Published : 15 Jul 2020 06:49 PM
Last Updated : 15 Jul 2020 06:49 PM

மௌ(மோ)ன குருக்களும் மயக்கவியல் மருத்துவர்களும்!

பிரதிநிதித்துவப் படம்.

மொட்டைமாடியில் நின்று, வானத்தைப் பார்க்கையில் , கரோனா தடையுத்தரவின்போது - இவ்வளவு பேர் பட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்களே? என்ற ஆச்சரியம் ஏற்பட்டது. பலவிதப் பட்டங்கள் ‘டீல்’விட்டு விளையாடிக்கொண்டிருந்தன. வெளியே எங்கும் செல்லாமல், தனித்திரு , புசித்திரு , பட்டமிட்டு மகிழ்ந்திரு என்ற சென்னைவாசிகளின் மனநிலை நம்பிக்கையளித்தது!

வானில் பறந்த பட்டம் ஒன்று , நூலறுந்த நிலையில் , காற்றின் வேகத்தில் பறந்து , குட்டிக்கரணமடித்து, பின்னர் மெதுவாக தள்ளாடித் தன் வாழ்க்கையை இழக்கத் தயாராகிக் கொண்டிருந்த தருணம், எங்கிருந்தோ ஓடிவந்த சிறுவன், அறுந்த நூலைப் பற்றி - பட்டத்திற்கு உயிர் கொடுத்தான். இதே நிலையில்தான் இந்த கரோனா காலங்களில் பல ஆயிரம் உயிர்களைக் காப்பாற்றுகின்றனர் மயக்கவியல் தீவிர சிகிச்சை மருத்துவர்கள்.

மயக்கவியல் மருத்துவர்கள் ( Anaesthetist and Intensivist)என்ற மருத்துவர்கள் இருக்கிறார்களா?
யார் இவர்கள் ? இவர்களின் பணி என்ன??

இந்தியா முழுவதும் கரோனா நோயாளிகளை தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் , கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் - இவர்களே!!

ஆனால், மக்களுக்கு இவர்களைப்பற்றி ஒன்றும் அறியாநிலை நீடிக்கின்றது! ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவு எங்கிருக்கிறது என்றோ , தீவிர சிகிச்சைப்பிரிவில் என்னவிதமான சிகிச்சை என்று அறியாதவர்களை, மக்கள் அறிந்து வைத்திருப்பார்கள்!

ஏனென்றால் இங்கே பணிபுரியும் மருத்துவர்களுக்கு -தொலைக்காட்சியிலோ, விவாத மேடையிலிலோ, தினசரி செய்தியிலோ, பொது ஊடகங்களிலோ வருவதற்கான நேரமோ, விருப்பமோ எப்போதும் இருந்ததில்லை . இந்தப் பணிகளை இவர்கள் தினமும் உண்ணும் உணவு போன்ற மனநிலையிலேயே எண்ணிவிடுகின்றனர்.

“ உறங்குவது போலும் சாக்காடு- உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”.

தீவிர சிகிச்சைப்பிரிவிலும், அறுவை சிகிச்சையின்போதும் வலியறியாமல் உறங்க வைத்து, விழிப்பது போன்ற மறுபிறப்பிற்கு காரணமாக இருப்பவர்கள்- மயக்கவியல் மருத்துவர்களே! அறுவை சிகிச்சையின்போதோ, தீவிர சிகிச்சைப்பிரிவிலோ, செயற்கை சுவாசம் நோயாளிக்கு கிடைக்கும்போதோ, நோயாளியின் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் , நுரையீரல் செயல்பாடு, சிறுநீரக செயல்பாடு இவை அனைத்தையும் தங்கள் கைகளில் அரவணைத்து வைப்பவர்கள்.

