாத தருணம் அது.

---

தரிசிப்போம்..

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x