Last Updated : 05 Sep, 2015 08:23 PM

 

Published : 05 Sep 2015 08:23 PM
Last Updated : 05 Sep 2015 08:23 PM

கோகுலாஷ்டமி: குட்டிக் கண்ணனின் குறும்பு

பிருகு முனிவர் எந்த லோகத்திற்கும் எப்போது வேண்டுமானாலும் சென்று வரும் சிறப்பு தகுதி பெற்றவர். மகாவிஷ்ணுவின் வாயிற்காப்போர்களான ஜெய, விஜயர்கள், இந்த பிருகு முனிவரை விஷ்ணு லோகத்திற்குள் அனுமதிக்காத காரணத்தால் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த தேவர்கள் மனித பிறவி எடுக்க வேண்டும் என சபிக்கப்பட்டார்கள்.

இந்த சாபத்தில் இருந்து அவர்கள் விடுதலை கோர, மகாவிஷ்ணுவும் சிபாரிசு செய்தார். சாபத்தை மாற்றி அமைக்கலாமே தவிர நீக்க இயலாது என்றார் பிருகு. அதன்படி விஷ்ணு பக்தர்களாக நூறு மனிதப் பிறவி எடுத்து பின்னர் மீண்டும் விஷ்ணு லோகத்தை அடையலாம் என்றார் அவர்.

நூறு பிறவி பெருமாளை பிரிந்து இருக்க இயலாது, எனவே சாப விமோசனம் அளிக்குமாறு அவர்கள் பிருகு முனிவரை மறுபடியும் வேண்டினர். அவரும் மாற்று உபாயமாக, மூன்று பிறவிகள் பெருமாளை எதிர்த்து, இறுதியில் அவரையே அடையலாம் என்று கூறினார். இதற்கு ஜெய, விஜயர்கள் சம்மதித்தனர்.

இதன்படி, அவர்கள் முதல் பிறவியில் ஹிரண்யாட்ஷசன், ஹிரண்யகசிபு ஆகவும், இரண்டாம் பிறவியில், ராவணன், கும்பகர்ணனாகவும், மூன்றாம் பிறவியில் சிசுபாலன், தந்தவக்த்ரனாகவும் பிறவி எடுத்து, மீண்டும் மகாவிஷ்ணுவின் வைகுந்த லோகத்தை அடைந்தார்கள் என்கிறது ஸ்ரீமத்பாகவதம். இதற்காக பகவான் எடுத்த அவதாரங்கள் நரசிம்மர், ராமர், கிருஷ்ணர். இந்த கிருஷ்ணர்தான் யசோதாவின் கண்மணியான கண்ணன்.

ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்படாத கண்ணன் குறித்த கிராமிய கதைகள் ஏராளம். அதில் ஒன்றில், குட்டிக் கண்ணனின் லீலா விநோதங்களைக் கேள்விப்பட்ட பரமசிவனுக்கு அக்குழந்தையைப் பார்க்க ஆசை ஏற்பட்டது. ஒரு நற்காலைப் பொழுதில், கண்ணனைக் காண மதுரா வருகிறார் சிவன். பிரம்மாவுக்கும் கண்ணனைக் காண ஆசை. அவரும் சிவன் கூடவே வருகிறார். இவர்கள் இருவரும் நந்தகோபன் இல்லக் கதவைத் தட்டுகிறார்கள். விடியற்காலையிலேயே நந்தகோபன் வெளியில் சென்றுவிட்டதால், வாயிற்கதவை யசோதாவே வந்து திறக்கிறாள்.

சின்ன குழந்தை இருக்கும் இல்லத்தில் மென்மையாகத் தானே கதவைத் தட்ட வேண்டும், எதற்காக இப்படி தடதட என்று கதவைத் தட்டுகிறீர்கள் என்றபடியே கோப முகம் காட்டுகிறாளாம் யசோதா. இதனால் சிவனோ குரலில் மென்மையைக் கூட்டிக் கொண்டு, குழந்தைக் கண்ணனைப் பார்க்க வந்தோம் என்றாராம். இதற்குள் அங்கு தவழ்ந்து வந்த கண்ணன் தாயின் புடைவைத் தலைப்பை பிடித்து இழுத்துக் கொண்டே சிணுங்குகின்றான்.

உடனே கண்ணனைத் தூக்கி, வாரி அணைத்துக் கொண்ட யசோதா, சிவனையும், பிரம்மாவையும் பார்த்து, இப்படி பெரிய மீசையும், பல தலைகளோடும் வந்தால் குழந்தை பயந்து கொள்ள மாட்டானா என்று கடிந்தபடியே, திரும்பி உள்ளே செல்ல முனைகிறாள். அப்போது குறும்புச் சிரிப்புடன் இவர்களைப் பார்த்த கண்ணன், பின்னர் வருமாறு சைகை காட்டுகிறான். இந்த கதையைக் கூறும் பிருந்தாவனத்தில் உள்ள பூசாரிகள் இன்றும் இங்குள்ள, நந்தன் இல்லம் என்று கூறும் இடத்தில் உள்ள தூண்களில் வெண்ணெய் வாசம் வீசுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஜோஜோ அச்சுதானந்த, ஜோஜோ முகுந்த என்று இன்றும் மிக மென்மையாகப் பாடியபடியே பக்தர்கள் இங்கு உள்ள தொட்டிலை ஆட்டுவதைக் காணலாம். இந்த மதுராவில்தான் பசு மேய்க்கும் கோபாலச் சிறுவர்களுடன் கண்ணன் சிறுவனாக விளையாடித் திரிந்தான். அப்போது சிறுவர்கள் அனைவரும் கண்ணனிடம் பச்சை குதிரை விளையாட விருப்பம் தெரிவித்தனர்.

