Published : 24 Jun 2020 10:27 AM
Last Updated : 24 Jun 2020 10:27 AM

திருக்குறளை ஜனரஞ்சகப்படுத்தும் சிங்கை இளைஞர்கள்!

நம்முடைய வாழ்வின் ஏற்றங்கள், தடுமாற்றங்கள், பிரச்சினைகளில் முடிவெடுக்க திணறும் தருணங்கள்.. இப்படி நம் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உதவுவதற்கு உலகத்தின் பொதுமறையாக மதிக்கப்படும் திருவள்ளுவரின் திருக்குறளுக்கு பெரும்பங்கு இருக்கிறது.

ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும்? ஒரு நாட்டின் அரசன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்? கல்வியின் முக்கியத்துவம் என்ன? மனிதன் வாழ்வதற்கு செல்வம் எந்தளவுக்கு அவசியம்? நாவடக்கம் மனிதனுக்கு எவ்வளவு முக்கியம்? இப்படி உலகம் முழுவதும் வாழும் ஒட்டுமொத்த மனித குலமும் எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான பதில்களை சிந்தித்து தீர்வுகளை முன்வைக்கிறது திருக்குறள்.

நடைமுறை வாழ்க்கையின் ஒவ்வொரு செயலிலும்கூட திருக்குறளை கடைப்பிடிக்கத் தேவையான உத்வேகத்தை ஆர்வத்தை அதிகரிப்பதற்காக சிங்கப்பூரிலிருந்து செயல்படுகிறது KURAL4ALL `அனைவருக்கும் குறள்’ என்னும் பொருளில் அமைந்திருக்கும் (fb.me/kural4all) முகநூல் பக்கம்.

இணைய வாகனத்தில் திருக்குறள்

ரத்தினச் சுருக்கமாக ஏழு சீர்களில் எழுதப்பட்டிருக்கும் திருக்குறளின் பெருமைகளை ஏழு வழிகளில் பிரபலங்கள், குழந்தைகள், இளைஞர்கள் இப்படிப் பலரும் பேசிப் பகிர்வதன்மூலம், திருக்குறள் குறித்த விழிப்புணர்வை இளையோர்களிடமும் குழந்தைகளிடமும் ஏற்படுத்தும் லட்சியத்தோடு இந்த முகநூல் பக்கத்தை கடந்த ஆண்டு தொடங்கியிருக்கின்றனர் உமாசங்கர், கார்த்திக், ஹரிபாபு, சரவணகுமார் ஆகிய இளைஞர்கள். இவர்கள் அனைவருமே தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் இருப்பவர்கள்.

மழலைக் குறள், குறளின் குரல், கதைக் குறள், கவிதைக் குறள், மீம் குறள், குறள் ஒலி எனும் ஏழு விதங்களில் திருக்குறளை இணைய வாகனத்தில் ஊர்வலம் எடுத்துவருவதே தங்களின் நோக்கம் என்கின்றனர் இந்த இளைஞர்கள்.

குழந்தைகள் திருக்குறளைக் கூறி, அதற்கான விளக்கத்தை அளிப்பது, ஒருவர் தனக்குப் பிடித்தமான குறளைக் கூறி அதற்கான விளக்கத்தை அளிப்பது, குறளின் நெறியை கதை, நாடகத்தின் மூலமாக வெளிப்படுத்துவது, குறளின் கருத்துகளை மையப்படுத்திய கவிதைகளை வாசித்து அனுப்புவது,

இளையோர்களால் பெரிதும் விரும்பப்படும் மீம் உருவாக்கங்களை குறளின் கருத்துகளை மையப்படுத்தி செய்வது, குறள் சார்ந்த கருத்துகளையோ விவாதத்தையோ பேசிப் பதிவு செய்து, அதை ஒலியோடையாகவும் இந்த முகநூலில் பதிவு செய்வதற்கான வழிகளை உண்டாக்கியிருக்கின்றது `அனைவருக்கும் குறள்’ அமைப்பு.

முகநூலில் திருக்குறள் பட்டிமன்றம்

முதலாம் ஆண்டு நிறைவையொட்டி குறள் நெறி சார்ந்த சிறப்பு பட்டிமன்றத்தை அண்மையில் நடத்தியிருக்கின்றனர். அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான சரவணகுமார் நம்மிடம் பேசியதிலிருந்து…

“நண்பர்கள் நாங்கள் நால்வரும் தமிழகத்தை சார்ந்தவர்கள். சிங்கையில் பணிபுரிகிறோம். மலேசியாவில் கடந்த ஆண்டு நடந்த "உலக திருக்குறள் மாநாட்டில்" KURAL4ALL முகநூல் பக்கத்திற்கான சிந்தனை துளிர்த்தது.

எங்கள் நோக்கம் திருக்குறளை மற்ற மொழியினருக்கும், இனத்தவருக்கும் கொண்டு செல்வது. என்னுடைய சீன நண்பர்கள் சிலரும் தங்களின் திருக்குறள் கானொலியை பகிர உள்ளனர். இது எங்கள் அமைப்பின் நோக்கத்திற்குக் கிடைத்த வெற்றி.

சென்ற வருடம் "குடும்ப குறள்" போட்டி ஒன்றையும் நடத்தினோம். குடும்ப உறுப்பினர்கள் குழுவாக குறளையும் அதன் பொருளையும் விளக்கினர். மேலும், எங்கள் அமைப்பின் முதலாமாண்டு கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக "இன்றைய காலகட்டத்திற்கு பெரிதும் அவசியமானது… திருக்குறளின் அறமா? பொருளா?" என்னும் தலைப்பில் மூன்று தலைமுறையினர் பங்குபெற்ற சிறப்பு பட்டிமன்றத்தையும் எங்கள் முகநூல் (fb.me/kural4all) நேரடி காணொளி வாயிலாக நடத்தினோம்.

பிரபலங்களின் பங்களிப்பு

சண்முக வடிவேல், டாக்டர் பர்வீன் சுல்தானா, டாக்டர் அப்துல் காதர், அ. கி . வரதராசன், மா.அன்பழகன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் குறள் சிந்தனைகளை எங்களின் முகநூலில் பகிர்ந்திருக்கின்றனர்.

திருக்குறளை அவரவர்க்கு உரிய வகையில் பரப்புவதை கடமையாகக் கொள்ள வேண்டும். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அரசு அலுவலகங்களில், "பல்லவன்" பேருந்தில், தேநீர் கடைகளில் மற்றும் சிலரின் வீட்டு வரவேற்பறையிலும் திருக்குறளை எழுதி வைத்திருப்பார்கள். இன்றும் பலர் திருக்குறள் வகுப்புகள், நிகழ்ச்சிகள் படைப்பது தொடர்கிறது.

சமீபத்தில் நான் படித்த செய்தி, தமிழகத்தில் ஒரு பள்ளி மாணவி தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை தன் வீட்டின் வாயிலுள்ள கரும்பலகையில் எழுதுகிறார். திருவள்ளுவரின் திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்துவது என்பதை அடுத்த தலைமுறையினருக்கு சமூக வலைதளத்தின் வழியாக கடத்துவதற்கான சிறு முயற்சியே எங்களின் இந்த முகநூல் பக்கம்” என்றார் அவரின் ஈற்றடி உதடுகளில் புன்னகையை நழுவவிட்டபடி!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x