‘மரணத்தைப்பற்றிய சிந்தனை இவர்கள் நெஞ்சில் உண்டு, வாழ்க்கை எனும் நம்பிக்கை இவர்கள் செயல்பாட்டில் உண்டு!’. மயக்கவியல் மருத்துவர்கள் , நோயாளிகளின் உடல்நிலை , ஓவ்வொரு நொடி மாறுதலையும் , சரியாகக் கணித்து , அதற்கான மருத்துவத்தை இடைவிடாது கொடுக்க வேண்டும் . நொடிப் பொழுதும் கவனம் சிதறக்கூடாது.



இந்தியாவைப் பொறுத்தவரை, பத்து ஆண்டுகளுக்கு முன்னர்வரை மயக்கவியல் மருத்துவப் பட்ட மேற்படிப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது. பின்னர் மருத்துவ சமுதாய சூழ்நிலையால் , சமூக அங்கீகாரம் சரியாக வழங்கப்படாத சூழ்நிலையில் இந்த வகை படிப்பிற்கான வரவேற்பு குறைய ஆரம்பித்தது. இந்தியா போன்ற மிகவும் மக்கள்தொகை கொண்ட நாட்டில், குறைந்தது 1.5 லட்சம் மயக்கவியல் மருத்துவர்கள் தேவை. ஆனால் தற்போது 55,000 மயக்கவியல் மருத்துவர்களே உள்ளனர்.

புதுடெல்லியில் ஒரு சிறந்த மயக்கவியல் துறைத்தலைவர் கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவில் முன்னின்று சிகிச்சை அளித்ததால் உயிரிழந்தார். உலகெங்கும் பல மயக்கவியல் துறை மருத்துவர்களுக்கு உயிர் ஆபத்து ஏற்பட்ட நிலையிலேயே பணியைத் தொடர்கின்றனர். கரோனா நோயாளிக்கு மூச்சுத்திணறல் ஏற்படும்போது , மிக அருகில் நின்று செயற்கை சுவாசம் அளிக்கும் பணியும் அங்குள்ள அனைத்து உயிர்காக்கும் கருவிகள் பயன்படுத்துவதாலும் - பாதுகாப்பு உடை அணிந்திருந்தாலும் , மயக்கவியல் மருத்துவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

செயற்கை சுவாசக்கருவிகள் , அதிவேக ஆக்சிஜன் கருவி , மனித உறுப்புகளின் செயல்பாடுகளை நுட்பமாகக் கண்டறியும் கருவிகள்- இவை அனைத்தையும் தெளிவுறத் தெரிந்து வைத்திருப்பதால் , நோயாளிகளின் உடல்நிலை மாற்றங்களைக் கண்டறிந்து ,உடனுக்குடன் சிகிச்சை அளிக்கும் , உயிர்காக்கும் பணியினை , மயக்கவியல் மருத்துவர்கள் மூடிய கதவுகளுக்குப் பின் நின்று கடமையை ஆற்றிவருகின்றனர்.

ஆனால், சரியான அங்கீகாரமின்மை, சரியான உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை, பிற மருத்துவர்களின் கட்டளையை ஏற்றுப் பணி செய்யும் நிலை, பல மணிநேரப்பணி சுமை என்ற சூழ்நிலையில் , பலரும் வெளிநாடுகளுக்குழ் சென்றுவிட்டனர் .

அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இதயத்துறை மற்றும் மயக்கவியல் துறையினரின் ஆண்டு வருமானம் சுமார் 3,43,000 டாலர்கள். மற்ற அறுவை சிகிச்சைத் துறையினரின் வருமானம் 3,01,000 டாலர்கள். இதே நமது நாட்டில் - தனியார் அறுவை சிகிச்சை மருத்துவர், ஒரு அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 10.000 என்று வாங்கினால் , மயக்கவியல் மருத்துவருக்கு ரூபாய் 2000 அல்லது 3000 ரூபாய் என்றே வழங்கப்படும் . இதில் அறுவை சிகிச்சையின்போது சிக்கல் ஏற்பட்டால் , மயக்கவியல் மருத்துவர் , அறுவை சிகிச்சை முடிந்த பின் நோயாளியை விட்டுவிட்டுச் செல்ல இயலாது!!

