Last Updated : 03 Jun, 2020 11:14 AM

 

Published : 03 Jun 2020 11:14 AM
Last Updated : 03 Jun 2020 11:14 AM

இடம் - பொருள் - இலக்கியம்: பீஃப் கவிதைகள் - ஒரு பார்வை 

இந்த பூமி எல்லோருக்கும் பொதுவானது. வானமும், நதியும், பூக்களும் . சமுத்திரமும் அவ்வாறே. ஆனால் மனித மனங்களின் வக்ர உச்சாடனத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் நிலைபெற்றுக் கிடக்கின்றன.

எத்தனை எத்தனைப் பிரிவுகள்?

ரத்தம் எல்லோருக்கும் ஒரே நிறம்தான் என்று பொது முழக்கமிட்டுவிட்டு, எத்தனை பேர் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் பிளவுண்டு கிடக்கின்றனர்?

இதில் கூர்ந்து நோக்கவேண்டியது – சாதியின் பெயரால் மானுடம் மிதிப்பட்டுக் கிடப்பதுதான்.

விழிப்புணர்வூட்டும் எத்தனை வழிகாட்டிகள் தோன்றினாலும் இந்த சீழ் பிடித்த வேற்றுமை உணர்வை எப்படி விரட்டுவது? எல்லா இழிவுகளுக்கும் மனிதன்தான் காரணம். மனிதனே காரணம்.

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மனிதர்களின் எளிய வாழ்வியலைப் பேசும் கவிதைகளின் கூடாரமாக பச்சோந்தியின் பீஃப் கவிதைகள் கண் விழித்திருக்கின்றன.

தமிழ் இலக்கிய உலகில் இதற்கு முன்னால் வேர் முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம் ஆகிய கவிதை தொகுப்புகளின் வழியாக நன்கறியப்பட்டவர் பச்சோந்தி.

‘பேசாப் பொருளைப் பேச துணிந்தேன்’ என்றான் பாரதி. நம் பச்சோந்தியும் இதுவரையில் தமிழ் நிலப்பரப்பில் பேசப்படாத ஒரு பாடு பொருளை நவீனத் தமிழில் பேசியிருக்கிறார்.

இந்தக் கவிதைகளின் ஒவ்வொரு வரிகளிலும் உணவரசியல் பேசப்பட்டுள்ளது. ஓர் உணவுக்குப் பின்னால் இருக்கிற அரசியலை – தமிழ் கவி வெளியில் இவ்வளவு நுட்பமாக இது வரையில் எவரும் கவிதையில் எழுதவில்லை. அதற்காக கவிஞர் பச்சோந்தியை வெகுவாக பாராட்டலாம்.

’ஊரெங்கும் மணக்கும் வறுத்த மாட்டுக்கறியை… எருமைத் தோலில் பறை செய்யும் தாத்தாவை… பயிர் விளைந்த நிலம் அபகரிக்கப்படுவதை எதிர்த்ததால் துப்பாக்கி குறிவைக்கும் தாயின் மார்பை… நில அளவைக் கல்லைக் கண்டு வள்ளிக் கிழங்கின் வேர்களைக் கட்டிக்கொண்டு அழும் அப்பனை… சுட்ட கல் எடுத்து குண்டி துடைப்பவனை… தண்டவாளங்களில் உறைந்த ரத்தத்தை… என இச்சமூகத்திடம் இருந்து எஞ்சி இருப்பதாலும்… எல்லாவற்றில் இருந்தும் இச்சமூகம் எஞ்சியிருப்பதாலும்… எழுதுகிறேன்’ – என்று தன்னுரையில் பச்சோந்தி எழுதியிருப்பது மாதிரி… இத்தொகுப்பின் கவிதைகள் நிஜத்துக்கு அருகில் நின்று பேசுகிறது.

பச்சோந்தியின் கருணை மிகு கவிதைகளை சுதந்திர வெளியாகக் கொண்டு கொம்பு வைத்த, கொம்பில்லாத, கொம்புடைந்த மாடுகள் மேய்கின்றன. ஒரு கவிதையில் இப்படி எழுதுகிறார் பச்சோந்தி:

’இரைப்பை அமில நோயுற்ற மாடு

ஆழமாகவும் வேகமாகவும் மூச்சுவிடுகிறது

அதிகாலை பனியில்போட்ட இரை

உச்சிவெயிலைச் சுமந்து தணிகிறது

நுரைபொங்க விழும் சாணி

பெருகுகிறது

‘’மாவுச்சத்தும் சர்க்கரைச் சத்தும்

அதிகம் உண்டதால் வந்த வினை’’ என்ற மருத்துவன்

‘’இந்த உணவுகளைக் கொடுங்க…’’ என்றபடி

மருந்து சீட்டில் குறித்துத் தருகிறான்

வளைந்த புற்களைப் போன்ற எழுத்துக்களை

தூக்கிக்கொண்டு அலைகிறேன்.’

