Published : 25 Sep 2020 11:31 AM
Last Updated : 25 Sep 2020 11:31 AM

கொங்கு தேன் 28: பக்கத்தூரு ‘எடிசன்’

சிவகுமார்

நம்மள்ள அநியாயத்துக்கு உண்மை பேசறவனை, ‘ஆமா இவன் பெரிய ஹரிச்சந்திரன் பரம்பரை!’ன்னோ, ‘ஆமா, இவன் அரிச்சந்திரனூட்டுக்கு பக்கத்து ஊடு!’ம்பாங்க. அது மாதிரி மூளைய கசக்கி புதுசா ஏதாச்சும் நம்ம செஞ்சா, ‘அட, இவனுக்கு ஜி.டி.நாயுடு மூளை’-ங்கிறதும், ‘ஆமா, இவன் ஜி.டி.நாயுடு ஊட்டுக்கு பக்கத்து ஊடு. கண்டு பிடிச்சுட்டான் பெரிசா!’-ங்கிறதும் எங்க கோயமுத்தூர் பக்கம் அந்தக்காலத்தில ரொம்ப சகஜம்.

உண்மையிலேயே ‘இந்தியாவின் தாமஸ் ஆல்வா எடிசன்’னு புகழப்பட்ட ஜி.டி.நாயுடு எங்க பக்கத்தூரான கலங்கல் கிராமத்தை சேர்ந்தவரு. ஒரு கல்யாணம் காட்சி, திருவிழான்னா அங்கே ‘மைக் செட்’ வச்சா எங்க ஊருக்கு துல்லியமா கேட்கும். அதே மாதிரி எங்க ஊர்ல மைக் செட் வச்சாலும் அங்கே கேட்கும். அப்படி கூப்பிடு தூரம்தான் கலங்கல். மிஞ்சி, மிஞ்சிப்போனா ஒரு கி.மீ தூரம்.

கலங்கல் பிரைவேட் பள்ளிக்கூடத்தில 4-ங்கிளாஸ் வரைக்கும் நான் படிச்சேன்.

அப்ப எல்லாம் தீப்பெட்டி மூடிய ஒரு பக்கம் பேப்பர் ஒட்டி அடைச்சிட்டு, மூடிய ஓட்டை போட்டு கத்தாழை மஞ்சி நூல் அதுல கோர்த்து, 1000 அடி நீளத்துக்கு விட்டு மறுகோடில அதே மாதிரி ஒரு பக்கம் அடைச்ச தீப்பெட்டி மூடில இந்த 1000 அடி நீள மஞ்சியோட அடுத்த முனையை கோத்து கட்டி மூடி வழியா டெலிபோன்ல பேசற மாதிரி பேசுவாங்க. இந்தப் பக்கம் மூடிக்குள்ள பேசறது அந்தப் பக்கம் கேட்கும். அந்தப்பக்கம் பேசறது இந்தப் பக்கமும் கேட்கும். இது சின்னப்பசங்க விளையாட்டு மட்டுமல்ல, டெலிபோன் கண்டுபிடிக்கறதுக்கு ஆதார சுருதியே இதுதான். இதெல்லாம் நம்மூரு ஜி.டி.நாயுடுதான் மொத, மொதலா பண்ணினாருன்னு அப்பவே கலங்கல்ல சொல்லுவாங்க.

நான் பிறக்கறதுக்கு முன்னே கம்மா நாயுடுகள் அதிகம் பேர் வாழ்ந்த கிராமம் கலங்கல். அங்கே 1893-ல் பிறந்தவர்தான் படிக்காத விஞ்ஞானி, அதிசய மனிதர், எக்ஸெண்ட்ரிக் இண்டஸ்ட்ரியலிஸ்ட் ஜி.டி. நாயுடு. கலங்கல்காரங்ககிட்ட தீப்பெட்டி, மஞ்சிக்கயிறு மாதிரி ஜி.டி.நாயுடு பற்றி நிறைய கதைகள் உண்டு. அது உண்மைன்னும் பின்னால தெரிஞ்சுகிட்டேன்.