இந்தக் கரோனா காலங்களில் இங்கு - அதிக தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் , மயக்கவியல் மருத்துவர்களும் அவர்களின் பட்டமேற்படிப்பு மாணவர்களுமே!! எந்த தீவிர சிகிச்சைப்பிரிவிலும் இவர்களையே முன்னிறுத்துவதால் ஏற்படும் தொற்று!

நாம் பார்க்கப்போகும் - மௌ(மோ)ன குரு , ஒரு மயக்கவியல் மருத்துவரே! மருத்துவத் தம்பதியினர் -அவர்களின் தனித்தன்மைக்கும் , உழைப்பிற்கும் கவனிக்கத் தகுந்தவர்கள்! எனது ஆசிரியரின் மனைவி மயக்கவியல் மருத்துவர் என்பதாலும் , நண்பர் என்பதாலும் , பலரிடம் இருந்து வேறுபட்ட , புரிந்துகொள்ள கடினமானவராக விளங்குபவர் என்பதாலும் அவரைப்பற்றி எழுத எண்ணினேன் !!

“ மயக்கம் எனது தாயகம், மௌனம் எனது தாய்ழொழி” - கண்ணதாசனின் வரிகளுக்கேற்ப , விளங்கியவர், இப்போது கரோனா காலத்தில் பணி அழுத்தத்தால் நம்பிக்கை சிறிது பழுதாகிய நிலையில் இருக்கிறார் .

திறமையான , வேகமான மருத்துவர் என்று பெயரெடுத்தவர்- சிறு வயதிலிருந்து தேசிய அளவில் விளையாட்டு வீரராக விளங்கினாலும் , படிப்பிலும் படுசுட்டி , பல மொழிகளை அறிந்தவர் , சிறுவயதிலிருந்து இருசக்கர மோட்டார் வண்டி ஓட்டவும் , அதனைப் பழுது பார்க்கும் திறமையும் கொண்டவர் .மற்ற பட்டமேற்படிப்பு துறைகள் இருந்தும் , தான் விருப்பப்பட்ட மயக்கவியல் துறையினையே தேர்ந்தெடுத்தார். படிக்கும் காலத்தில் இவரின் சீனியர் இவருக்கு வைத்தபெயர் ‘ மின்னல்’.

படித்து முடித்தபின் - உலகில் தலைசிறந்த மருத்துவமனையில் , கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை மயக்கவியல் துறையிலும் , தீவிர சிகிச்சைத் துறையிலும் சிறப்புப் பயிற்சி முடித்தார் இந்தியாவிலேயே முதன்முறையாக , அரசு மருத்துவக் கல்லூரியில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தபோது , இவர் போன்று , சவால்களைச் சந்திக்க விருப்பமுடையவர்களுக்கு சரியான வாய்ப்பாக அமைந்தது . முதல் மாற்று அறுவை சிகிச்சைக்கு , வேலூரிலிருந்து மயக்க மருத்துவக் குழு வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர்களால் வரமுடியாமல் போனது . கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தலைமை மருத்துவர் , நமது மின்னல் மருத்துவரைப்பார்த்து , ‘ஆரம்பிக்கலாம்’ என்று கூறிய போது , தனியாக ,மயக்கவியல் இளநிலை மருத்துவரான தன்னை மிகப்பெரிய பொறுப்பை ஓப்படைத்தற்கு பிரதிபலனாக , இரவு பகல் பாராமல் உழைப்பு !!