ஒரு சிறுவன் குனிந்து இருக்க, மற்றவர்கள் வரிசையில் நின்று ஒவ்வொருவராக ஓடி வந்து, குனிந்தவன் முதுகில் கை வைத்துத் தாண்டி குதித்து மறுபுறம் போக வேண்டும். இதுதான் பச்சைக் குதிரை விளையாட்டு. கிராமபுறங்களிலும், பள்ளிகளிலும் இன்றும் இதனைக் காணலாம்.

அந்த கோபாலச் சிறுவர்களின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தான் கண்ணன். கண்ணனே முதலில் குனிய வேண்டும் என்று சொல்கிறார்கள். கண்ணனும் முதுகு வளையக் குனிந்து நிற்கிறான். சிறுவர்கள் ஒவ்வொருவராக ஓடி வந்து, கண்ணனின் கருநீல முதுகில் கை வைத்துத் தாண்டிச் செல்கிறார்கள்.

இதனை சிவன், பிரம்மா உட்பட வானத்துத் தேவர்கள் காண்கிறார்கள். அவர்களுக்கும் கண்ணனுடன் இந்த விளையாட்டில் பங்கு பெற ஆவல் ஏற்படுகிறது. கண்ணனிடம் அனுமதி கோருகிறார்கள். தெய்வ உருவை மாற்றிக் கொண்டு, சிறுவர்களாக வந்தால் இதில் பங்கு பெறலாம் என்று சொல்கிறான் கண்ணன்.

இதற்கு சம்மதித்த அவர்கள், சிறுவர்களாகிக் கூட்டமாக வருகிறார்கள். இதனைக் கண்ட கண்ணனின் நண்பர் குழாம், இவர்களை யார், எதற்கு இங்கு வருகிறார்கள் எனக் கேட்கிறார்கள். அவர்களும் தாங்கள் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், தாங்களும் விளையாட விரும்புவதாகத் தெரிவித்தனர். இதற்கு சம்மதித்த கண்ணனின் நண்பர்கள், ஒரு கட்டளையையும் இடுகிறார்கள்.

தங்கள் வரிசைக்குக் கடைசியில் போய் நிற்கச் சொல்கிறார்கள். அவர்களும் இக்கட்டளைக்கு ஒப்புக் கொண்டு வரிசையின் பின்னால் போய் நிற்கிறார்கள். இந்த இடையூரால் பாதியில் நின்ற விளையாட்டு மீண்டும் தொடங்கியது. அனைத்து கோபால சிறுவர்களும் ஓடித் தாண்டி முடித்து விடுகிறார்கள்.

இப்போது வானோர் முறை. முதலில் ஓடிவந்தது. சிறுவன் பிரம்மா. கண்ணனின் அருகில் வந்தவுடன், பகவானைத் தாண்டுவதா எனப் பதறிப் போய், தாண்டாமல் சுற்றிக் கொண்டு போய்விடுகிறார். அடுத்து சிறு பிள்ளையாக சிவன் ஓடி வர ஆரம்பிக்கிறார். வேகமாக ஓடி வந்து பிரம்மனைப் போலவே கண்ணனைச் சுற்றிக் கொண்டு போய்விட்டார்.

அடுத்து, இந்திரன். தான் பிரம்மன், சிவன் போல் அல்லாமல், நன்றாக விளையாடி தனது குழு மானத்தைக் காக்க வேண்டும் என மனதுக்குள் தீர்மானித்துக் கொள்கிறானாம். கொஞ்சம் தூரம் பின்னோக்கி நடக்கிறான், பின்னர் அங்கிருந்து முன்னோக்கி ஓடி வருகிறான். வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டே வருகிறான். அந்த வேகத்தைக் கண்டு அதிசயித்த அவர்கள் அனைவரும் இந்திரனையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

சிறுவன் இந்திரனோ, குனிந்து இருக்கும் கண்ணன் அருகில் வந்தவுடன், கண்ணனை விடவும் அதிகமாகக் குனிந்து இரு கைகளையும் கூப்பிக் கொண்டு,

ஸ்ரீயத் காந்தாய கல்யாண நிதயே நிதயேத்தினாம்

ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாசாய மங்களம்

என்று கூறி இந்திரன் குட்டிக் கண்ணனை கை கூப்பி வணங்கி நின்றான். கண்ணனிடம் மிகுந்த அன்பு கொண்ட கோகுல சிறுவர்கள் கைகொட்டிச் சிரித்தார்கள்.

'தான்' என்ற தன்னிலை மறந்து வெளிப்படும் எளிய பக்தியே, கண்ணனை அடைய வழி வகுக்கும் என்பது திண்ணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x