Published : 27 Jun 2020 01:04 PM
Last Updated : 27 Jun 2020 01:04 PM

முதல்வருக்காகத் திறக்கப்பட்டது; கரோனாவுக்காக மூடப்பட்டது!- ஒரே நாளில் உற்சாகமிழந்த ‘ஐ லவ் கோவை’

கோயம்புத்தூர்

கோவை என்றாலே கோனியம்மன் கோயில், நூற்றாண்டுகள் பழமையான மணிக்கூண்டு, மாமன்றக் கூட்டம் நடக்கும் விக்டோரியா ஹால், ரயில்வே ஸ்டேஷன், மருதமலை என்றே சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் அடையாளப்படுத்தப்பட்டு வந்த நிலையில், ‘ஐ லவ் கோவை’ எழுத்துச் சிற்பம் கோவைவாசிகளுக்குப் புதிய அடையாளத்தைத் தந்திருக்கிறது.

கோவை உக்கடம், பெரியகுளம் கரையின் நடைபாதைப் பூங்காவில் எழுப்பப்பட்ட இந்த கலைச் சிற்பத்தைப் பார்க்க கோவை மக்கள் இரண்டு நாட்களாகப் படையெடுக்கிறார்கள். ஆனால், முதல்வருக்காக முதல் தினம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக விடப்பட்ட இந்த இடம் கரோனாவைக் காரணம் காட்டி அடுத்த நாளே மூடப்பட்டதுதான் தற்போது மக்களின் வருத்தம்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பே முதல் நகரப் பட்டியலில் வந்தது கோவை மாநகரம். இங்கு உள்ள 8 குளங்களை அழகுபடுத்தி, நீர்நிலையோரங்களில் வசித்துவரும் குடிசைப் பகுதி மக்களை அங்கிருந்து வெளியேற்றி, பாதுகாப்பான இடத்தில் உருவாக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அவர்களைக் குடியமர்த்தி கோவை நகரையே அழகு கொஞ்சும் நகரமாக மாற்றுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

அந்த வகையில் எட்டு குளங்களுக்குச் செல்லும் பாதைகள் ஒன்றிணைக்கப்பட்டு கொடைக்கானல் ஏரி போல் அழகுபடுத்தப்படுகின்றன. கோவை உக்கடம் பெரியகுளம் ரூ.38 கோடி செலவிலும், வாலாங்குளம் ரூ.23 கோடி செலவிலும் பொலிவாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த இரு குளங்களின் சீரமைக்கப்பட்ட பகுதிகளை இரண்டு தினங்களுக்கு முன்பு மக்களின் பயன்பாட்டுக்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இங்கு பல வண்ணங்களில் 'ஐ லவ் கோவை' என பிரம்மாண்டமாக எழுதிவைக்கப்பட்ட பகுதி ‘செல்ஃபி கார்னர்’ ஆக மாறிவிட்டது. புல்வெளி பூங்கா மற்றும் குளத்தின் அழகிய நீர்தேக்கப் பின்னணியில் இந்த எழுத்துச் சிற்பம் அசத்தலாக உருவாக்கப்பட்டுள்ளது. இங்கே நிற்கவும் செல்ஃபி போட்டோ எடுக்கவும், அவற்றைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொள்ளவும் மக்கள் ஆர்வம் காட்டினர்.

ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரு நாள்கூட நீடிக்கவில்லை. காரணம், திறக்கப்பட்ட வேகத்திலேயே அது மூடப்பட்டதுதான். குளத்தின் கரையில் வாக்கிங் தளம், சைக்கிளிங் பாதை, ஸ்கேட்டிங் தளம், அலங்காரப் பூங்கா, அழகிய நீரூற்று, குழந்தைகள் விளையாடும் பூங்கா போன்றவற்றின் வேலைகள் அரைகுறையாகவே முடிக்கப்பட்டுள்ளன. மற்ற பணிகளைத் தொடர்ந்து ஊழியர்கள் செய்து வருகின்றனர். அதற்குள் அவசர கதியாக இந்தப் பூங்கா மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. ஒருகட்டத்தில் மக்கள் கூட்டம் அப்பணிகளுக்கு இடையூறாக இருப்பதால், இதன் வாயில் கதவருகே ரிப்பன் கட்டி செக்யூரிட்டிகளை அமர வைத்துவிட்டனர் அலுவலர்கள்.

இப்போது இதைக் காண வருபவர்களையும், இங்கு நின்று செல்ஃபி எடுப்பவர்களையும் விரட்டுவதே செக்யூரிட்டிகளுக்கு வேலையாக இருக்கிறது. நாம் புகைப்படம் எடுப்பதையும் தடுத்த அந்த செக்யூரிட்டிகள், “பெரிய தொல்லையா இருக்கு சார். நாளைக்கு இதன் முன்னாடி ‘கரோனா காரணமாகப் பூங்கா மூடப்பட்டுள்ளது’ன்னு போர்டு போடறதா அதிகாரிகள் சொல்லியிருக்காங்க. அதுக்குள்ளே எங்களுக்கு இவ்வளவு இம்சை” என்று அலுத்துக்கொண்டனர்.

இதை நம் அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்த இளைஞர்கள் சிலர், ‘‘வேலைகள் இன்னமும் முடியலைன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு கரோனாவை ஏன் காரணம் சொல்றீங்க? அப்படிக் கரோனாவை சொல்றவங்க எதுக்கு முதல்வர் கையால இதைத் திறந்து வைக்கணும்…? அடுத்த நாளே இப்படி அடைச்சு வைக்கணும். இதுல ஏதோ அரசியல் இருக்கு” என சூடாகப் பேச, எதிரே நின்றிருந்த செக்யூரிட்டியைக் காணவில்லை. அதற்குள் ஒரு கும்பல் வாசலில் கட்டியிருந்த கயிற்றைத் தூக்கிக் குனிந்து உள்ளே சென்று செல்ஃபி எடுக்க ஆரம்பித்துவிட்டது. தொடர்ந்து அவர்களை விரட்ட பத்துக்கும் மேற்பட்ட செக்யூரிட்டி படை வந்து கொண்டிருந்தது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x