Published : 19 Oct 2020 10:35 AM
Last Updated : 19 Oct 2020 10:35 AM

சித்திரச்சோலை 5: உயிர்மூச்சு

சிவகுமார்

சென்னை வந்த புதிதில் எனக்கு லேசாக தொப்பை இருந்தது. பக்கத்து வீட்டில் குடியிருந்த பெர்னாட்ரோச் என்ற பெரியவர், ‘இப்படியே அலட்சியமாக இருந்தால் விரைவில் கடம் வாசிக்கும் அளவுக்கு வயிறு பெரிதாகி விடும் -யோகாசனப் பயிற்சி செய்!’ என்று அறிவுரை வழங்கினார்.

கன்னிமரா நூலகத்தில் உறுப்பினராக ரூ.3 கட்டணம். 3 அட்டை கொடுப்பார்கள். மூன்று புத்தகம் எடுத்து வரலாம். படித்து விட்டு ஒரு வாரத்தில் அவற்றை திருப்பித் தர வேண்டும்.

கல்கி, ஆனந்த விகடன் போன்ற வார இதழ்களில் அப்போது வி.என். குமாரசாமி, பெங்களூர் சுந்தரம் போன்ற யோகாசன மேதைகள் யோகக்கலை பற்றி மாதக்கணக்கில் எழுதினார்கள். அவற்றைச் சேர்த்து ‘பைண்டு’ செய்து ஒரு வாசகர் நூல் நிலையத்திற்குக் கொடுத்திருந்தார். அதை வாங்கி வந்து படித்து, அப்போது பயிற்சி செய்தேன். வி.என். குமாரசாமி 1954இல் ‘ஆரோக்ய ரகசியம்’ என்ற நூலை வெளியிட்டார். 66 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நூலை வானதிப் பதிப்பகம் திரும்ப வெளியிடும்போது எனது யோகாசனப் புகைப்படங்களை அட்டையில் பிரசுரித்து என்னை நெகிழச் செய்து விட்டது.

புதுப்பேட்டை வீட்டில் 20 பேருக்கு 2 டாய்லெட். ஆகவே அதிகாலை 4.30-க்கு எழுந்து நான்தான் முதலில் கழிப்பறையைப் பயன்படுத்துவேன். விடிவதற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் உள்ளது. அந்த நேரத்தை வீணாக்க வேண்டாமென்று யோகாசனங்கள் கற்றுக் கொண்டேன்.

காலைக் கடனை முடித்து, பல்துலக்கி, ஒரு டம்ளர் நீர் குடித்து விட்டு, மாடி சென்று தரையில் ஜமுக்காளம் விரித்து அதன் மேல் அமர்ந்து யோகாசனம் செய்வேன்.

மாஸ்டர் நேரில் இருந்தால் எப்படி சொல்லித்தருவாரோ அப்படி புத்தகத்தில் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும். பிராணாயாமம், பத்மாசனம், யோக முத்ரா, சர்வாங்காசனம், ஹலாசனம், புஜங்காசனம், வஜ்ராசனம், மத்ஸாசனம், தனுராசனம், சிரசாசனம் - என 38 ஆசனங்கள் ஒரு மணி நேரம் செய்தேன். 6 மாதங்களில் ஒட்டியாணா -நவுளியும் கைவரப் பெற்றது. ஆசன வாயில் மலம் வெளியேறி பெருங்குடல், கீழ்ப்பகுதி காலியாகி விடும். அப்போது ‘இங்க்’ பில்லரில் காற்றை வெளியேற்றி இங்கை உறிஞ்சுவது போல ஆசனவாயில் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடும் பயிற்சி செய்ய முடிந்தது. அதற்கு ‘பஸ்தி’ என்று பெயர் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்.

உடல் ஆரோக்கியத்துக்கு யோகாசனப் பயிற்சி மட்டும் போதாது. தினம் 8 டம்ளர் தண்ணீர் - ஏ.சி அறையில் இருந்தாலும் குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் அதிகாலை வேலை பார்க்கச் செல்லக்கூடாது. பழைய சாதம் ஒரு பிடி 2 டம்ளர் மோர், சின்ன வெங்காயம் 5-6 சாப்பிட்டு விட்டு வெளியே போகலாம். வேளைக்குச் சாப்பிட வேண்டும். பிற்பகல் 1-லிருந்து 2- மணி வரை, இரவு 7 முதல் 8 மணி என்று நம் வசதிப்படி நேரம் முடிவு செய்து அந்த நேரத்திற்குச் சாப்பிட வேண்டும். இரவு கட்டாயம் 7 மணி நேரம் உறங்க வேண்டும்.

உடல் கட்டுப்பாடு, மனக்கட்டுப்பாடு இருந்ததால்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள அக்னி வீரபத்ரர் -அகோர வீரபத்ரர் சிலைகள் உள்ள மண்டபத்தை என் 21 வயதில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 10 மணிநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வரைய முடிந்தது.