வெள்ளைக்கார தொரை ஒருத்தர் மோட்டார் சைக்கிள்ள கலங்கல் வந்தாராம். மாடு, குதிரை எதுவும் பூட்டாம, இந்த பைக் எப்படி ஆளை தூக்கீட்டுப் போகுதுன்னு அந்த பைக்கையே அதிசயமா பாத்திட்டிருந்தாராம் நாயுடு. கொஞ்ச நாள்ளே அந்த பைக்கையே விலைக்கு வாங்கி அக்குவேறு ஆணி வேறா பிரிச்சுப் போட்டுட்டு, கஷ்டப்பட்டு பழையபடி ‘அசெம்பிள்’ பண்ணி ஓட்டினாராம்.

ஜி.டி. நாயுடுவோட முழுப்பெயர் ஜி. துரைசாமி நாயுடு. இவர் பொறந்து கொஞ்ச நாள்ளயே அம்மா இறந்திட்டாங்க. கலங்கலுக்கு பக்கத்தில இருக்கிற லட்சுமி நாயக்கன் பாளையத்துக்கு தாய்மாமன் கூட்டிட்டுப் போய் வளர்த்தாரு. சின்னப்பையனா இருந்தப்பவே குறும்பு அதிகம் பண்ணுவாரு. திண்ணைப் பள்ளிக்கூடத்தில அவரை சேர்த்து விட்டிருக்காங்க. தெருவிலிருந்து கை நிறைய மண்ணை அள்ளி வாத்தியார் மூஞ்சியில வீசி கண்ணை தொறக்க முடியாம பண்ணீட்டு ஓடியாந்திட்டாரு.

பழையபடி கலங்கலுக்கே கொண்டு வந்து விட்டுட்டாரு தாய் மாமன். தோட்டத்தில பகல் பூராவும் வேலை செய்வாரு. ராத்திரி நேரம் தானா புத்தகங்கள் வாங்கி படிக்க ஆரம்பிச்சிட்டாரு.

போகர் ஆயிரம் -தொல்காப்பிய விருத்தி -ஜோதிடம் -சமயம் -சித்த வைத்தியம்னு எல்லாம் சுவடிகளை வரவழைச்சு படிச்சு பண்டிதராவே ஆயிட்டாரு.

18 வயசிருக்கறப்போ காட்டில வேலை செய்யும்போது ஒரு காலி பாட்டில் கிடைச்சிருக்கு. அது மேல என்ன எழுதியிருக்குன்னு ரெவின்யூ இன்ஸ்பெக்டர்கிட்ட கேட்க -‘பார்க் டேவிஸ்’ -வலி நிவாரணி அதுன்னு தெரிஞ்சுகிட்டாரு.

உடனே அமெரிக்காவுக்கு கடிதம் எழுதி இறக்குமதி செஞ்சு அந்த மருந்தை குறைஞ்ச லாபத்துக்கு மக்களுக்கு வித்தாரு. ஒரு வருஷத்தில 800 ரூபாய் லாபம் கிடைச்சது.

அந்தக் காலத்தில காடு கரையில வேலை பார்க்கற கூலியாளுக்கு கூலி ஆணுக்கு மூணறை ரூபாய் பெண்ணுக்கு இரண்டரை ரூபாய் குடுத்திட்டிருந்தாங்க. அது ரொம்ப கம்மி, கூலிய கூட்டிக் குடுக்கணும்னு அத்தனை பேரையும் சேர்த்து போராட்டம் நடத்தினாரு நாயுடு. முதலாளிங்க எறங்கி வர்ற வரைக்கும் தங்கிட்ட இருந்த 800 ரூபாயை, வீட்டுச் செலவுக்காக எல்லா ஜனங்களுக்கும் பிரிச்சுக் குடுத்திட்டாரு.

செல்லம்மா- அரங்கநாயகின்னு அவருக்கு ரெண்டு சம்சாரம். கிருஷ்ணம்மாள், சரோஜினின்னு பெரியவங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. அரங்கநாயகிக்கு ஒரே மகன் கோபால்.

1932-ல் 5 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தை கோயமுத்தூர்ல 25 ஆயிரம் ரூபாய்க்கு நாயுடு வாங்கினாரு. அதுதான் இப்ப கோயமுத்தூர் சிட்டி நடுவுல அவிநாசி ரோட்ல இருக்கிற கோபால்பாக். இப்ப கோபால் குடும்பத்தார் அதில் வசிக்கிறாங்க.

