Published : 12 Oct 2015 10:01 AM
Last Updated : 12 Oct 2015 10:01 AM

ராமகிருஷ்ணரின் சீடர் சுவாமி அகண்டானந்தர் 10

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடர்களில் ஒருவரான சுவாமி அகண்டானந்தர் (Swami Akhandananda) பிறந்த தினம் இன்று (அக்டோபர் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கல்கத்தாவில் உள்ள அஹ்ரிடோலா என்ற இடத்தில் (1864) பிறந்தார். இயற்பெயர் கங்காதர் கங்கோபாத்யாய். தந்தை புரோகிதர், சமஸ்கிருத ஆசிரியர். சிறு வயது முதலே ஆன்மிக நாட்டம், இரக்க குணம் மற்றும் பல நற்குணங்களைக் கொண்டிருந்தார்.

l அபார நினைவாற்றல் கொண்டவர். ஆங்கில எழுத்துகளை ஒரே நாளில் கற்றாராம். 1877-ல் பாக்பஜாரில் உள்ள தீனநாத்பாசு என்பவரது வீட்டில் தியானத்தில் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சரை முதன்முதலாக பார்த்தார். 1883-ல் அவரை நேரில் சந்தித்தார். பின்னர் அவரை அடிக்கடி சந்தித்து தியான முறைகளைக் கற்றார்.

l ஒரு வியாபாரியிடம் இவரை வேலைக்கு சேர்த்துவிட்டார் தந்தை. சில நாட்களே அங்கு வேலை பார்த்தார். பிறகு, அதை விட்டுவிட்டு தன்னை முழுமையாக ஆன்மிகத்தில் ஈடுபடுத்திக்கொண்டு ராமகிருஷ்ணரிடம் வந்துசேர்ந்தார். 1890-ல் சன்னியாசம் பெற்று ‘அகண்டானந்தர்’ ஆனார்.

l விவேகானந்தரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டார். மக்கள் சேவையில் இறைவனைக் கண்டார். இமயமலைக்கு பயணம் மேற்கொண்டார். திபெத் மொழியை 15 நாட்களில் கற்றார்.

l ராமகிருஷ்ணா மிஷனை விவேகானந்தர் 1897-ல் தொடங்கினார். பஞ்சத்தால் மக்கள் வாடிய காலகட்டம் அது. அவர்களுக்கு நிவாரணப் பணிகள் செய்வதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதுவே ராமகிருஷ்ணா மிஷனின் முதல் நிவாரணப் பணி. இதற்காக கல்கத்தா, சென்னையில் இருந்த நண்பர்களுக்கு கடிதம் எழுதி உதவி பெற்றார். பலரிடம் தானியங்களை தானமாகப் பெற்று, தானே சமைத்து மக்களுக்கு உணவிட்டார்.

l முர்ஷிதாபாத்தில் சண்டி மண்டபம் என்ற சேவை மையத்தை தொடங்கினார். வங்காளத்தில் நிலநடுக்கம், காலராவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சேவை செய்தார். கிராம மக்களிடம் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஆதரவற்றோர், ஏழைகள், கல்வியறிவு இல்லாத குழந்தைகளை ஓடிச் சென்று அரவணைத்தார்.

l தவம் புரிவதற்காக வடக்கே ஏகாந்த யாத்திரை மேற்கொண்டார். அப்போது, வழியெங்கும் பலர் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறப்பதைக் கண்டார். உடனடியாக யாத்திரையை நிறுத்திவிட்டு, அங்கேயே மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பித்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 2 ஆதரவற்ற இஸ்லாமிய சிறுவர்களை ஆசிரமத்தில் பராமரித்தார். இஸ்லாமிய முறைப்படி தொழுகை செய்யவும் அவர்களுக்கு கற்றுக்கொடுத்தார்.

l ஒருமுறை, பூஜைக்காக மடத்தின் தோட்டத்தில் பூக்களைப் பறித்து கொண்டிருந்தார் ஒரு பக்தர். ‘‘எல்லா பூக்களையும் பறிக்காதீர்கள். எப்போதுமே இயற்கையின் வழிபாடு நடந்துகொண்டிருக்கும். அதற் காக கொஞ்சம் பூக்களை விட்டுவையுங்கள்’’ என்றாராம் இவர்.

l ‘என் தேசம்தான் எனக்கு முக்கியம். அதன் பிறகுதான் மற்றவை எல்லாம். நான் பிறந்ததே சேவை செய்யத்தான்’ என்பார். செயல்முறை வேதாந்தத்தை போதித்தார். பகவத்கீதைக்கு ‘யதார்த்த கீதா’ என்ற பெயரில் எளிமையான விளக்கம் தந்தார். ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பல நல்ல கருத்துகளை மக்களிடம் பரப்பினார்.

l ராமகிருஷ்ணா மிஷனின் 3-வது தலைவராகப் பொறுப்பேற்றார். ஆன்மிக குருவாகவும், மக்கள் சேவையில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட மனிதநேயராகவும் விளங்கிய சுவாமி அகண்டானந்தர் 73-வது வயதில் (1937) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x