Published : 02 Oct 2015 12:29 PM
Last Updated : 02 Oct 2015 12:29 PM

சுட்டது நெட்டளவு: காட்டிலும் கெட்டப் பழக்கம்

காட்டில் ஒரு புலி சிகரெட் பிடித்துக் கொண்டு நின்றிருந்தது. அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு எலி அதைப் பார்த்து, “சகோதரா, ஏன் இவ்வாறு சிகரெட் பிடித்து உன் வாழ்க்கையை வீணாக்குகிறாய்? என்னுடன் வா, இந்த காடு எவ்வளவு அழகானது என்று காட்டுகிறேன்” என்றது.

அதை கேட்ட புலி, சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி விட்டு எலியுடன் நடந்தது. சிறிது தூரம் சென்றதும் ஒரு யானை புகையிலை போட்டுக்கொண்டிருந்ததை அந்த எலி பார்த்தது. இதைத்தொடர்ந்து யானையிடம் சென்ற எலி, “சகோதரா நீ ஏன் இப்படி புகையிலையை உபயோகித்து உன் வாழ்க்கையை சீரழிக்கிறாய்.. வா இந்த காடு எவ்வளவு சுந்தரமானது என்று காட்டுகிறேன்” என்றது. இதை கேட்ட யானை புகையிலையைத் தூக்கி எறிந்துவிட்டு எலியுடன் சென்றது.

மூன்று பேரும் நடந்து போகும் பொழுது ஓரிடத்தில் சிங்க மகாராஜா சாராயம் குடித்துக் கொண்டிருந்ததைக் கண்டனர். இதைக் கண்ட எலி சிங்கத்திடம் சென்று, “மகாராஜாவே, ஏன் இப்படி உங்களை நீங்களே அழித்துக் கொள்கிறீர்கள். இந்த காட்டின் அழகினை மகாராஜா இதுவரை கண்டதுண்டா... என்னுடன் வாருங்கள் அடியேன் அதைக் காட்டுகிறேன்” என்றது.

இதைக் கேட்ட சிங்கம் எலியின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டது. இதை கண்டு புலிக்கும் யானைக்கும் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது. இருந்தாலும் ஒருவாறு தங்களை சமாளித்துக்கொண்ட அவை சிங்கத்திடம் சென்று, “மகாராஜாவே, தாங்கள் ஏன் இந்த சமாதான தூதுவனை அடித்தீர்கள்?” என்று கேட்டன.

அதற்கு சிங்கம், “இந்த பரதேசி, கஞ்சா அடிச்சிட்டு இதைச் சொல்லித்தான் நேத்து என்னை இந்த காடு பூராவும் நடக்க வெச்சான். தினமும் இவனுக்கு இதே வேலையாப் போச்சு” என்றது.

நீதி:

சிகரெட், புகையிலை, மது ஆகியவற்றைப் போல கஞ்சாவும் ஒரு கெட்ட பழக்கம்தான். அது உடலைக் கெடுப்பதுடன் சமயத்தில் அடி உதையும் வாங்க வைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x