G D கோபால் தம்பதியுடன் நானும் என் மனைவியும்..

சின்னப்பையனா இருக்கும்போது நடந்தே கலங்கல்லருந்து கோயமுத்தூரு போயிருக்காரு நாயுடு. போகிற வழியெல்லாம் இருந்த பாக்டரிகள், ரயில்வே ஸ்டேஷன் எல்லாம் பார்த்து நமக்கு தெரியாம இப்படி ஒரு உலகம் இருக்கான்னு ஆச்சர்யப்பட்டாராம். அப்பவும் அவர் கனவுல, நனவுல இருந்தது லங்காஷையர்’ மோட்டார் சைக்கிள்தான்.

அதை எப்படியும் வாங்கணும்ன்னு தீவிரம். ஒரு ஹோட்டல்ல மாசச்சம்பளம் 3 ரூபாய்க்கு சர்வரா வேலைக்கு சேர்ந்திருக்கார். 3 வருஷங்கள்ள 400 ரூபாய் சேர்த்து மோட்டார் சைக்கிள் வச்சிருந்த ‘லங்காஷையர்’ங்கிற முதலாளியை தேடி போயிருக்காரு.

அவரு நாயுடு ஆர்வத்தை பார்த்து ரூபாய் 400 ஐ மட்டும் வாங்கிட்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை இவருக்கு குடுத்திருக்காரு.

வீட்டுக்கு ஓட்டியாந்த வேகத்தில அந்த பைக்கை அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சுப் போட்டு, எப்படியோ திரும்பவும் ‘அசம்பிள்’ பண்ணிட்டாராம்.

அதோட ‘சைடு பாக்ஸ்’ ஒண்ணு தயார் பண்ணி பைக்கில மாட்டி நண்பர்களை அதில உட்கார வச்சு ஒரு ரவுண்டு வருவாராம்.

அப்புறம் ஒண்டிப்புதூர் ஜின்னிங் பாக்ட்ரில கொஞ்சநாள் வேலை பார்த்திருக்கார். சுயமா சிங்காநல்லூர்ல ஒரு தொழிற்சாலை ஆரம்பிச்சிருக்கார்.

முதல் உலக யுத்த காலம் 1914-1918. அது முடிஞ்ச சமயம். 1919-ல் ஒரு வருஷத்தில் ரூபாய் 1.5 லட்சம் சம்பாதிப்பது நினைச்சே பாக்க முடியாது. அந்த பணத்தை எடுத்திட்டு காட்டன் வியாபாரம் பண்ண பம்பாய் போனாரு. துரதிருஷ்வசமா அந்த ரூ.1.5 லட்சத்தையும் விட்டுட்டு வெறுங்கையோடு கோயமுத்தூர் திரும்பியிருக்காரு.

பணம் போச்சேன்னு பெரிசா கவலைப்படலே. அதுக்கு பெரிய மரியாதையும் கொடுக்கலே.

1920-ல வெறுங்கையோடு பம்பாயிலிருந்து ரூபாய் ஒன்றரை லட்சத்தை விட்டுட்டு வந்தவர் மோட்டார் கார் விற்பனை செஞ்ச சர் -ராபர்ட் ஸ்டேன்ஸ்கிட்ட ஃபிட்டரா வேலைக்கு சேர்ந்தாரு. பழகின பழக்கத்தில, இவர்கிட்ட இருக்கிற ஆர்வத்தைப் பார்த்து ‘சுயமா ஒரு பஸ் வாங்கி ஓட்டுப்பா’ன்னாரு ஸ்டேன்ஸ்.

நண்பர்கள்கிட்ட கொஞ்சம் கடன் வாங்கி -ஸ்டேன்ஸ் உதவியோட சொந்தமா ஒரு பஸ் வாங்கி பொள்ளாச்சி- பழனி ரூட்ல ஓட்டினாரு. அந்த பஸ்ஸூக்கு டிரைவர்- கண்டக்டர்-மெக்கானிக் -கிளீனர்-ஹெல்பர்-முதலாளி எல்லாமே இவர் மட்டும்தான்.