உடலும், மனமும் ஆரோக்கியமாக இருந்ததால்தான் டிசம்பர் குளிரில் ஊட்டி, தொட்டபெட்டா சிகரத்தின் உச்சியில் நடுங்கும் குளிரில் 4 முழ வேட்டி கட்டிக் கொண்டு, மேலே அரைக்கை சட்டை போட்டுக் கொண்டு இரவு 12 மணிக்கு மேல் உடம்பு விறைத்துப் போகாமல், நடுங்காமல், ‘இனி ஒரு சுதந்திரம்’ படத்தில் என்னால் நடிக்க முடிந்தது.

சிரசாசனம், சர்வாங்காசனம் போன்ற பயிற்சி வழி மூளைக்கு ரத்தம் சிரமமின்றி பாய்ந்த காரணத்தால் நினைவாற்றல் அதிசயக்கும்படி இருந்தது. 67 வயதில் ஒரே ஆண்டில் 100 கம்பன் பாடல்களை மனப்பாடம் செய்வதுடன், மொத்த ராமாயணக்கதையையும் எழுதி 2 மணி 20 நிமிடத்தில் 10 ஆயிரம் மாணவிகள், வி.ஐ.பி.,க்கள் முன்னால் ஒரு சொட்டு நீர் அருந்தாமல், குறிப்பு ஏதும் வைத்துக் கொள்ளாமல் ஒரே மூச்சில் பேசி முடிக்க உதவியது -யோகாசனப்பயிற்சியும், உடல் மனக்கட்டுப்பாடும்தான்.

இவ்வளவு ஏன், அறிவிக்கப்படாத மூன்றாவது உலக யுத்தம் கரோனாவால் மறைமுகமாக இப்போது நடந்து கொண்டிருக்கிறது. பணக்கார நாடு, ஏழை நாடு என்பதேயில்லாமல், எல்லா நாடுகளிலும் கரோனா தாக்கம் நீக்கமற நிறைந்திருக்கிறது. எப்போது முடிவுக்கு வரும், இதற்கான மருந்தை எந்த நாடு கண்டுபிடிக்கும் என்று தெரியாமல் நடுக்கடலில், விபத்து நடந்த கப்பலிலிருந்து கடலில் குதித்த நிலையில் உலக மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

கரோனா மனிதனைத் தாக்கும் இடம் நுரையீரல். நுரையீரல் வலுவாக ஆரோக்கியமாக உள்ளவனிடம் கரோனா அண்டாது. புகைப்பழக்கம், மதுப் பழக்கம் உள்ளவர்கள், வயோதிகம் காரணமாக நுரையீரல் செயல்பாடு குறைவாக உள்ளவர்களுக்குத்தான் கரோனா எதிரி. மனிதன் உயிர் வாழ உணவு வேண்டும். அதற்கு முன்னதாக குடிக்கத் தண்ணீர் வேண்டும். இந்த இரண்டையும் விட முக்கியமானது காற்று. அதாவது பிராண வாயு -உயிர் மூச்சு.

உணவு உட்கொள்ளாமல் காந்தி 20 நாட்களெல்லாம் உண்ணாவிரதம் இருந்துள்ளார். தண்ணீர் குடிக்காமல் 2 நாட்களைத் தாண்டுவது சிரமம். சராசரி மனிதன் சுவாசிக்காமல் 2 நிமிடம் இருக்க முடியாது. ஆக, பிராணவாயுவை முறையாக உடலுக்குள் செலுத்துவதைத்தான் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே -மொகஞ்சோதாரோ-ஹரப்பா நாகரிகம் என்று சொல்லும் 4500 ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய மண்ணில் பிராணயாமம் என்ற பெயரில் யோகிகள் செய்து வந்திருக்கிறார்கள்.

உடலில் ஓடிக் கொண்டிருக்கும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் வேலையைத்தான் பிராணவாயு செய்கிறது. இதில் தலைமைச் செயலகமான மூளைக்குத்தான் அதிகமான பிராணவாயு அவசியம் தேவை. சில விநாடி பிராண வாயு மூளைக்குச் செல்லவில்லை என்றால் உடல் இயக்கம் உடனே பாதிக்கப்படும். வாய் கோணிக் கொள்ளும், கைகால் செயல்பாட்டில் வித்தியாசம் தெரியும், லேசான மயக்கம் கூட வரும்.

நுரையீரலில் சுத்திகரிக்கப்பட்ட பிராணவாயு முதலில் மூளைக்குத்தான் அதிகம் தேவை -இதை சீராக உள்வாங்கி வெளியே விடும் பயிற்சியை 2: 8: 4 என்ற அளவில் யோகிகள் செய்திருக்கிறார்கள். அதாவது வலது நாசித்துவாரத்தை கட்டை விரலால் அடைத்துக் கொண்டு இடது நாசி வழியாக 2 விநாடி காற்றை முழுசாக உள்ளே இழுக்க வேண்டும். பின் 8 விநாடி அந்தக் காற்றை உள்ளே வைத்திருந்து, வலது நாசியை திறந்து, இடது நாசித்துவாரத்தை அடைத்துக் கொண்டு 4 விநாடி முழுமையாக வெளியேற்ற வேண்டும்.