ஒவ்வொரு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் போதும் , சுமார் தொடர் 48 மணியிலிருந்து 72 மணி நேர வேலை!! அறுவை சிகிச்சைக்கு முன், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தாங்கக் கூடியவரா? என்பதிலிருந்து 8 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சையின்போது , தகுந்த அளவு மயக்கம் கொடுப்பதாகட்டும் , அறுவை சிகிச்சை முடிந்தபின் செயற்கை சுவாசக் கருவியிலிருந்து நோயரை விடுவிக்கும்வரை உடன் இருந்து பணியினை முடித்துவிட்டு , 3 நாட்கள் கழித்தே வீடு திரும்புவார். இதேபோன்று முதல் 28 கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் தன் உழைப்பைக் கொடுத்தார்.ஆனால் இப்படி ஒருவர் பணிபுரிந்தார் என்று அங்கு இருந்தவர்களைத் தவிர வெளியில் யாருக்கும் தெரியாது , அது பற்றி அவர் கவலையும் கொண்டதில்லை.

ஐந்து ஆண்டுகள் கழித்து , தலைமை மருத்துவர் பணியை விட்டு விலகியதால் ,இவரும் , அந்த இடத்தை விட்டு , வேறு ஒரு மருத்துவமனைக்கு சாதாரண மயக்கவியல் மருத்துவராக மாறுதல் வாங்கி தன் பயணத்தைத் தொடர்ந்தார் - நதி என்பது ஓடிக்கொண்டே தானே இருக்கும்? இந்தப் பணியை இவ்வளவு நாள் யார் செய்தார்கள் என்று அரசாங்கம் கேட்டபோது , இவர் பெயர் எதிலும் இடம் பெறவில்லை. அதைப்பற்றி சிறு வருத்தம்கூட அடையவில்லை . (அரசு , தனியார் இரண்டு இடங்களிலும் இந்தத் துறையில் முத்திரை பதித்தவர் , இந்த சமயங்களில் என்ன செய்து கொண்டிருந்தார்?)

படகிலே கரை தாண்டி , கடலில் நீந்துவதும் , காடுகளில் விலங்குகளையும் , பறவைகளையும் படம் எடுப்பதும் - என்ற மோன நிலை அடைந்தவர்க்கு , இதுபோன்ற சாதாரண நிலைகளில் பெரிய நாட்டம் இல்லை . இதுபோன்ற பணியைத் தான் செய்தேன் என்று பிறரிடம் சொன்னதும் இல்லை. நட்பு வட்டாரத்தைத் தவிர இந்த மௌன குருவை அறிந்தவர் , ஒரு சிலரே!

அறுவை அரங்கத்துள் அவர் இருந்தால் ஒரு நம்பிக்கை ஏற்படும் . பட்டமேற்படிப்பு மாணவர்கள் , சிறிது கவனக்குறைவு ஏற்பட்டாலும் , சிக்கல் ஏற்பட்டாலும் - உடனுக்குடன் , அதனைச் சரிசெய்வார். அறுவை சிகிச்சையின்போது மயக்கவியல் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கவனம் சிதறும் போது, “இந்த நோயர் யாருடைய மகனாக இருக்கலாம் , யாருடைய தந்தையாக இருக்கலாம் , யாருடைய அண்ணனாக இருக்கலாம் , யாருடைய கணவராகவும் இருக்கலாம் !இவர் நாளை வீடு திரும்பி வருவார் என்ற நம்பிக்கையில் ஒரு குடும்பம் காத்து நிற்கின்றது , இதை உங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளுங்கள்’’- இதை எப்போதும் கூறுவார் .

தான் கற்றிந்த , துறைசார் ஞானத்தை , தன் மாணவர்களைத் தவிர - வேறு ஒருவருக்கும் வெளிகாட்டாத குணம் படைத்தவர் .

மனதில் பட்டதை பயமின்றி பேசியதால் , துறை மாற்றமும் செய்யப்பட்டார் . பல இன்னல்களுக்கு ஆளாகி , மீண்டு வந்து இந்தியாவிலேயே மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து , உறுப்பு தானம் அதிக அளவில் பெறக்காரணமாக விளங்கினாலும் , இவரின் இரவு பகலான உழைப்பு என்று அவர்களின் மாணவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒருமுறை அறுவை அரங்கத்தினுள் , உயர் பதவியில் இருக்கும் மருத்துவர் ஆடையை மாற்றாமல் , நுழைந்ததால் - அவரை அறுவை அரங்க ஆடையுடன் உள்ளே வருமாறு வேண்டுகோள் விடுத்தது , பெரும் விவாதத்திற்கு உள்ளானது.