அப்புறம் 1922-ல் 2 பஸ் வாங்கினாரு. 1924-ல் அது23 பஸ்கள் ஆயிருச்சு. 1933-ல் UMS-ங்கற பேர்ல ஆலம் விருட்சமா விரிந்து 280 பஸ்கள் ஆயிருச்சு. 40 வயசில 1923-ல் முத முதலா வெளிநாடு போறாரு நாயுடு.

ஜெர்மனி, லண்டன், அமெரிக்காவெல்லாம் போய் -மொழி தெரியாத அவஸ்தையோட சிரமப்பட்டு நிறைய தொழிற்சாலைகளை சுத்திப் பார்த்திருக்காரு.

ஜி.டி. நாயுடு எடுத்த புகைப்படத்தில் ஹிட்லர் ஆட்டோகிராஃப்

அரிய விஷயங்களை கத்துகிட்டு வந்து, அதையெல்லாம் தமிழ்நாட்டில் செஞ்சு பார்த்திருக்காரு. ‘ரேஸண்ட் ரேஸர்’னு உலகத்தின் முதல் எலக்ட்ரிக் ரேசர் கண்டுபிடிச்சாரு. ‘டிஸ்டண்ட் அட்ஜஸர்’, வாக்குப்பதிவு எந்திரம், ‘வைப்ரோ’ டெஸ்டிங் மெஷின், கால்குலேட்டிவ் மெஷின், லென்ஸ், ரிப்ரிஜரேட்டர், ரிக்கார்டிங் மெஷின், ரேடியோ கிளாக், காபி மெஷின், ஜூக் பாக்ஸ் (காசு போட்டால் பாடும்), பழரசம் பிழியும் மெஷின் -இப்படி 10 வருஷ இடைவெளியில 100-க்கும் மேற்பட்ட மெஷின்களை கண்டு பிடிச்சிருக்காரு.

அரசாங்கம் பஸ் விட்ட பின்னாலதான் இப்ப இருக்கிற பஸ் நிலையங்கள் எல்லாம் உருவாச்சு. அதுக்கு முன்னாடி வரைக்கும் கோயமுத்தூர், உடுமலை, பழநி, பொள்ளாச்சின்னு இவர் கம்பெனி பஸ்ஸூக நிறுத்தற இடமெல்லாம்தான் ஜனங்களுக்கு பஸ் ஸ்டேண்டா இருந்திச்சி.

அச்சடிச்ச டிக்கெட்டுகள் கம்ப்யூட்டர் மிஷின் (கால்குலேட்டர் மாதிரி மிஷின்ல) டிக்கெட்டுகளா அரசாங்க பஸ்கள்ளயே இப்பத்தான் மாத்தியிருக்காங்க. ஆனா, ஜி..டி.நாயுடு பஸ்கள்ல 60 வருஷத்துக்கு முன்னாடியே குட்டி அலுமினிய மெஷின்ல, ‘கிரிச், கிரிச்..!’ சத்தத்தோட கண்டக்டர் டிக்கெட் தருவாரு.

அதுல டிக்கெட் ரேட், புறப்படற, போய்ச்சேர்ற இடம் எல்லாம் கம்ப்யூட்டர் எழுத்து மாதிரியே தெளிவா இருக்கும். கம்ப்யூட்டர் மாதிரி அந்த குட்டி அலுமனியப் பெட்டிய எப்படி திறக்கறது, உள்ளே என்ன இருக்குன்னு கண்டக்டர்களாலேயே கண்டு பிடிக்க முடியாது.

அதுக்குப் பேரு டைமிங் மெஷின் -டிக்கெட்டில் மெஷின் வச்சு தவறுகளை நாயுடு துல்லியமா கண்டுபிடிப்பார்ன்னு சொல்வாங்க.

1939-ல இவர் ஆரம்பிச்ச எலக்ட்ரிக் மோட்டார் கம்பெனி, இந்தியாவிலேயே முதல் தொழிற்சாலையா பேசப்பட்டது.

ஜி.டி நாயுடு-விஸ்வேஸ்வரய்யா

1939-ல் தன்னோட 47 வயசில 3 தடவை வெளிநாடு போய் - கார்ட்டர், கார்புரேட்டர் கம்பெனில மாணவனா சேர்ந்து படிச்சாரு.