இப்போது வலது நாசி வழியாக 2 விநாடி முழுமையாக காற்றை உள்ளே இழுத்து 8 விநாடி நிறுத்தி வலது நாசித்துவாரத்தை மூடிக் கொண்டு - இடது நாசி வழியாக 4 விநாடி முழுமையாக வெளியேற்ற வேண்டும். உள்ளே சுவாசித்த பிராணவாயு நுரையீரலுக்குப் போய், ஆக்ஸிஜனை உடம்பு முழுக்க அனுப்பி விட்டு, கார்பன்டை ஆக்ஸைடை (கரியமில வாயு) சேகரித்து வெளியே கொண்டு வர அந்த 8 விநாடி பயன்படுகிறது. இதே பயிற்சியை 20 நிமிடம் நாம் செய்தால் ஒரு நாளைக்கு நம் உடம்புக்கு வேண்டிய ஆக்சிஜன் உள்ளே சென்றதாக அர்த்தம். மீதிநேரம் சராசரியாக சுவாசித்தால் போதுமானது.

இது செய்ய சிரமப்படுபவர்கள், மூக்கு துவாரங்களை விரல்கள் வைத்து அடைக்காமல் நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்து மூச்சுக்காற்றை -நுரையீரல் முழுக்க நிரம்பும் அளவுக்கு உள்ளே இழுத்து - 8 விநாடி நிறுத்தி மெதுவாக இரண்டு நாசித்துவாரத்திலும் காற்றை வெளியேற்றலாம். இரண்டு விநாடி ஓய்வெடுத்து விட்டு மீண்டும் இரண்டு நாசித்துவாரம் வழி மூச்சுக் காற்றை உள்ளவாங்கி -நுரையீரலை நிரப்பி - 8 விநாடி வைத்திருந்து முழுசாக வெளியேற்ற வேண்டும். இந்தப் பயிற்சியை இளைய வயதினர், நடுத்தர வயதினர், முதியோர் -ஆண், பெண் இருபாலரும் செய்தால் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

நுரையீரல் ஆரோக்யமாக உள்ளவர்கள் கரோனாவை நினைத்து பயப்படத் தேவையில்லை. முகக்கவசம் போடுவது, கூட்டத்தில் பாதுகாப்பே தவிர, நோய் எதிர்ப்பு சக்திக்கு கபசுரக் குடிநீரோ -ஆங்கில மாத்திரைகள் ஜிங்கோவிட் செரின் 500 போடுவதோ -எடுத்துக் கொண்டாலும் மூச்சுப் பயிற்சி இன்னொரு கோணத்தில் நேரடியாக நம் ஆரோக்கியத்தை கூட்டவல்லது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கூட்டத்தில் மக்களைச் சந்திக்கும் போது, மூக்கு வாய்ப்பகுதியை மறைத்து ‘மாஸ்க்’ அணிய வேண்டும். தனியாக வீட்டில் இருக்கும்போது ‘மாஸ்க்’ அணியக்கூடாது. வாக்கிங் போகும்போது - 6 அடி இடைவெளி விட்டு நண்பர்களுடன் வாக்கிங் செய்யலாம். வாக்கிங் செல்லும்போது மூக்கை மூடக்கூடாது. உடலுக்குள் சுத்தமான ஆக்சிஜன் செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் ‘வாக்கிங்’ செல்கிறோம். அங்கும் ‘மாஸ்க்’ முழுசாக போட்டால், அந்த 45 நிமிடமும் நீங்கள் விட்ட கரியமில வாயு, ‘மாஸ்க்’கில் தங்கி மீண்டும் உடலுக்குள் செல்லும். அது ஆபத்தானது. ஆகவே நடைப் பயிற்சியின் போது ‘மாஸ்க்’ மூக்கை மறைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கண்ணால் பார்த்து, காதால் கேட்டு, வாயால் சாப்பிட்டு -பேசி, கையால் வேலை செய்து, காலால் நடந்து எத்தனை காலம் இயற்கையாய் இயல்பாய் வாழ்கிறோமோ அதுதான் ஆரோக்கியமான வாழ்க்கை. அர்த்தமுள்ள வாழ்க்கையும் அதுதான். அந்த அற்புத வாழ்க்கையை யோகாசனப் பயிற்சியும், தியானமும் நமக்குத் தரும்.

பொதுவாக நல்ல மனிதன் என்பவன் எல்லோரிடமும் அன்பு செலுத்துபவனாக, அனைவரையும் சமமாக மதிப்பவனாக, உண்மையிலேயே வறுமையில் இருப்போர், வயோதிகர்களுக்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்வான். அப்படி வாழ முடிந்தால் அவன் பக்திமானாக இருந்தாலும் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும் அவனை நாம் வணங்கி வரவேற்கலாம்.

தரிசிப்போம்...

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x