மயக்கவியல் மருத்துவம் , அறுவை சிகிச்சை அரங்கு , தீவிர சிகிச்சைப்பிரிவு - இந்த இடங்களில் சமரசத்திற்கான இடமே இல்லை என்று பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை கற்பித்தவர் - இப்போது கரோனா காலத்தில் கலங்கிப் போனது , எனக்கு ஆச்சரியத்தை அளித்தது!

பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு மருத்துவ முறையை அலைபேசியில் விளக்கியவர் , இங்கு பணி இடத்தில் பழைய நம்பிக்கையில்லாமல் இருப்பதைக் கண்டு , அவரின் கணவரும் குழம்பியிருந்தார். மூன்று, நான்கு கிலோ மீட்டர் நீந்தக்கூடியவர் , முழு உடல் பாதுகாப்பு உடை , மற்றும் பிற பாதுகாப்பு உபகரணங்களை இரண்டு மணிநேரத்திற்குப் பிறகு அணிய முடியாமல் , நோயர்க்கு செயற்கை சுவாசக்கருவியினைப் பொருத்த தடுமாறியதாலும் ,வேலைப் பளுவாலும் அதை எண்ணி மனச்சோர்வு அடைந்துள்ளாரோ? என்று நான் கற்பனை செய்து கொண்டேன்!!

தற்சமயம் மயக்கவியல் மருத்துவர்களின் வேலைப் பளுவினை , குறைத்த புதிய மருத்துவ அதிகாரி - இவர்கள் நெஞ்சினில் நம்பிக்கை விதைத்திருப்பார்! கரோனா காலம் - இலையுதிர் காலம் போன்றது , “வரும் காலம் வசந்த காலம் - நாளும் மங்களம்’’ என்ற நம்பிக்கை தளிர்கள் துளிர் விடும் நாள் வரும் .

“ மறப்பும், நினைப்பும், இறப்பும் பிறப்பாம்” - திரு. வி.க.

உறங்கும் போது கவலைகளின்றி மோன நிலை அடைவதும் , செயலற்றும் போவோம் ! விழித்துக் கொள்ளும்போது, மோன நிலை களைந்து , புத்துணர்வுடன் , தன்னம்பிக்கையுடன் வாழ்வைத் தொடருவோம்.

ஒரு இளம் மயக்கவியல் பட்டமேற்படிப்பு மாணவி கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் , எவ்வாறு ஏற்பட்டது என்று கேட்டேன் . கரோனா நோயர் உயிருக்குப் போராடிய போது , நெஞ்சுக்கூட்டினை பல முறை அழுத்தம் கொடுத்தேன் - அவரிடமிருந்து தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்றார் . இறக்கும் தருவாயில் கரோனா நோயருக்கு ஏன் இதைச் செய்தீர்கள் என்று கேட்டேன் . அதற்கு அவர் , இறந்தவர் இருபத்தியெட்டு வயது இளைஞர், யாருடைய மகனாக இருப்பார் , அவர் மீண்டு வருவார் என்று ஒரு குடும்பம் காத்திருக்குமே என்றார்.

அடுத்த முறை மருத்துவமனைக்குச் செல்லும்போது , யார் உங்கள் மயக்கவியல் மருத்துவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள் .

எங்கோ அறுந்து பறந்து உயிரினை இழக்கத் தயாராகும் காற்றாடியின் , நூலினை ஓடிச் சென்று பிடிப்பார் என்ற நம்பிக்கை மீண்டு வரும் !!

மரு. சேகுரா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x