1945-ல் ஆர்தர் ஹோப் எஞ்சினியரிங் கல்லூரி துவக்கி - அரசாங்கமே அதைநடத்தட்டும்ன்னு குடுத்திட்டாரு. ரேடியோ, ரேடியேட்டர், கார்பானிக் பொருள்கள் தயாரிப்புன்னு 1960 வரைக்கும் 70 தொழில்களை துவக்கி நடத்தியிருக்காரு.

இயந்திரங்களை இப்படி கணக்கு வழக்கில்லாம கண்டுபிடிச்சு உற்பத்தி பண்ணினவரு, விவசாயம், சித்தா, ஆயுர்வேத வைத்திய துறையையும் ஒரு கை பார்த்திருக்காரு.

ஊசி வழியா ஹார்மோன் மருந்து செலுத்தி விதையில்லா பப்பாளி, ஆரஞ்ச் கண்டுபிடிச்சாரு. 5 அடி வளர்ற சோளப்பயிறு, 19 அடி உயரம் வளர்ந்திச்சு. அதில் 32 சோளக்கதிர்கள் விளைஞ்சது அதில். துவரச் செடியை மரமா வளர்த்து காட்டினாரு. கிலோ கணக்கில் துவரை கிடைச்சது. பருத்தி செடியும் அசாத்தியமா வளர்ந்து நிறைய பஞ்சு குடுத்திச்சு.

இந்தியாவின் பழமையான ஆயுர்வேதிக் -சித்தா -யுனானி சிகிச்சையில் நம்பிக்கை வச்சு போத்தனூர்ல பெரிய விவசாயப் பண்ணை ஆரம்பிச்சாரு. பரிசோதனைகள் செஞ்சாரு. கோபால் பாக்ல டாக்டர் பி.பி.நாயுடுவை கூட்டு சேர்த்து ஓலைச்சுவடியில சொல்லப்பட்டிருந்த முறைகளில் ஆராய்ச்சி பண்ணி -சர்க்கரை வியாதி -வெள்ளைப்படுதல்- மூலம் இவைகளுக்கு நாட்டு மருந்து தயாரிச்சு குடுத்தாரு.

வாரியாருடன் ஜி.டி.நாயுடு

என்னுடைய உழைப்பின் மூலம் சம்பாதிச்ச பணத்துக்கு அரசாங்கத்துக்கு நான் எதுக்கு வரி கொடுக்கணும்னு வரிகொடா போராட்டம் நடத்தினாரு. ஓல்ட்ஸ் மொபைல் காரை - வரி குடுக்க மாட்டேன்னு சொல்லி எல்லார் முன்னாடியும் சுத்தியலால அடிச்சு ஒடைச்சாரு.

அதே சமயத்தில நாட்டின் மீது அளவற்ற பக்தி வச்சிருந்தாரு. நான் இந்தியன்னு சொல்லிக்க பெருமைப்படுவாரு.

ராஜாஜியுடன் ஜி.டி.நாயுடு

1915-ல தீவிர காங்கிரஸ் ஆதரவாளரா இருந்திருக்கார். வெள்ளையரை எதிர்த்துப் போராட கட்சி மாநாட்டு பயன்பாட்டுக்கு பஸ்ஸெல்லாம் குடுத்தாரு. 1934-ல் காந்தி மீது கொண்ட பக்தியால் போத்தனூரில் தன்னோட வீட்டில் காந்தியை தங்க வச்சிருக்கார். பின்னால காங்கிரஸ் செயல்பாடுகள் பிடிக்காம காங்கிரசுக்கு எதிரா பிரச்சாரம் பண்ணி தேர்தல்லயும் போட்டியிட்டாரு.

இந்தியாவின் முன்னேற்றம் தொழில்ரீதியா இருக்கணும்ன்னு சொன்னாரு. சமுதாயத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கத்தான் தெய்வம்-மதம் எல்லாம் பெரியவங்க உருவாக்கினாங்கன்னு சொல்லுவாரு. கடவுள் இல்லைன்னு ஆரம்பத்தில் சொன்னவர் கடைசியில் கடவுள் உண்டுங்கிற நம்பிக்கைக்குள் வந்திட்டாரு. அடிப்படையில் தெய்வ நம்பிக்கை, வழிபாடுகளிலிருந்து விலகியே இருந்தார். ஆனால் அவர் இறந்தது ஏகாதசி தினத்தில்.