*** *** ***

பொருட்களை நேசிக்கவும் – மனிதர்களை பயன்படுத்தவும் தயங்காத இந்நாட்களில் இன்னொரு வகை உயிருக்கு தன் அன்பை அள்ளித் தருகிறது இந்தக் கவிதை:

’தாலாட்டு முன்பே கேட்டது

பறையிசைதான்

தாய்ப்பாலின் வாசத்துக்கு முன்பே

நுகர்ந்தது

மாட்டுக்கறியைத்தான்

என் பிள்ளையின் முதுகை வருடுவது போல

மென்மையான கன்றின் காதுமடலை

செல்லமாய் கடித்து வைத்து

என் சோற்றுத் தட்டை அள்ளி அள்ளி ஊட்டுவேன்

அதுவோ தன் சொரசொரக்கும் நாவால்

ஒருமுறை என் புறங்கையையும்

மறுமுறை என் முகத்தையும் நக்கும்.

*** *** ***

சாதிக்கு எத்தனை படிநிலை உண்டென்று எனக்குத் தெரியும். இதில் எந்நிலைக்கும் பொதுவானது… தீண்டாமை. இதன் வேர்கள் எங்கும் விரல் நீட்டிக்கொண்டுதான் இருக்கிறது இப்போதும். தொடர்ந்துகொண்டிருக்கும் தீண்டாமையின் வாலாட்டத்தை… தாண்ட முடியாமல் தாண்டித்தான் ஒரு தலித் மேலெழுந்து வர வேண்டியிருக்கிறது என்பதை இவ்விதம்

பச்சோந்தி எழுதுகிறார்:

‘பள்ளி உணவு இடைவேளையின்போது

நண்பன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான்

அவன் தெருவுக்குள் அனுமதியற்ற

என் செப்பலோசையை

பள்ளியிலேயே கழற்றிவிட்டுத்தான் சென்றேன்

செம்பிலிருந்து பானையை மொண்டு வந்தான்

‘கைப்படாமல் ஊத்து’

உள்ளிருந்து குரல் ஒலிக்கிறது

வறண்ட நிலத்தை முற்றும் நனைத்தது

விரல்களில் ஒழுகிய தாகம்’

*** *** ***

‘ரெங்கசாமி தோட்டத்து நெல்வயலில்

பால் கட்டியிருந்தது

பசி பழுத்த துரையன் மாடு

கள்ளத்தனமாய் மேய்வதைக் கண்டு

கம்பத்தில் கட்டிவைத்து அடித்தார்கள்

அதன் முதுகெங்கும் செங்கரும்பு காய்த்திருந்தது

சைக்கில் செயின் பற்கள் கடித்ததில்

முட்டி ஒழுக ஒழுக

ஊரெல்லையை அடைந்திருந்தார்

ஓடி வந்த துரையன்.’

இந்தக் கவிதை - ஆண்டைகளின் வெள்ளாமையை மேய்ந்துவிட்டால் அம்மாட்டுக்கு கிடைக்கும் பூசையும் புண்ணும் அதனை மேய்த்த மனிதருக்கும் கிடைக்கும் என்பது பல கிராமங்களில் சொல்லப்படாத ஈரக்கதை. இதை நிஜமூட்டுகிறது .

*** ***

ஒரு கவிதை புத்தகம்… என்கிற வகையில் இப்புத்தகத்தை வாசித்துவிட்டு நகர்ந்துவிட முடியவில்லை. இதன் உள்ளடக்கம் நூற்றாண்டுகளின் சமூக அழுகலை உள்நுழைந்து விசாரணை செய்கிறது.

கடின உழைப்பையும் பயணங்களையும் மேற்கொண்டு… தரவுகளை சேகரிக்க நெடிய நேரங்களை கரைத்து… இத்தொகுதியில் இருக்கும் அனைத்து கவிதைகளும் வரையப்பட்டுள்ளன.

கப்பல்களில் பயன்படுத்தும் வாசர்கள் அனைத்தும் மாட்டுக்கொம்பால் ஆனவை… கப்பல் மிதப்பதற்கு இதுவும் காரணம் என்று பச்சோந்தி தருகிற மேலதிக தகவல் புதிது.

ரெடிமேட் உணவுகளின் மிருது தன்மைக்காக… அதில் மாட்டின் கொழுப்பு… கலக்கப்படுகிறது என்கிற கசக்கும் உண்மையை கக்குகிறார்.

பச்சோந்தியின் இத்தொகுப்பு – கடந்த ஓராண்டில் வந்த கவிதை தொகுப்புகளில் மிக மிக முக்கியமானது மட்டுமில்லை – காலத்தின் அவசியமும் கூட.

பீஃப் கவிதைகள் - பச்சோந்தி
நீலம் வெளியீடு
திருவல்லிக்கேணி,
சென்னை-14.
தொடர்புக்கு: 99942 04266
விலை: ரூ.150

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x