பெரியாருடன் ஜி.டி.நாயுடு

பெண்கள் மனோ தைரியத்துடன், முன்னேற்ற கருத்துக்களுடன் இருப்பதை வரவேற்றார்.

சிறுவயதில் அளவு கடந்த கோபம், பிடிவாதம் இருந்தது. ஆனாலும் விளக்க முடியாத ஒரு சக்தி அவர்கிட்ட இருந்திருக்கு. அவர் மகன் கோபால் தன் அப்பாவை பற்றி எங்கிட்ட நிறைய பகிர்ந்திருக்கார்.

சிறுவயதில் -இப்படி ஒரு மேதையாக உருவாவார் என்ற அறிகுறிகள் பெரிதாக இருந்ததில்லையாம். எல்லா ஜீனியஸ்களையும் போலவே குடும்பத்தோடு ஒட்டுபவராக இவராலும் இருக்க முடியவில்லை. அன்பு, பாசம் மனதுக்குள்தான். வெளிப்படுத்தவில்லை.

எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவருக்கு எப்படியோ புகைப்பிடிக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு நாளைக்கு 50, 60 சிகரெட்டுகள் பிடித்தார். கண்பொறை (காடரேக்ட்) ஆபரேசன் செய்யும் வேளையில் ஒரே நாளில் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டார்.

காமராஜருடன் ஜி.டி.நாயுடு

மாணவர் சமுதாயத்தின் எதிர்காலம் பற்றி கவலைப்பட்டு -பயிற்சி கூடங்கள் ஹாஸ்டல்கள் துவக்கி 10-ஆம் வகுப்பில் பெயிலானவர்களை கூட பாலிடெக்னிக்கில் சேர்த்துக் கொண்டார். சுத்தம் ரொம்பவும் முக்கியம். ஒழுக்கம், சுத்தம், படிப்பு ரொம்பவும் எதிர்பார்ப்பார். தவறினால் கடுமையான தண்டனை கொடுப்பார்.

யாரையும் கேவலமா பேச மாட்டார். நடத்த மாட்டார். 1956-ல் பஸ் கம்பெனியை விற்ற பிறகு 4 ஆட்களை தமிழ்நாடு, கேரளா முழுக்க அனுப்பி தனக்கு முன்பு வேலை பார்த்த டிரைவர், கண்டக்டர்களை தேடி அவங்க கடன்களை உடனே தீர்த்து வைத்தார்.

ஆர்த்தர் ஹோப் பெயரில் ஆரம்பித்த பாலிடெக்னிக்கில் ஜி.டி.நாயுடு

ஜி.டி.நாயுடு மூளையை பெரிய தொகைக்கு இன்ஸ்யூர் செய்யலாம், அதை ஆராய்ச்சி செஞ்சு ஆற்றல் தெரிஞ்சுக்கலாம்; அந்த மூளை அணுக்கள் சாகாம வச்சிருந்து பிற்காலத்தில வேறொருத்தருக்கு பொருத்தி, அவரை வச்சு இன்னும் புதுப்புது கண்டுபிடிப்புகள் தரலாம்ன்னு அவர் இறந்தப்ப பாமர மக்கள்கிட்ட பேச்சு இருந்தது இன்னொரு அதிசயம்.

‘ஆடம்பரமாக வாழாதே; உன் சக்திக்கு முடிந்ததை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்; ஏற்றதாழ்வுகள் இல்லாத சத்திய வாழ்க்கை வாழுங்கள் என்று மற்றவர்களுக்கு போதித்து அப்படியே வாழ்ந்து காட்டிய மேதை ஜி.டி.நாயுடு.

2017 ஜனவரியில் கோவை நகரில் எனது ஓவியக்கண்காட்சி நான்கு நாட்கள் நடைபெற்றது. அதற்கு இலவசமாக ஜி.டி. நாயுடு ஆடிட்டோரியத்தை வழங்கி நெகிழச் செய்து விட்டார் நாயுடுவின் மகன் திரு.கோபால். ஒரு மாமேதை,

மாபெரும் விஞ்ஞானியின் மகனுக்கும் எப்படியான கலையுள்ளம்.. கொடையுள்ளம்..

சுவைப்போம்..

தொடர்புக்கு: velayuthan.kasu@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x